Tuesday, March 26, 2013

காப்பியம்

1.0 பாட முன்னுரை
    இலக்கிய உலகில் காப்பியம் ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளது. இதனைச் செவ்விலக்கிய வகையில் (Classical Literature) அடக்குவர். இலக்கிய வளம் நிறைந்த பழமையான மொழிகளில் முதல் இலக்கியம் காப்பியமாக அமைவதைக் காணலாம்.. சங்க இலக்கியமான புறநானூறும், பதிற்றுப்பத்தும் பத்துப்பாட்டில் பல பாடல்களும் இத்தகைய வீரயுகப் பாடல்கள்தாம். சீன மொழியிலும் இத்தகைய உதிரிப் பாடல்களே வீரயுகத்தில் எழுந்துள்ளன.
    தமிழ் இலக்கிய வரலாற்றில் வீரயுகத்தை அடுத்துத்தான் காப்பியக் காலம் தொடங்குகிறது. இக்காப்பிய எழுச்சிக்கு வித்திட்டவர் இளங்கோ அடிகள் ஆவார். சிலப்பதிகாரத்திற்கு முன் பல காப்பியங்கள் எழுந்திருக்க வேண்டும் என அறிஞர்கள் கருத்துத் தெரிவித்தாலும் அவை அனைத்தும் ஊகங்களே. தமிழில் தோன்றிய முதல் காப்பியமே சிலப்பதிகாரம்தான். இதனை அடியொற்றியே தமிழில் பல காப்பியங்கள் எழுதப்பட்டுள்ளன.

1.1 காப்பியம்
    காப்பியம் என்றால் என்ன? இந்தச் சொல்லின் பொருள் என்ன? இச்சொல் விளக்கும் இலக்கியம் எத்தகையது? ஒருவகையில் சிந்தாமணி, சிலப்பதிகாரம் போன்றவை கதைப்பாடல்கள் என்பதை நாம் அறிவோம். இன்னொரு நிலையில் காப்பியம்என்றால் என்ன? இந்தச் சொல் எங்கிருந்தது வந்தது? இதன் அடிப்படைப் பொருள் யாது? இதற்கு விடை காண்பதே நமது நோக்கம்.
சொல் விளக்கம்
    வடமொழியில் காவ்யாஎன்றால் பாட்டு என்பது பொருள். கவியால் படைக்கப்படுவன அனைத்தும் காவியமே’. எனவே காவ்யா - காவியம் - காப்பியம் என ஆகியது என்பர். தமிழில் தொல்காப்பியம், காப்பியக் குடி, வெள்ளூர்த் தொல்காப்பியர், காப்பியஞ் சேந்தனார், காப்பியாற்றுக் காப்பியனார் முதலான பெயர்கள் காணப்படுகின்றன. இவை காப்பு + இயம் என்ற சொற்களின் சேர்க்கையாகக் கருதப்படுகின்றன. பழமரபுகளைக் காப்பது காப்பியம்எனக் கருத இடம் உண்டு. காப்பியம் என்ற இலக்கியமே, வரலாற்றுக்கு முற்பட்ட காலச் சமூக - சமய - அரசியல் வரலாற்றையோ அல்லது வரலாறாக நம்பப்படுவதையோதான் பாடுபொருளாகக் கொண்டுள்ளது. இவை வாய்மொழி மரபாகச் சொல்லப்பட்டு வந்த கதைகளாக அமைந்தன. இவ்வாறு வரலாற்றுக்கு முந்தைய கால மனிதனின் வாழ்வியல், சிந்தனை மற்றும் சமய நம்பிக்கை பற்றிச் சொல்லப்பட்டு வந்த கதைகளே ஹோமர் போன்ற கவிஞர்களால் காப்பியமாகத் தொகுக்கப் பட்டன.
