Monday, September 16, 2019

மின்னணுக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள்

மின்னணுக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள்

கணினிகள் , மடிக்கணினிகள், மின் இசைக் கருவிகள், செல்போன்கள், காமிராக்கள், டேப்ரிக்கார்டர்கள், பென்டிரைவ்கள், பிளாப்பிகள், சிடிக்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், கால்குலேட்டர்கள், தொலைபேசிகள், தொலை நகலிகள், கைக்கடிகாரங்கள், மின்னணுப் பலகைகள், அச்சிடும் கருவிகள், மின் கலங்கள் உள்ளிட்ட பல்வேறு மின்னணுக் கருவிகளிலிருந்து ஒதுக்கப்படுவைகள் மின்னணுக் கழிவுகள் ஆகும்.

சென்ற நூற்றாண்டின் இறுதியில் மின்னணுத் தொழிற்சாலைகள் மற்றும் மின்னணுப் பொருட்களின் உற்பத்தி மிக வேகமாக வளர்ந்தது. பொருளாதார தொழில் நுட்ப வளர்ச்சி ஏற்பட்டது. நுகர்வோர்களை குறிவைத்து தயாரிப்புகள் செய்யப்பட்டன.

நோக்கியோ , சாம்சங் , சோனி எரிக்சன், மோட்ரோலா, சோனி முதலிய பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவிலுள்ள டாடா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து மின்னணுப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை நடத்தி வருகின்றன.

இந்தியாவில் எதிர்வரும் பத்தாண்டுகளில் 500% மின்னணுக் கழிவுகள் அதிகரிக்கும் என மதிப்பிடப்படுகிறது. தற்போது ஆண்டுக்கு 4 லட்சம் மெட்ரிக் டன்கள் மின்னணுக் கழிவுகள் உருவாக்கப்படுகிறது. மின்னணுக் கழிவுகளின் அளவு இன்னும் சில ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஓர் ஆண்டில் மட்டும் 1200 மெட்ரிக் டன்கள் எலெக்ட்ரானிக் கிராப் உருவாக்கப்படுகிறது. பெங்களுரில் மட்டும் ஆண்டுக்கு 8000 மெட்ரிக் டன்கள் மின்னணுக் கழிவுகள் வெளியிடங்களில் கொட்டப்படுகிறது.

பாதிப்புகள்
சீனா, தாய்லாந்து முதலிய நாடுகளிலிருந்து கிடைக்கும் மலிவான மின்னணுப் பொருட்கள், இந்தியாவிற்குள் அதிக அளவில் தாராளமாக இறக்குமதி செய்யப்படுகிறது. மலிவு விலைக்கு வாங்கப்படும் இப்பொருட்கள் குறைந்த காலங்களிலேயே மின்னணுக் கழிவுகளாகி விடுகின்றன.

உபயோகமற்ற மின்னணுக் கழிவுகளிலிருந்து அபாயகரமான நச்சுப் பொருட்கள் வெளியேறி, மனிதர்களுக்கு புற்று நோய், நரம்புத் தளர்ச்சி, கண் பார்வைக் குறைபாடு முதலிய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. மேலும், மின்னணுக் கழிவுகள் மண்ணையும் , நீரையும், காற்றையும் மாசடையச் செய்கின்றன.

மின்னணுக் கழிவுகளில் நச்சுத் தன்மையுள்ள காரீயம், பாதரசம், குரோமியம், இரும்பு, காப்பர், அலுமினியம், தங்கம் முதலிய உலோகங்கள் கலந்து உள்ளன.

காப்பரிலிருந்து ‘ டையாக்சின் ‘ என்னும் நச்சுப் பொருள் வெளியாகிறது. இதனால் காற்று மாசடைகிறது. கணினிகள் மற்றும் எலெக்ட்ரிக் பொருட்கள் ‘டாக்சி சையனைடு‘ என்னும் நச்சுப் பொருளை வெறியேற்றுகிறது.

