Monday, April 15, 2013

சாதாரண குடிமகனை பாட்டுடைத் தலைவனாக கொண்டு எழுதப்பட்ட காவியம் சிலப்பதிகாரம்

சாதாரண குடிமகனை பாட்டுடைத் தலைவனாக கொண்டு எழுதப்பட்ட காவியம் சிலப்பதிகாரம்

இன்பியலும் துன்பியலும் கலந்து இளங்கோவடிகள் உருவாக்கிய காலத்தால் அழியாத படைப்பு சிலம்பு - அதிகாரம் என்ற இரு சொற்களால் ஆனது சிலப்பதிகாரம்.
சிலம்பு காரணமாக விளைந்த கதை ஆனதால் சிலப்பதிகாரம் ஆயிற்று. இந்நூல் தமிழில் எழுதப்பட்ட ஜம்பெருங் காப்பியங்களில் ஒன்று. இது பாட்டிடையிட்ட தொடர் நிலைச் செய்யுள் எனவும் வழங்கப்படுகிறது. இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றினையும் காணலாம்.
கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுத்தப்பட்டது என்பர். ஏனைய நூல்கள் அரசனையோ தெய்வங்களையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டிருக்க சிலப்பதிகாரம் கோவலன் என்ற குடிமகனைப் பாட்டுடைத் தலைவனானக் கொண்டதால் இதனை ‘குடிமக்கள் காப்பியம்’ என்றும் கூறுவர். இன்பியலும் துன்பியலும் கலந்து எழுதப்பட்ட இந்நூலை இயற்றியவர் இளங்கோ அடிகள் என்பவராவார். இவர் புகழ் பெற்ற சேரமன்னன் செங்குட்டுவனுடைய தம்பி எனக் கருதப்படுகின்றது.
சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டை காப்பியங்கள் நற்றிணைப் பாடல் கண்ணகி வரலாற்றைக் குறிப்பிடுகிறது. மலையாள மொழி கி.பி. ஆறாம் நூற்றாண்டில் தோன்றியது. மணிமேகலை வஞ்சி மூதூர் சென்று பல்வேறு சமயங்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தது மலையாளத்தில் அன்று. தமிழில் ஆகும். எனவே மணிமேகலை காலம் ஆறாம் நூற்றாண்டுக்கு முந்தியது.
புகார் நகரத்தில் சிவன்கோயில் இருந்ததாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. 276 ஊர்களிலிருந்து சிவன் கோயில்களைக் குறிப்பிடும் தேவாரம் இதனைக் குறிப்பிடவில்லை. எனவே, புகார் நகரைக் கடல் கொண்டது. தேவாரம் தோன்றிய 7 ஆம் நூற்றாண்டுக்கு முந்தியது.
புகார் நகரத்தில் பலராமனுக்கும், கண்ணனுக்கும் தனித்தனிக் கோயில்கள் இருந்ததைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. 108 திருப்திகளைக் காட்டும் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூலில் இந்தக் கோயில் பற்றிய செய்தியே இல்லை. இதனாலும் சிலப்பதிகாரம் 7 ஆம் நூற்றாண்டுக்கு முந்தியது என்பது உறுதியாகிறது.
இளங்கோவடிகள் இளவரசுப் பட்டத்தை விடுத்துத் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். தன் அண்ணன் செங்குட்டுவனுடன் மலை வளம் காணச் சென்றபோது கண்ணகியைப் பற்றிய செய்தியை சீத்தலைச் சாத்தனார் எனும் புலவர் மூலமாக அறிந்தார் இளங்கோ. கண்ணகியின் கற்பொழுக்கமும், பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் நேர்மையும் அரசியல் நடுநிலைமையும் அவரை மிகவும் கவர, மூவேந்தர்களுக்கும் உரிய தமிழின் உயர் காவியமாக சிலப்பதிகாரத்தை கவிபுனைந்தார் அவர்.
சிலப்பதிகாரம் கோவலன், கண்ணகி மற்றும் கோவலனின் துணைவி மாதவி ஆகியோரது வரலாற்றை விவரிக்கின்றது.
இதன் இரட்டைக் காப்பியமாகத் திகழும் மணிமேகலை, ஆடலரசி மாதவியின் மகள் மணிமேகலையின் வரலாற்றை உரைக்கும் காவியமாகும். இதனை எழுதியவர் கூலவாணிகள் சீத்தலைச் சாத்தனார் எனும் புலவர் ஆவார்.