    ஆங்கிலச் சொல்லான Epic என்பதும் ‘epo’ என்ற கிரேக்கச் சொல்லின் ஆக்கமாகக் கருதப்படுகிறது; ‘epo’ என்றால் ‘to tell’ என்றும், ‘epos’ என்றால் ‘anything to tell’ என்றும் பொருள்படும். எனவே Epic என்பது மரபுவழியாகச் சொல்லப்பட்டு வருவது என்பது பொருளாகிறது. இவ்வகையில் காப்பியம்என்பதும் பழமரபுகளைக் காத்து இயம்புவது அதாவது சொல்லப்பட்டு வருவதுஎன்பது விளங்குகிறது அல்லவா?

1.3 பெருங்காப்பியமும் சிறுகாப்பியமும்
    வடமொழியில் மகாகாவியம். காவியம் என்ற வகைமையையே பெருங்காப்பியம் - சிறுகாப்பியம் என்று தமிழில் குறிப்பிடுகின்றனர். வடமொழியில் இதிகாசங்களான இராமாயண - மகாபாரதக் கிளைக் கதைகளை எடுத்துக் கொண்டு, அவற்றைக் கலைத் தன்மையுடன் தண்டியலங்காரம் கூறும் இலக்கணப்படி பாடினர். இவையே மகாகாவியம் - காவியம் எனப்பட்டன. வடமொழி தமிழ்க் காப்பியங்களுக்கிடையே பெயரில் இந்த ஒற்றுமை காணப்பட்டாலும், பாடு பொருளில் இருமொழிக் காப்பியங்களும் வேறுபடுகின்றன. தமிழில் எந்த ஒரு பெருங்காப்பியமோ அல்லது சிறு காப்பியமோ இதிகாசத் தழுவலாக இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.
1.3.1 பெருங்காப்பிய இலக்கணம்
    தமிழ்க் காப்பியக் கொள்கை பற்றிய விரிவான செய்தி பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் இல்லை எனலாம். வடமொழி மரபை ஒட்டி எழுந்த தண்டியலங்காரமே முதல்முதலில் காப்பிய இலக்கணம் பற்றி விரிவாகப் பேசுகின்றது. தொடர்ந்து பன்னிரு பாட்டியல், நவநீதப் பாட்டியல், மாறன் அலங்காரம் முதலான பாட்டியல் நூல்கள் இவ்விலக்கணம் பற்றிப் பேசுகின்றன.
    பெருங்காப்பியம் தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனைப் பற்றிய கதையாக அமைய வேண்டும் என்று தண்டியலங்காரம் கூறுகிறது.
    பெருங்காப்பியம் வாழ்த்து, வணக்கம், வருபொருள் கூறித் தொடங்கப் பட வேண்டும் என்பார் தண்டி; அவையடக்கம் இடம் பெற வேண்டும் என்பதை மாறன் அலங்காரம் வலியுறுத்தும். காப்பியப் பாடுபொருள் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருள் தருவதாக அமைதல் வேண்டும் என்பது இலக்கண நூலார் அனைவரின் கருத்தாகும்.
    பெருங்காப்பிய வருணனைக் கூறுகளாக மலை, கடல், நாடு, வளநகர், பருவம், இருசுடர்த் தோற்றம் என்பனவற்றைத் தண்டி கூறுகிறார். தென்றலின் வருகை, ஆற்று வருணனைகளை மாறன் அலங்காரம் சுட்டும். நவநீதப் பாட்டியல் மாலை (பொழுது), குதிரை, யானை, கொடி, முரசு, செங்கோல் பற்றிய வருணனைகளைச் சேர்க்கும்.
    பெருங்காப்பிய நிகழ்ச்சிகளைப் பொது நிகழ்ச்சி, அரசியல் நிகழ்ச்சி என இரண்டாக வகைப்படுத்தலாம். திருமணம், பொழிலாடல், நீராடல், புதல்வர்ப் பேறு, புலவியிற் புலத்தல், கலவியில் கலத்தல் ஆகியவற்றைப் பொது நிகழ்வுகளாகத் தண்டி ஆசிரியர் குறிப்பிடுவார். மாறன் அலங்காரம் இல்வாழ்க்கை, நிலையாமை, கைக்கிளை ஆகியவற்றைச் சேர்க்கும். குலவரவு, உலகின் தோற்றம், ஊழின் இறுதி, தொன்னூற்று அறுவரது இயற்கை, வேதியர் ஒழுக்கம் இவை பற்றிப் பேச வேண்டும் என்பவற்றைப் புராணக் காப்பிய நிகழ்வுகளாக வச்சணந்திமாலை முதலான இலக்கண நூல்கள் குறிப்பிடும்.