மின்னணுக் கழிவுகளில் உள்ள பாதரசம், மனிதனின் நினைவுகளை பாதிப்படையச் செய்கிறது. தசைகளை பலகீனப் படுத்துகிறது. விலங்குகளின் உயிர்களுக்கு உலை வைக்கிறது. கருவுருதல், இனப்பெருக்கம் பாதிக்கப்படுகிறது.

மின்னணுக் கழிவுகளில் கலந்து உள்ள ‘ சல்பர் ‘மனிதர்களின் கல்லீரல், இதயம், கண், தொண்டை, நுரையீரல், நரம்பு முதலியவற்றை சீர்கேடு அடையச் செய்கிறது.

பெருநகரங்களில் மின்னணுக் கழிவுகள் அதிக அளவில் கொட்டப்படுகிறது. கங்கை நதியும் மின்னணுக் கழிவுகளிலிருந்து தப்பவில்லை. மின்னணுக் கழிவுகளை எரிப்பதால் காற்று மண்டலம் பாதிக்கப்படுகிறது. மின்னணுக் கழிவுகளால் நிலத்தடி நீர் மிகவும் பாதிப்படைகிறது. மின்னணுக் கழிவுகள் மக்கும் தன்மையற்ற திடக்கழிவுகளாக உள்ளதால் சுற்றுச் சூழலின் தன்மையையும், எழிலையும் சீரழிக்கிறது.

மின்னணு பொருட்கள் மற்றும் கழிவுகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது, இந்தியாவில் எதிர்காலத்தில் சுற்றுச் சூழல் பாதிப்பை மேலும் அதிகரிக்கச் செய்யும்.

மின்கலம் (பேட்டரி) பயன்படுத்திய பின்னர் குப்பையில் தூக்கி வீசப்படுகின்றன. மின்கலத்தில் உள்ள உலோகத்துகள்களானது நிலத்திற்குள் ஊடுருவி நிலத்தடி நீரை மாசுபடுத்துகிறது. மின்கலங்களை எரிப்பதால் காற்று மாசுபடுகிறது.

திடக்கழிவுச் சட்டம்
திடக்கழிவுச் சட்டத்தைக் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின்படி பயன்படுத்த முடியாத மின்னணு சாதனங்களைச் சேகரிப்பது, மறு சுழற்சி செய்வது மற்றும் கழிவுகளை அகற்றுவது முதலியவைகளை, அந்த சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பொறுப்பாகும். மேலும், இந்தப் பணியை உள் நாட்டிலேயே செய்ய வேண்டும். இந்த அபாயகரமான மின்னணுக் கழிவுகளை, பயன்படுத்த முடியாத சாதனங்களை வேறு எந்த நாட்டுக்கும் ஏற்றுமதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

மின்னணுக் கழிவுகளை உருவாக்கும் உலகத் தலைவனாக உள்ளது. மேலும், உலக அளவில் 80% மின்னணுக் கழிவுகளை அமெரிக்கா கொட்டுகிறது. அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் 3 மில்லியன் மெட்ரிக் டன்கள் மின்னணுக் கழிவுகளை ஏற்படுத்துகிறது . அமெரிக்காவில் ஆண்டு ஒன்றுக்கு 30 மில்லியன் கணினிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

பல நாடுகள் மின்னணுக் கழிவுகளை தாங்களே மறு சுழற்சி செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், இக்கட்டுப்பாடுகளை அமெரிக்கா தனது காலில் போட்டு மிதிக்கிறது. மென் பொருள் தயாரிக்கும் நிறுவனங்களை அதிகம் கொண்ட அமெரிக்காவில் தான் மின்னணுக் கழிவுகள் சேருவதும் அதிகம். மின்னணுக் கழிவுகளால் ஏற்படும் விளைவுகளை அறிந்துள்ள அமெரிக்கா அதனை வேறு நாடுகளுக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்துவிட்டு, தனது நாட்டின் சுற்றுச் சூழலை காப்பாற்றிக் கொள்வதில் உறுதியாக உள்ளது. மேலும், தொண்டு நிறுவனங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும். அறக்கட்டளைக்கும் உதவி செய்வதாகக் கூறிக் கொண்டு , இந்தியா போன்ற நாடுகளுக்கு பழுதடைந்த மற்றும் செயல்திறன் குறைந்த கணினிகளையும், பிற மின்னணுப் பொருட்களையும் அனுப்பி வருகின்றது. பேசில் ஒப்பந்தத்தில் (Basel Agreement) அமெரிக்கா கையொப்பமிட மறுத்துவிட்டது.

