Tuesday, March 12, 2019

பொலித்தீன் , பிளாஸ்ரிக் பொருட்களின் தீமைகள்



பொலித்தீன் , பிளாஸ்ரிக் பொருட்களின் தீமைகள்
உலகளாவிய ரீதியில் பொலித்தீன் , பிளாஸ்ரிக் பொருட்களின் தீமைகள் பற்றி உரத்துப் பேசப்படுகின்ற இன்றைய காலகட்டத்தில் அதனை கட்டுப்படுத்துவது பற்றி எமது தேசமும் அதீத பிரயத்தனம் எடுப்பதனை கண்டு கொள்ள முடிகின்றது. இந்த முயற்சி ஆரோக்கியமானதாக பார்க்கப்படுதல் வேண்டும். எனினும் இதில் பயணிக்க வேண்டியது நெடுந்தூரம் என்பது குறிப்பிடத்தக்கது.

பொலித்தீன் , பிளாஸ்ரிக் கடந்த அரை நூற்றாண்டாக எமது மக்களின் வாழ்வுடன் பின்னிப்பிணைந்துள்ள நிலையில் அதிலிருந்து இலகுவாக விடுபட முடியாது. மனிதனில் இருந்து இவற்றைப் பிரிக்க முடியாமைக்கான மிக முக்கிய காரணி இலகு தன்மையும் சௌகரியமுமாகும். பிளாஸ்ரிக்கின் வருகை மனிதனுக்கு நன்மைகளைக் கொண்டு வந்த போதிலும் அவற்றின் கழிவகற்றலால் ஏற்படும் பாரிய பாரிய பிரச்சினைகள் பற்றி அறிந்து கொள்வதில்லை அல்லது அலட்சியமாக இருந்து விடுகின்றோம்.

பொலித்தீன்- பிளாஸ்ரிக் தடுப்பு நடவடிக்கைகளில் பாடசாலைகளின் பங்கு அளப்பரியது. பிள்ளைகளை பாடசாலை அனுமதிக்கும் போதே பிளாஸ்ரிக் பாவனையின் தீமைகள் பற்றியும் அதற்கு மாற்றீடாக உபயோகிக்கக் கூடிய பொருட்கள் பற்றியும் தீவிரமாக சொல்லப்படுவதனை அவதானிக்க முடிகின்றது. அநேகமான பாசாலைகளில் நிறுவப்பட்டுள்ள உணவகங்களில் பொலித்தீன் பாவனை இல்லாமலாக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. எனவே இது விடயத்தில் பெற்றோர்களின் ஒத்துழைப்பு மிக அவசியமானது.
போதை ஒழிப்பு தேசிய ரீதியாக எழுச்சி பெற்றுள்ள இத்தறுவாயில் பொலித்தீன் - பிளாஸ்ரிக் பொருட்கள் பற்றியும் பேசுவதும் அவசியம்.

பொலித்தீன் - பிளாஸ்ரிக் கழிவுகள் சிறுசிறு துகள்களாக மாற்றம் கண்ட போதிலும் அது உக்கி அழிவதில்லை. இதனால் சூழலுக்கும் காலநிலைக்கும் ஆரோக்கியத்துக்கும் அச்சுறுத்தலாகின்றது. பிளாஸ்டிக் - பொலித்தீன் கழிவுகள் நிலத்துக்கும் நிலத்தடி நீருக்கும் கடல் நீருக்கும் மாத்திரமின்றி வளிமண்டலத்துக்கும் பாரிய அச்சுறுத்தலாக உள்ளன. இதனால் மனிதர் மாத்திரமின்றி விலங்குகள் கடல்வாழ் உயிரினங்கள் என அனைத்துக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது. தாவரங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. சூழலில் குறிப்பாக நிலத்தில் வாழுகின்ற நுண்ணுயிர்க் கிருமிகளை கூட விட்டு இக்கழிவுகள் விட்டு வைக்கவில்லை.

மனித வாழ்வுக்கு இன்றியமையாதது காற்று நீர் உணவு உறையுள் என்பவையாகும். மனித வாழ்வை இலகுபடுத்த உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்ரிக் பொலித்தீன் என்பன இவை அனைத்தையும் மாசுபடுத்தி மனித வாழ்வில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. பிளாஸ்ரிக் பொலித்தீன் என்பன சிறுசிறு துகள்களாகி கண்ணுக்குப் புலப்படாத மைக்குரோன் அளவை விடவும் சிறியதான நனோ அளவீடுகளில் சூழல் எங்கும் பரவிக் கலந்து பல வழிகளில் மனித உடலை அடைந்து கேடு விளைவிக்கின்றன.