சிலப்பதிகாரமானது காப்பியங் களுக்கான இலக்கண அமைப்பு அனைத்தும் பொருந்தி வரும்படி இயற்றப்பட்ட காப்பியமாகும். காவிரி, வைகை முதலான ஆறுகளும் புகார், உறந்தை, மதுரை, வஞ்சி முதலான நகரங்களும், குரவைக் கூத்து முதலிய கூத்துகளும், திருமால் முதலிய தெய்வங்களும், அடர்ந்து வளர்ந்த பெருங்காடுகளும் இந்நூலின் நன்கு வர்ணிக்கப்பட்டுள்ளன.
அக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கை பற்றிய செய்திகள் இதில் இடம் பெற்றுள்ளன. சிலப்பதிகாரப்பதிகம் இதனை உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் எனக் குறிக்கின்றது. இடையிடையே உரைகளும் வரிப்பாட்டுகளும் கலந்து வந்துள்ளன. பொருட் செறிவு, தெளிவான இனிய எளிய நடையுடன், அணிகள் பல பொதிந்த தமிழின் வளமான நூலாகும். இறையனார் களவியல் உரைகாரர், இளம்பூரனார் போன்ற உரையாசிரியர்களால் மேற்கோளாக எடுத்தாளப்பட்ட பெருமை உடையது.
தமிழறிஞர்களால் மிகுதியாக ஆய்வுக்கு உட்பட்ட நூல் இதுவேயாகும். சிலப்பதிகாரம் நூல் முகத்தில் உரைப்பாட்டினையும், கானல் வரி, வேட்டுவ வரி, ஆற்றுவரி, ஊசல்வரி, கண்புகுவரி என்னும் இசைப்பாட்டுகளும் நிறைந்தது. புகார் காண்டம், மதுரைக் காண்டம் மற்றும் வஞ்சிக் காண்டம் எனும் உட்பகுப்புகளால் பிரிக்கப்பட்டுள்ளது.
காண்டங்களாவன:
புகார் காண்டம், மதுரை காண்டம், வஞ்சிக் காண்டம் சிலப்பதிகாரத்தின் கதை இதுதான்.
காவிரிப்பூம்பட்டினத்து பெரு வணிகன் மாசாத்துவானின் மகன் கோவலன். இவன் கலையுணர்வும், வறியோர்க்கு உதவும் நற்பண்பும் மிக்கவன். காவிரிப்பூம்பட்டினத்துப் பெருவணிகன் மாநாய்கனின் மகள் கண்ணகி. இவள் திருமகள் போன்ற அழகும், அழகிய பெண்கள் போற்றும் பெருங்குணச்சிறப்பும், கற்புத்திறமும் கொண்டவள்.
இவ்விருவரும் மனையறம் பூண்டு, இன்புற்று வாழ்ந்தனர். கோவலன் ஆடலரசி மாதவியை விரும்பிக் கண்ணகியை விட்டுப் பிரிந்தான். அவன் மாதவி இல்லத்திலேயே தங்கித் தன் செல்வத்தையெல்லாம் இழந்தான். மாதவி இந்திர விழாவில் கானல் வரிப் பாடலைப் பாடினாள். பாடலின் பொருளைத் தவறாகப் புரிந்து கொண்ட கோவலன், மாதவியை விட்டுப் பிரிந்தான். பிரிந்தவன் தன் மனைவி கண்ணகியிடம் சென்றான். தான் இழந்த செல்வத்தை ஈட்ட எண்ணினான். வணிகம் செய்தற் பொருட்டுக் கண்ணகியுடன் மதுரைக்குச் சென்றான்.
அவர்களுக்கு வழித்துணையாகக் கவுந்தியடிகள் என்னும் சமணத் துறவி சென்றார். அவர் மதுரை நகர்ப்புறத்தில் மாதரி என்னும் இடைக்குல மூதாட்டியிடம் அவ்விருவரையும் அடைக்கலப்படுத்தினார். கோவலன் சிலம்பு விற்று வர மதுரை நகரத் கடை வீதிக்குச் சென்றான். விலை மதிப்பற்ற காற்சிலம்பு ஒன்றைக் கோவலன் விற்பதைப் பாண்டிய மன்னனின் பொற்கொல்லன் அறிந்தான்.
பாண்டிமாதேவியின் காற்சிலம்பைக் களவாடிய பொற்கொல்லன், பொய்யான பழியைக் கோவலன் மேல் சுமத்தினான். அதனை ஆராய்ந்து பாராத மன்னன் அவனைக் கொன்று, சிலம்பைக் கொணர்க என்று ஆணையிட்டான். கோவலன் கொலை செய்யப்பட்ட செய்தியை மாதரி மூலம் அறிந்த கண்ணகி பெருந்துயருற்றாள். அவள் தன் கணவன் கள்வன் அல்லன் என்பதை மன்னனுக்கும் உலகோர்க்கும் உணர்த்த எண்ணினாள்.