ஓரு கணினியில் 1000- க்கும் மேற்பட்ட பொருட்கள் உள்ளது. அதில் 50 பொருட்கள் நச்சுத் தன்மை கொண்ட உலோகங்களாலும், கலவைகளாலும் ஆனது. பழுதடைந்து கணினிகளிலிருந்தும், அதன் பாகங்களிலிருந்தும் நச்சு கசியத் துவங்குகிறது.

மின்னணுக் கழிவு மேலாண்மை
மின்னணுக் கழிவுகளை மேலாண்மை செய்வதற்கும், மறு சுழற்சி செய்வதற்கும் தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்கள், மறு சுழற்சியில் ஈடுபடுபவர்கள், உபயோகிப்பாளர்கள் முதலியோர் இணைந்து செயல்பட வேண்டும்.

மின்னணுக் கழிவுகளை மேலாண்மை செய்திட உபயோகிப்பாளர்களிடம் கணினிகளுக்கு 3.94% லிருந்து 5.95% வரையும், தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு 3.4%  லிருந்து 5% வரையும், செல் போன்களுக்கு 3.4% லிருந்து 5% வரையும் சேவைத் தொகை, விலையுடன் சேர்த்து வாங்கப்படுகிறது. ஆனால், மின்னணுக் கழிவுகளை மேலாண்மை செய்வதில் எந்தவொரு தயாரிப்பு நிறுவனமும் ஈடுபடுவதில்லை.

மின்னணுக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் பணியில் புதுடெல்லியில் மட்டும் 30, 000 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நவீன இயந்திரங்கள் இல்லாமல், பாதுகாப்பு கருவிகள் இல்லாமல், வெறுமனே சுத்தியல் , திருப்புளி கொண்டு பெண்களும், குழந்தைகளும் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது உடலில் காயங்கள் ஏற்படுதல், உடல் நல பாதிப்புகள் அடைதல், காற்றோட்டமில்லாத சூழல், முகம் மூடுவதற்கு மாஸ்க் , முகமூடிக்கவசம் முதலியவைகள் இல்லாதது. உயர் தொழில் நுட்ப நவீன கருவிகள் வழங்கப்படாதது முதலிய மோசமான நிலைமகள் நிலவி வருகிறது. மேலும், மின்னணுக் கழிவுகளிலிருந்து சில உலோகங்களைப் பிரிப்பதற்கு, சுத்தப்படுத்துவதற்கு வீரியமுள்ள அமிலங்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த அமிலங்களினால் மனித உடலிலும், தோலிலும் பாதிப்புகள் உண்டாகிறது.

மின்னணுப் பொருட்கள் தயாரிப்பாளர்கள், நகராட்சி அமைப்பினர், மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் , கொள்கை வகுப்பாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு மின்னணுக் கழிவுகள் மேலாண்மை குறித்து திட்டமிட வேண்டும். மின்னணுக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு தகுந்த முறைகள் உருவாக்கப்பட வேண்டும்.

நச்சுத் தன்மையுள்ள மின்னணுக் கழிவுகள் குறித்தும் சுற்றுச் சூழல் பாதிப்பு மற்றும் மனித உடலநலப் பாதிப்புகள் குறித்தும் சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

இந்தியாவில் மின்னணுக் கழிவுகள் குறித்து சட்டங்கள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் தெளிவாக ஏற்படுத்தப் படவேண்டும்.

மின்னணுக் கழிவுகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்திட , மத்திய வனம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சகம், மாநில அரசின் மாசுகட்டுப்பாட்டு வாரியம் முதலியவற்றின் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.