நாம் பாவித்து விட்டு கழிக்கும் பிளாஸ்ரிக் பொலித்தீன் கழிவுகள் மீள்சுழற்சிக்கு கொண்டு வரப்படுவது மிகவும் சொற்பமே ஆகும். மண்ணில் புதைக்கப்படுகின்ற இக்கழிவுகள் உக்கி அழிவதில்லை என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. பல்லாண்டு காலங்களுக்கு முன்னர் நமது நிலங்களுக்குள் புதைக்கப்பட்ட பிளாஸ்ரிக் - பொலித்தீன்களை ஏதோ ஒரு தேவைக்காக நிலத்தை கிளறுகின்றபோது கண்டெடுக்க முடிகின்றது.
அதேவேளை அவற்றில் ஒரு பகுதி சிறு துகள்களாகி மண்ணில் இருந்து மழைநீருடன் நிலத்தடி நீரோடு இணைகின்றது. பிளாஸ்ரிக் பொலித்தீன் கழிவுகள் எரிக்கப்படும் போது அவை அதிக மாற்றமின்றி வளிமண்டலத்தில் சேர்கின்றன. இத்துகள்களும் மழைநீரோடு கலந்து நிலத்தை வந்தடைந்து கீழிறங்கி நிலத்தடி நீரை மாசுபடுத்துகின்றன. இதனால் நிலத்தடி நீர் மாசடைந்து எமது குடிநீரும் மாசடைகிறது.

மழையுடன் கலந்து வரும் இதன் துகள்கள் ஆற்றுநீரையும் நீர்த் தேக்கங்களையும் மாசுபடுத்துகின்றன. இதனால் ஆற்றிலிருந்து பெறப்படும் குடிநீரும் மாசடைந்தே காணப்படுகின்றது. வடிகட்டலையும் சுத்திகரிப்பையும் தூண்டும் அளவிற்கும் பிளாஸ்ரிக் துகள்கள் மிகச் சிறியனவாக உள்ளமையால் குடிநீர் மாசடைவதைத் தவிர்க்க முடியவில்லை.
தற்போது வாழ்கின்ற முதியவர்கள் பலர்இதாங்கள் ஆரோக்கியத்துடன் வாழ்வதாக பெருமையுடன் கூறிக் கொள்வர்.

அதன் உண்மைநிலை என்னவென்றால் அப்போதைய காலத்தில் சூழலோ நீரோ இப்போது மாசுபட்டிருப்பது போல் இருந்ததில்லை என்பதே உண்மை.
அன்று கிணற்று நீர் பாதுகாக்கப்பட்டு குடிநீராக பயன்படுத்தப்பட்டது. இன்று அப்படியல்ல. சூழல் மிகமோசமாக மாசுபட்டுள்ளது. கொதிக்க வைப்பதாலோ வடிகட்டிகள் மூலம் வடிகட்டுவதனாலோ பிளாஸ்ரிக் துகள்களை முழுமையாக அகற்ற முடியாது.

உலகளாவிய ரீதியில் இன்று குடிநீரில் 80வீதத்துக்கு மேற்பட்ட இடங்களில் பிளாஸ்ரிக் மாசுகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகில் பிளாஸ்ரிக் துகள்களால் மாசுபட்ட குடிநீர் நிறைந்த இடங்களாக அமெரிக்கா முதலிடத்திலும் இந்தியா இரண்டாமிடத்திலும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

பிளாஸ்ரிக் பொலித்தீன் பாவனையினால் ஏற்படும் நோய்கள் பற்றியும் அறிவதும் அவசியம்.

பிளாஸ்ரிக் துகள்கள் மனித உடலை தண்ணீர் உணவு சுவாசம் என்பவற்றின் ஊடாக வந்தடைகின்றன. அதிலும் நீருடன் உடலில் கலக்கும் துகள்களே அதிகம் என்று அறியப்பட்டுள்ளது. பிளாஸ்ரிக் துகள்கள் மிகச் சிறிய அளவில் இருப்பதனால் இவை சமிபாட்டுத்தொகுதியில் அகத்துறிஞ்சப்பட்டு இரத்தச் சுற்றுடன் கலந்து சகல உறுப்புக்களையும் சென்றடைகின்றன.

கலச் சுவர்களையும் இவை ஊடறுத்துச் செல்லக் கூடியதாக இருப்பதால் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இவற்றை உடலை விட்டு வெளியேற்றவும் முடியாமல் ஈரல் சிறுநீரகம் என்பன சிரமத்தை எதிர்நோக்குகின்றன. இதனால் இத்துகள்களின் படிவால் இந்த உறுப்புக்கள் மெதுமெதுவாக பாதிப்புக்குள்ளாகின்றன. காலவோட்டத்தில் இவற்றின் செயல்திறன் பாதிப்புக்குள்ளாவதுடன் இறுதியில் இவ்வுறுப்புக்கள் செயலிழக்கும் நிலைமை உருவாகிறது என்கின்றனர் நிபுணத்துவ வைத்தியர்கள். பிளாஸ்ரிக் பொலித்தீன் என்பவற்றால் ஏற்படுகின்ற மிக மிக்கியமான நோய் புற்றுநோய் ஆகும். இன்று நாம் டெங்கு பரவுதலைப் பற்றி அச்சமடைவதைப் போல இதற்கு அஞ்சுவதில்லை.

எனினும் புற்றுநோய் ஏற்படுத்தும் மரணங்கள் டெங்கு மரணங்களை விட பல மடங்காகும். சூழலில் சேரும் பிளாஸ்ரிக் கழிவுகள் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துகின்றன. பிளாஸ்ரிக் துகள்கள் கருவிலுள்ள குழந்தைகள் குறைபாட்டுடன் பிறப்பதற்கு காரணமாகின்றன இதனை கருத்தில் கொண்டு நாம் செயற்பட வேண்டும்

நன்றி