மன்னனின் அனுமதியோடு, வாயிற்காவலன், கண்ணகியை பாண்டிய மன்னனிடம் அழைத்துச் சென்றான். மன்னன் கண்ணகியை நோக்கி “நீரொழுகும் கண்களுடன் எம்முன் வந்து நிற்கும் நீ, யார்?” என வினவினான்.
கண்ணகி மன்னனை நோக்கி “ஆராய்ந்து நீதி வழங்காத மன்னனே! என உரைக்கத் தொடங்கினாள்.
“புறாவின் துன்பத்தைப் போக்கிய சிபி மன்னனும் தன் அரண்மனை மணி ஒலித்ததைக் கேட்டுப் பசுவின் துயர் அறிந்து தன் ஒப்பற்ற மகனையே தேர்ச்சக்கரத்திலிட்டுக் கொன்ற மனுநீதிச் சோழனும் வாழ்ந்த, பெரும்புகழுடைய புகார் நகரமே, யான் பிறந்த ஊர். அப்புகார் நகரில் பழியில்லாத சிறப்பினையுடைய புகழ்மிக்க குடியில் தோன்றிய மாசத்துவான் மகனை மணம் புரிந்தேன்.
வீரக்கழலணிந்த மன்னனே! ஊழ்வினைப் பயனால் வாழ்வதற்காக நின் மதுரை நகரத்திற்கு வந்து, என் காற்சிலம்பினை விற்க முயன்று, உன்னால் கொலை செய்யப்பட்ட கோவலன் மனைவி, நான். கண்ணகி என்பது என் பெயர்” என்று கூறினார்.
பாண்டிய மன்னன் கண்ணகியிடம்” கள்வனைக் கொலை செய்தல் கொடுங்கோலன்று. அதுவே அரச நீதி என்று கூறினான்.
அதற்குக் கண்ணகி “அறநெறியில் செல்லாத அரசனே! என் காற்சிலப்பு, மாணிக்கப் பரல்களைக் கொண்டது” என்றாள். அதற்கு அரசன் “நீ கூறியது, நல்லதே! எம்முடைச் சிலம்பின் பரல்கள் முத்துகளே” என்றான்.
கோவலனிடமிருந்து கைப்பற்றிய சிலம்பைத் தருவித்து, அவள் முன் வைத்தான். வைத்த அச்சிலம்பினைக் கண்ணகி எடுத்து ஓங்கி உடைத்தாள். அதிலிருந்து வெளிப்பட்ட மாணிக்கப்பரல் ஒன்று பாண்டிய மன்னனின் உதட்டில் பட்டுத் தெறித்தது. அம்மாணிக்கப் பரல்களைக் கண்ட பாண்டிய மன்னன் தாழ்வுற்ற குடையனாய், சோர்வுற்ற செங்கோலனாய், “பொன் தொழில் செய்யும் கொல்லனின் பொய்யுரை கேட்டு, அறநெறி தவறிய, நானோ அரசன்! நானே கள்வன். அறந்தவறாது குடிமக்களைக் காக்கும் தொன்மையாட்சி என் முதல் தவறியது. என் வாழ்நாள் அழியட்டும்” என்றவாறே மயங்கி வீழ்ந்தான்.
மன்னனின் மனைவி உள்ளங்கலங்கி, உடல் நடுங்கி, கணவனை இழந்த மகளிர்க்கு, எவ்விதத்திலும் ஆறுதல் கூற இயலாது என்று கூறித் தன் கணவனின் திருவடிகளை வணங்கி நிலத்தில் வீழ்ந்து இறந்தாள்.
புகார்க்காண்டம் 10 காதைகளைக் கொண்டது. அவையாவன:
1. மங்கல வாழ்த்துப் பாடல்
2. மனையறம் படுத்த காதை.
3. அரங்கேற்று காதை.
4. அந்தி மாலைச் சிறப்பு செய் காதை
5. இந்திர விழவு ஊர் எடுத்த காதை
6. கடல் ஆடு காதை.
7. கானல் வரி
8. பேனிற்காதை
9. கனாத் திறம் உரைத்த காதை.
10. நாடு கண் காதை
மங்கல வாழ்த்துப் பாடல்:
புகார் நகரிலே, கோவலனின் தந்தையான மாசாத்துவானும், கண்ணகியின் தந்தையான மாநாய்கனும், தம் மக்கள் இருவருக்கும் மணஞ்செய்வித்த சிறப்பும், மணமகளை மாதர்கள் பலர் சூழ்ந்து நின்று மங்கல வாழ்த்து உரைத்தலும், இப்பகுதியில் கூறப்பட்டுள்ளது. திருமணத்தின் போது கண்ணகிக்கு வயது பன்னிரண்டாண்டு ஆகும். கோவலன் திருமணத்தின் போது பதினாறு ஆண்டு பருவத்தை உடையவன்.