Sunday, March 31, 2019

பாரதியின் பாடல்களுக்கு பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்றுக் கொடுத்த பெருமகன்


பாரதியின் பாடல்களுக்கு பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்றுக் கொடுத்த பெருமகன்


'கலை அறிவியல் மெய்ஞானம் மூன்றும் ஒருங்கிணையும் கல்வியே முழுமையான கல்வி' என்பது அடிகளாரின் கருத்தாகும்.

1925இல் இலங்கை திரும்பிய அடிகளார் கல்லடி உப்போடையில் சிவானந்தா வித்தியாலயமும் காரைதீவில் சாரதா மகளிர் கல்லூரியும் மற்றும் ஆதரவற்றோர் மாணவர்இமாணவியர் இல்லங்களும் நிறுவி அளப்பெரிய கல்வித் தொண்டு செய்தார். பின்பு யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா வித்தியாலயத்தையும் திருகோணமலை இந்துக் கல்லூரியையும் இராமகிருஷ்ண சங்கத்தோடு இணைத்ததோடு நில்லாது மலையகத்திலும் பாடசாலைகள் அமைத்து சகலருக்கும் சிறந்த கல்வித் தொண்டாற்றினார். மேலும் இராமகிருஷ்ணமிஷன் மேற்கொள்ளும் கல்விப் பணிகளை ஒருங்கமைத்தார்.

1931இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதல் தமிழ்ப் பேராசிரியராகவும் 1943இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராகவும் பணி புரிந்தார். அத்தனை சிறப்போடு மொழியியல் விஞ்ஞானியாக அறிவியல் கலைஞராக,ஆத்மீக ஞானியாக ஆற்றல் மிகு பேராசிரியராக ,இயற்றமிழ் வல்லுனராக ,இசைத்தமிழ் ஆராய்ச்சியாளராக பல பணிகள் புரிந்தார். 1943ஆம் ஆண்டில் இலங்கையில் பல்கலைக்கழகம் இயங்கத் தொடங்கிய போது தமிழ்த் துறையின் முதலாவது பேராசிரியராக பலரின் வேண்டுகோளிற்கிணங்க பணிபுரிய இணங்கினார். தமிழ் ஆய்வுத் துறையில் எவ்வழியில் செல்ல வேண்டுமென்ற திட்டங்களை சுவாமி விபுலானந்தரே வகுத்தார்.
யாழ்நூல், மதங்கசூளாமணி, கணேச தோத்திரப் பஞ்சகம், குமர வேணவ மணிமாலை, நடராஜ வடிவம் என்பன அடிகளாரின் பிரதான நூல்களாகக் காணப்படுகின்றன.மேலும் இலக்கியம், இசை, சமயம், மொழியியல் கல்வி அறிவியல் சம்பந்தமாக எண்ணிறைந்த கட்டுரைகளையும் நூல்களையும் வெளியிட்டு தமிழுக்கும் கல்விக்கும் தொண்டாற்றியுள்ளார். மேலும் விவேகானந்த ஞானதீபம், சம்பாசனைகள் (1924), கருமயோகம் (1934), ஞான யோகம் (1934), நம்மவர் நாட்டு ஞான வாழ்க்கை (1941), விவேகானந்தரின் பிரசங்கம் (1934), அறிவியல் சம்பந்தமான எந்திரவியல் (1933), கலைச்சொல்லாக்க மாநாட்டுத் தலைமையுரை (1936), கலைச் சொற்கள் வேதிநூல் (1938), மின்சார சாத்தி வரலாறு விஞ்ஞான தீபம் (1922), விஞ்ஞான தீபம்- மொழிபெயர்ப்பு முறை (1922) போன்ற நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
அக்காலத்தில் தமிழகத்தில் எண்ணற்ற தமிழறிஞர்கள் இருந்தும் சங்கத் தமிழில் சிறந்தவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சாமிநாதையர் மற்றும் இலங்கையைச் சேர்ந்த விபுலானந்தர் மட்டுமே என்னும் புகழாரம் அடிகளாருக்கு மட்டுமல்ல இலங்கைத் தமிழருக்கும் பெருமை தேடித் தந்தது.
விபுலானந்த அடிகளுடைய கல்லறையில் அவரே இயற்றிய இனிய கவிதை பொறிக்கப்பட்டுள்ளது. இறைவனின் திருப்பாதங்களுக்கு சூட்டப்பட வேண்டிய மலர்கள் பற்றிப் பாடுகின்றார் அடிகளார்.வெள்ளைநிற மல்லிகையோ...என்று தொடங்கும் அப்பாடல் அடிகளாரை என்றும் நினைவில் வைத்திருக்கின்றது.அடிகளார் பாடிய பாடல்கள் அனைத்தும் அறிஞர் பெருமக்களால் விதந்து போற்றப்படுகின்றன.

