Sunday, March 31, 2019

பாரதியின் பாடல்களுக்கு பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்றுக் கொடுத்த பெருமகன்


பாரதியின் பாடல்களுக்கு பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்றுக் கொடுத்த பெருமகன்


'கலை அறிவியல் மெய்ஞானம் மூன்றும் ஒருங்கிணையும் கல்வியே முழுமையான கல்வி' என்பது அடிகளாரின் கருத்தாகும்.

1925இல் இலங்கை திரும்பிய அடிகளார் கல்லடி உப்போடையில் சிவானந்தா வித்தியாலயமும் காரைதீவில் சாரதா மகளிர் கல்லூரியும் மற்றும் ஆதரவற்றோர் மாணவர்இமாணவியர் இல்லங்களும் நிறுவி அளப்பெரிய கல்வித் தொண்டு செய்தார். பின்பு யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா வித்தியாலயத்தையும் திருகோணமலை இந்துக் கல்லூரியையும் இராமகிருஷ்ண சங்கத்தோடு இணைத்ததோடு நில்லாது மலையகத்திலும் பாடசாலைகள் அமைத்து சகலருக்கும் சிறந்த கல்வித் தொண்டாற்றினார். மேலும் இராமகிருஷ்ணமிஷன் மேற்கொள்ளும் கல்விப் பணிகளை ஒருங்கமைத்தார்.

1931இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதல் தமிழ்ப் பேராசிரியராகவும் 1943இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராகவும் பணி புரிந்தார். அத்தனை சிறப்போடு மொழியியல் விஞ்ஞானியாக அறிவியல் கலைஞராக,ஆத்மீக ஞானியாக ஆற்றல் மிகு பேராசிரியராக ,இயற்றமிழ் வல்லுனராக ,இசைத்தமிழ் ஆராய்ச்சியாளராக பல பணிகள் புரிந்தார். 1943ஆம் ஆண்டில் இலங்கையில் பல்கலைக்கழகம் இயங்கத் தொடங்கிய போது தமிழ்த் துறையின் முதலாவது பேராசிரியராக பலரின் வேண்டுகோளிற்கிணங்க பணிபுரிய இணங்கினார். தமிழ் ஆய்வுத் துறையில் எவ்வழியில் செல்ல வேண்டுமென்ற திட்டங்களை சுவாமி விபுலானந்தரே வகுத்தார்.
யாழ்நூல், மதங்கசூளாமணி, கணேச தோத்திரப் பஞ்சகம், குமர வேணவ மணிமாலை, நடராஜ வடிவம் என்பன அடிகளாரின் பிரதான நூல்களாகக் காணப்படுகின்றன.மேலும் இலக்கியம், இசை, சமயம், மொழியியல் கல்வி அறிவியல் சம்பந்தமாக எண்ணிறைந்த கட்டுரைகளையும் நூல்களையும் வெளியிட்டு தமிழுக்கும் கல்விக்கும் தொண்டாற்றியுள்ளார். மேலும் விவேகானந்த ஞானதீபம், சம்பாசனைகள் (1924), கருமயோகம் (1934), ஞான யோகம் (1934), நம்மவர் நாட்டு ஞான வாழ்க்கை (1941), விவேகானந்தரின் பிரசங்கம் (1934), அறிவியல் சம்பந்தமான எந்திரவியல் (1933), கலைச்சொல்லாக்க மாநாட்டுத் தலைமையுரை (1936), கலைச் சொற்கள் வேதிநூல் (1938), மின்சார சாத்தி வரலாறு விஞ்ஞான தீபம் (1922), விஞ்ஞான தீபம்- மொழிபெயர்ப்பு முறை (1922) போன்ற நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
அக்காலத்தில் தமிழகத்தில் எண்ணற்ற தமிழறிஞர்கள் இருந்தும் சங்கத் தமிழில் சிறந்தவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சாமிநாதையர் மற்றும் இலங்கையைச் சேர்ந்த விபுலானந்தர் மட்டுமே என்னும் புகழாரம் அடிகளாருக்கு மட்டுமல்ல இலங்கைத் தமிழருக்கும் பெருமை தேடித் தந்தது.
விபுலானந்த அடிகளுடைய கல்லறையில் அவரே இயற்றிய இனிய கவிதை பொறிக்கப்பட்டுள்ளது. இறைவனின் திருப்பாதங்களுக்கு சூட்டப்பட வேண்டிய மலர்கள் பற்றிப் பாடுகின்றார் அடிகளார்.வெள்ளைநிற மல்லிகையோ...என்று தொடங்கும் அப்பாடல் அடிகளாரை என்றும் நினைவில் வைத்திருக்கின்றது.அடிகளார் பாடிய பாடல்கள் அனைத்தும் அறிஞர் பெருமக்களால் விதந்து போற்றப்படுகின்றன.

நன்றி : வி.ரி.சகாதேவராஜா