மனையறம் படுத்த காதை:
திருமணத்தால் ஒன்றுபட்ட கோவலனும் கண்ணகியும் தம்முட்கூடி இல்லறம் நிகழ்த்திய செய்திகள் பலவும் இதன்கண் கூறப்படுகின்றன. சில ஆண்டுகளாக அவர்களின் இல்வாழ்வும் இன்பமுடனேயே கழிந்தது என்பதனையும் அவர்களைத் தனி மனைக்கண் பெற்றோர் இருத்தியதையும், அவர்கள் தனி குடும்பமாக வாழத்தொடங்கியதையும் இக்காதை கூறுகிறது.
அரங்கேற்று காதை:
மாதவி என்னும் ஆடல் மகள் சோழன் முன்னர் தன் நாட்டியத் திறம் எல்லாம் தோன்ற ஆடிக் காட்டினாள். அவள் தலையரங்கேறித் தலைக்கோலம் பெற்றாள். அவள் ஆடலைக் கண்டு மகிழ்ந்த மன்னன் அந்நாட்டு நடைமுறையான இயல்பிலிருந்து வழுவாமல் அரசனின் பச்சை மாலையையும், ‘தலைக்கோலி’ என்ற பெயரையும் மாதவி பெற்றாள்.
தலையரங்கிலே ஏறி ஆடிக்காட்டி ‘நாடக கணிகையர்க்குத் தலைவரிசை என நூல்கள் விதித்த முறைமையின்படி ஆயிரத்து எட்டுக் கழஞ்சுப் பொன்னை ஒருநாள் முறையாகப் பெறுபவள், என்ற பெருமையையும் பெற்றவள். நகரத்து இளைஞர்கள் பலரும் திரிந்து கொண்டிருக்கிற பெருந்தெருவிலே கூனி, மாதவியின் மாலையை விலை கூறுவாள். கோவலன் அதற்குரிய ஆயிரம் பொன்னையும் தந்து வாங்கினான். கூனியுடனே, தானும் மாதவியின் மணமனைக்குச் சென்றான். குற்றமற்ற சிறப்பினையுடைய தன் மனைவியின் நினைவை தன் உள்ளத்திற் சிறிதும் கொள்ளாதவனாகி, தன் வீட்டை, கண்ணகியை அறவே மறந்து மாதவி வீட்டினிலேயே மாலை தங்குவானுமாயினன் என்பதைக் கூறும் பகுதியே அரங்கேற்றுக் காதை.
அந்தி மாலைச் சிறப்புச்செய் காதை:
மாலை நேரத்திலே, தம்முள் கூடினார். இன்பத்திலே திளைத்து மயங்குவதும், பிரிந்தவர் அளவு கடந்த வேதனையால் நைந்து அயர்வதும் இயல்பு ஆகும். கோவலனோடு கூடியிருந்த மாதவியும், அவனால் கைவிடப்பட்ட கண்ணகியும், ஒருநாள் மாலை வேளையிலே இருந்த இருவேறு மயக்க நிலைகளையும் விளக்கிக்காட்டி, மாலைக்காலத்தின் தகைமையை இப்பகுதியில் கூறுகின்றனர். தம்மோடு கலந்து உறவாடுபவர்களுக்கு நிழலாகியும், தம்முடன் கூடாது பிரிந்து வாழ்பவர்களுக்கு வெய்யதாகவும் காவலனின் வெண்கொற்றக் குடை போல முழுநிலவும் வானிலே விளங்கிற்று.
வானத்திலே ஊர்ந்து செல்லும் நிலவு தான் கதிர்விரிந்து அல்லிப் பூக்களை மலர்விக்கும் இரவுப் பொழுதிலே, மாதவிக்கும் கண்ணகிக்கும் அவ்வாறு நிழலாகவும் வெய்யதாகவும் விளங்கி, அவர்களை முறையே இன்பத்திலும் துன்பத்திலும் ஆழ்த்திற்று என்பது இக்காதை கூறும் செய்தியாகும்.
இந்திர விழாவு ஊர் எடுத்த காதை:
புகார் நகரின் அமைப்பும், அங்கு வாழ்ந்த பல்வேறு வகையினரான குடியினர்களும், அவ்வூர் இந்திர விழாக் கொண்டாடிய சிறப்பும் பற்றிச் சொல்லும் சிறந்த பகுதி இது. புகார் நகரின் மருவூர்ப் பாக்கம், பட்டினப் பாக்கம் ஆகிய இடங்களின் சிறப்பையும், ஐவகை மன்றங்களில் அரிய பல நிகழ்ச்சிகளையும் எடுத்துரைக்கின்றது. (தொடரும்)