நன்றி : வி.ரி.சகாதேவராஜா


Tuesday, March 12, 2019

பொலித்தீன் , பிளாஸ்ரிக் பொருட்களின் தீமைகள்



பொலித்தீன் , பிளாஸ்ரிக் பொருட்களின் தீமைகள்
உலகளாவிய ரீதியில் பொலித்தீன் , பிளாஸ்ரிக் பொருட்களின் தீமைகள் பற்றி உரத்துப் பேசப்படுகின்ற இன்றைய காலகட்டத்தில் அதனை கட்டுப்படுத்துவது பற்றி எமது தேசமும் அதீத பிரயத்தனம் எடுப்பதனை கண்டு கொள்ள முடிகின்றது. இந்த முயற்சி ஆரோக்கியமானதாக பார்க்கப்படுதல் வேண்டும். எனினும் இதில் பயணிக்க வேண்டியது நெடுந்தூரம் என்பது குறிப்பிடத்தக்கது.

பொலித்தீன் , பிளாஸ்ரிக் கடந்த அரை நூற்றாண்டாக எமது மக்களின் வாழ்வுடன் பின்னிப்பிணைந்துள்ள நிலையில் அதிலிருந்து இலகுவாக விடுபட முடியாது. மனிதனில் இருந்து இவற்றைப் பிரிக்க முடியாமைக்கான மிக முக்கிய காரணி இலகு தன்மையும் சௌகரியமுமாகும். பிளாஸ்ரிக்கின் வருகை மனிதனுக்கு நன்மைகளைக் கொண்டு வந்த போதிலும் அவற்றின் கழிவகற்றலால் ஏற்படும் பாரிய பாரிய பிரச்சினைகள் பற்றி அறிந்து கொள்வதில்லை அல்லது அலட்சியமாக இருந்து விடுகின்றோம்.

பொலித்தீன்- பிளாஸ்ரிக் தடுப்பு நடவடிக்கைகளில் பாடசாலைகளின் பங்கு அளப்பரியது. பிள்ளைகளை பாடசாலை அனுமதிக்கும் போதே பிளாஸ்ரிக் பாவனையின் தீமைகள் பற்றியும் அதற்கு மாற்றீடாக உபயோகிக்கக் கூடிய பொருட்கள் பற்றியும் தீவிரமாக சொல்லப்படுவதனை அவதானிக்க முடிகின்றது. அநேகமான பாசாலைகளில் நிறுவப்பட்டுள்ள உணவகங்களில் பொலித்தீன் பாவனை இல்லாமலாக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. எனவே இது விடயத்தில் பெற்றோர்களின் ஒத்துழைப்பு மிக அவசியமானது.
போதை ஒழிப்பு தேசிய ரீதியாக எழுச்சி பெற்றுள்ள இத்தறுவாயில் பொலித்தீன் - பிளாஸ்ரிக் பொருட்கள் பற்றியும் பேசுவதும் அவசியம்.

பொலித்தீன் - பிளாஸ்ரிக் கழிவுகள் சிறுசிறு துகள்களாக மாற்றம் கண்ட போதிலும் அது உக்கி அழிவதில்லை. இதனால் சூழலுக்கும் காலநிலைக்கும் ஆரோக்கியத்துக்கும் அச்சுறுத்தலாகின்றது. பிளாஸ்டிக் - பொலித்தீன் கழிவுகள் நிலத்துக்கும் நிலத்தடி நீருக்கும் கடல் நீருக்கும் மாத்திரமின்றி வளிமண்டலத்துக்கும் பாரிய அச்சுறுத்தலாக உள்ளன. இதனால் மனிதர் மாத்திரமின்றி விலங்குகள் கடல்வாழ் உயிரினங்கள் என அனைத்துக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது. தாவரங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. சூழலில் குறிப்பாக நிலத்தில் வாழுகின்ற நுண்ணுயிர்க் கிருமிகளை கூட விட்டு இக்கழிவுகள் விட்டு வைக்கவில்லை.

மனித வாழ்வுக்கு இன்றியமையாதது காற்று நீர் உணவு உறையுள் என்பவையாகும். மனித வாழ்வை இலகுபடுத்த உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்ரிக் பொலித்தீன் என்பன இவை அனைத்தையும் மாசுபடுத்தி மனித வாழ்வில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. பிளாஸ்ரிக் பொலித்தீன் என்பன சிறுசிறு துகள்களாகி கண்ணுக்குப் புலப்படாத மைக்குரோன் அளவை விடவும் சிறியதான நனோ அளவீடுகளில் சூழல் எங்கும் பரவிக் கலந்து பல வழிகளில் மனித உடலை அடைந்து கேடு விளைவிக்கின்றன.

நாம் பாவித்து விட்டு கழிக்கும் பிளாஸ்ரிக் பொலித்தீன் கழிவுகள் மீள்சுழற்சிக்கு கொண்டு வரப்படுவது மிகவும் சொற்பமே ஆகும். மண்ணில் புதைக்கப்படுகின்ற இக்கழிவுகள் உக்கி அழிவதில்லை என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. பல்லாண்டு காலங்களுக்கு முன்னர் நமது நிலங்களுக்குள் புதைக்கப்பட்ட பிளாஸ்ரிக் - பொலித்தீன்களை ஏதோ ஒரு தேவைக்காக நிலத்தை கிளறுகின்றபோது கண்டெடுக்க முடிகின்றது.
அதேவேளை அவற்றில் ஒரு பகுதி சிறு துகள்களாகி மண்ணில் இருந்து மழைநீருடன் நிலத்தடி நீரோடு இணைகின்றது. பிளாஸ்ரிக் பொலித்தீன் கழிவுகள் எரிக்கப்படும் போது அவை அதிக மாற்றமின்றி வளிமண்டலத்தில் சேர்கின்றன. இத்துகள்களும் மழைநீரோடு கலந்து நிலத்தை வந்தடைந்து கீழிறங்கி நிலத்தடி நீரை மாசுபடுத்துகின்றன. இதனால் நிலத்தடி நீர் மாசடைந்து எமது குடிநீரும் மாசடைகிறது.

மழையுடன் கலந்து வரும் இதன் துகள்கள் ஆற்றுநீரையும் நீர்த் தேக்கங்களையும் மாசுபடுத்துகின்றன. இதனால் ஆற்றிலிருந்து பெறப்படும் குடிநீரும் மாசடைந்தே காணப்படுகின்றது. வடிகட்டலையும் சுத்திகரிப்பையும் தூண்டும் அளவிற்கும் பிளாஸ்ரிக் துகள்கள் மிகச் சிறியனவாக உள்ளமையால் குடிநீர் மாசடைவதைத் தவிர்க்க முடியவில்லை.
தற்போது வாழ்கின்ற முதியவர்கள் பலர்இதாங்கள் ஆரோக்கியத்துடன் வாழ்வதாக பெருமையுடன் கூறிக் கொள்வர்.

அதன் உண்மைநிலை என்னவென்றால் அப்போதைய காலத்தில் சூழலோ நீரோ இப்போது மாசுபட்டிருப்பது போல் இருந்ததில்லை என்பதே உண்மை.
அன்று கிணற்று நீர் பாதுகாக்கப்பட்டு குடிநீராக பயன்படுத்தப்பட்டது. இன்று அப்படியல்ல. சூழல் மிகமோசமாக மாசுபட்டுள்ளது. கொதிக்க வைப்பதாலோ வடிகட்டிகள் மூலம் வடிகட்டுவதனாலோ பிளாஸ்ரிக் துகள்களை முழுமையாக அகற்ற முடியாது.

உலகளாவிய ரீதியில் இன்று குடிநீரில் 80வீதத்துக்கு மேற்பட்ட இடங்களில் பிளாஸ்ரிக் மாசுகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகில் பிளாஸ்ரிக் துகள்களால் மாசுபட்ட குடிநீர் நிறைந்த இடங்களாக அமெரிக்கா முதலிடத்திலும் இந்தியா இரண்டாமிடத்திலும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

பிளாஸ்ரிக் பொலித்தீன் பாவனையினால் ஏற்படும் நோய்கள் பற்றியும் அறிவதும் அவசியம்.

பிளாஸ்ரிக் துகள்கள் மனித உடலை தண்ணீர் உணவு சுவாசம் என்பவற்றின் ஊடாக வந்தடைகின்றன. அதிலும் நீருடன் உடலில் கலக்கும் துகள்களே அதிகம் என்று அறியப்பட்டுள்ளது. பிளாஸ்ரிக் துகள்கள் மிகச் சிறிய அளவில் இருப்பதனால் இவை சமிபாட்டுத்தொகுதியில் அகத்துறிஞ்சப்பட்டு இரத்தச் சுற்றுடன் கலந்து சகல உறுப்புக்களையும் சென்றடைகின்றன.

கலச் சுவர்களையும் இவை ஊடறுத்துச் செல்லக் கூடியதாக இருப்பதால் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இவற்றை உடலை விட்டு வெளியேற்றவும் முடியாமல் ஈரல் சிறுநீரகம் என்பன சிரமத்தை எதிர்நோக்குகின்றன. இதனால் இத்துகள்களின் படிவால் இந்த உறுப்புக்கள் மெதுமெதுவாக பாதிப்புக்குள்ளாகின்றன. காலவோட்டத்தில் இவற்றின் செயல்திறன் பாதிப்புக்குள்ளாவதுடன் இறுதியில் இவ்வுறுப்புக்கள் செயலிழக்கும் நிலைமை உருவாகிறது என்கின்றனர் நிபுணத்துவ வைத்தியர்கள். பிளாஸ்ரிக் பொலித்தீன் என்பவற்றால் ஏற்படுகின்ற மிக மிக்கியமான நோய் புற்றுநோய் ஆகும். இன்று நாம் டெங்கு பரவுதலைப் பற்றி அச்சமடைவதைப் போல இதற்கு அஞ்சுவதில்லை.

எனினும் புற்றுநோய் ஏற்படுத்தும் மரணங்கள் டெங்கு மரணங்களை விட பல மடங்காகும். சூழலில் சேரும் பிளாஸ்ரிக் கழிவுகள் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துகின்றன. பிளாஸ்ரிக் துகள்கள் கருவிலுள்ள குழந்தைகள் குறைபாட்டுடன் பிறப்பதற்கு காரணமாகின்றன இதனை கருத்தில் கொண்டு நாம் செயற்பட வேண்டும்

நன்றி 

Thursday, January 10, 2019

பருவநிலை மாற்றம்

பருவநிலை மாற்றம் குறித்து "இதுவே இறுதி" என எச்சரிக்கும் விஞ்ஞானிகள்


           பருவநிலை மாற்றம் குறித்த பாரீஸ் ஒப்பந்தத்தில் உள்ளபடி புவி வெப்ப அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸ் அளவைவிட குறைவாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அதனை நோக்கி அனைத்து நாடுகளும் பயணிக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், இப்போது அதற்கு எதிராக புவி வெப்பம் அதிகரிப்பதாக எச்சரிக்கிறார்கள் ஆய்வாளர்கள். அதாவது புவி வெப்ப அதிகரிப்பு 3 டிகிரி செல்சியஸ் அளவை நோக்கி செல்வதாக கூறுகிறார்கள்.
பருவநிலை மோசமாக பாதிப்படையாமல் இருக்க வேண்டுமென்றால் புவி வெப்ப அதிகரிப்பு 1.5 செல்சியஸுக்கும் குறைவாக இருக்க வேண்டும்.
இப்போதுள்ள சூழ்நிலை தொடர்ந்தால் மோசமான விளைவுகள் ஏற்படும். ஆனால், இப்போதும் இதிலிருந்து தப்பிக்க வாய்ப்புள்ளதாக நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் அறிவியலாளர்கள்.
மூன்றாண்டு ஆய்வுக்குப் பின் பருவநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கிடையேயான குழுவின் (IPCC) விஞ்ஞானிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் இடையேயான பேச்சுவார்த்தை தென்கொரியாவில் நடந்தது. இதற்குப் பின் 1.5 செல்சியஸ் வெப்ப அதிகரிப்பு பருவநிலையில் எத்தகைய தாக்கத்தை உண்டாக்குமென சிறப்பு அறிக்கை வெளியிடப்பட்ட
இந்த பேச்சுவார்த்தையில் அறிவியலாளர்கள் பருவநிலை குறித்த தங்கள் ஆய்வை முன்வைத்து பேசினர், அரசு பிரதிநிதிகள் மக்களின் வாழ்க்கை தரம் மற்றும் பொருளாதாரத்தை முன்வைத்து தங்கள் தரப்பை விளக்கினர். பொருளாதாரத்துக்காக பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் தவிர்க்க முடியாத சில சமரசங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
"புவி வெப்ப அதிகரிப்பை 2 செல்சியஸாக குறைப்பதற்கு பதிலாக 1.5 செல்சியஸில் நிறுத்துவது பல நல்ல பலன்களை தருகிறது" என்கிறார் பருவநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கிடையேயான குழுவின் இணை தலைவர் பேராசிரியர் ஜிம் ஸ்கே.

1.5 செல்சியஸாக நாம் வெப்பத்தை குறைக்க, நாம் நிலத்தை நிர்வகிப்பதில், எரிசக்தி பயன்பாட்டில் மற்றும் போக்குவரத்தில் நாம் பல மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்கிறார் ஜிம்.
1.5 செல்சியஸாக நாம் வெப்ப அதிகரிப்பை குறைக்க என்ன வழிகள்?
1.2030க்குள் உலகில் வெளியேற்றம் 45 சதவீதம் குறையவேண்டும்.
2.புதுப்பிக்கத்தக்க வளங்கள் மூலம் பெறப்படும் மின்சாரம் (சூரிய ஒளியிலிருந்து பெறப்படும் மின்சாரம், காற்றாலை மின் உற்பத்தி போன்றவை) 2050க்குள் 85% ஆக இருக்க வேண்டும்.
3.நிலக்கரி பயன்பாட்டை முற்றிலும் குறைக்க எதிர்பார்க்கப்படுகிறது.

4.எரிசக்தி உற்பத்திக்கு உதவும் பயிர் வகைகளுக்காக 7 மில்லியன் சதுர கிலோ மீட்டர் நிலம் தேவைப்படும். (இந்தப் பரப்பளவு ஆஸ்திரேலிய கண்டத்தைவிட சற்று சிறியது.)

நாம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் என்னவாகும்?

1.5 செல்சியசுக்கு கீழ் புவியின் வெப்பத்தை குறைக்க நாம் தவறிவிட்டால், சில அபாயகரமான மாற்றங்கள் ஏற்படக்கூடும்.

2 டிகிரிக்கு மேல் வெப்பம் உயர்ந்தால், கடல் நீரின் வெப்பம் அதிகரித்து பவள பாறைகள் இல்லாமல் போய்விடும்.

அதே போல, 2 டிகிரிக்கு மேல் புவி வெப்பமாகும்போது, கடலின் நீர்மட்டம் 10 சென்டிமீட்டர் அளவிற்கு உயரும். இதனால் உலகில் பல இடங்களில் 10 மில்லியன் (ஒரு கோடி) மக்கள் வாழுமிடத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடும்.

கடலின் வெப்பநிலை மற்றும் அமிலத்தன்மையின் மாற்றம் ஏற்பட்டு, நெல், சோளம் மற்றும் கோதுமைப் பயிர்கள் வளர்வதில் தாக்கம் ஏற்படும்.

ல.த.மயூரன்

                                   நன்றி.....BBC