    பெருங்காப்பிய அரசியல் நிகழ்வுகளாக மந்திரம், தூது, செலவு, இகல் வென்றி, முடிசூடல் ஆகியவை தண்டி கூறுவன. இவற்றுடன் ஒற்றாடல், திறை கோடல் ஆகியவற்றை மாறன் அலங்காரம் சேர்க்கும்.
    சுவை, பாவம் (மெய்ப்பாடுகள்) காப்பியத்தில் இடம் பெற வேண்டும். அத்துடன் சந்தி, பாவிகம் ஆகிய கதைப் பின்னல் அமைதல் வேண்டும் என்பார் தண்டி. இதனைச் சற்று விரித்து வித்து, எண், துளி, கொடி, கருப்பம் எனப் பன்னிரு பாட்டியல் குறிப்பிடும்.
    பெருங்காப்பியக் கட்டமைப்பாகச் சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் ஆகியவை அமையும் என்பார் தண்டி. இவற்றுடன் படலம், காண்டம் ஆகியவற்றை மாறன் அலங்காரம் குறிப்பிடும். வெண்பா, விருத்தம், அகவல், கொச்சகம் என்னும் பாவகை காப்பியம் பாடச் சிறந்தவை எனப் பன்னிரு பாட்டியல் குறிப்பிடும்.
    இவை தவிர வழிப்படுத்துதல், வழிப்பயணம், பந்தாடல், அசரீரி, சாபம் முதலான நிகழ்வுகளும்; சுடுகாடு, தீஎரி முதலான வருணனைக் கூறுகளும்; காதை, புராணம் ஆகிய கட்டமைப்புக் கூறுகளும் பெருங்காப்பியக் கூறுகளாக அமைவதைக் காணலாம்.
தமிழில் பெருங்காப்பியங்கள்
    தமிழில் பெருங்காப்பியங்களை ஐம்பெருங் காப்பியங்கள் என்ற வகையுள் அடங்குகின்றனர். அவை சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகியன. இவற்றுள் சிலப்பதிகாரம் மணிமேகலை இரண்டையும் இரட்டைக் காப்பியங்கள்என்பர். ஆனால் இந்தப் பாகுபாடுகள் எதன் அடிப்படையில் செய்யப்பட்டன. இப்பாகுபாடு சரிதானா? என்ற சிந்தனை அறிஞரிடையே இன்னும் கேள்விக் குறியாகவே உள்ளது. இங்கே குறிக்கப்பட்டுள்ள ஐம்பெருங் காப்பியங்கள் வரிசையில் குண்டலகேசியும், வளையாபதியும் கிடைக்கப் பெறவில்லை. அவை எப்படி இருந்தன. அவை பெருங்காப்பிய மரபில் பாடப் பட்டவைதானா? என்பது யாருக்கும் தெரியாது. நன்னூல் மயிலைநாதர் உரையில் (நூ.387) ‘ஐம்பெருங் காப்பியம்என்ற பெயர் காணப்படுகிறது. பின்னர் தோன்றிய தமிழ்விடுதூது கற்றார் வழங்கு பஞ்ச காப்பியம்என்று குறிப்பிடுகின்றது. இந்த இரு நூல்களிலும் எவை பஞ்ச காப்பியம்என்பது குறிக்கப் படவில்லை. கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கந்தப்ப தேசிகர்,
    சிந்தா மணியாம் சிலப்பதிகாரம் படைத்தான் 
    நந்தா மணிமே கலைபுனைந்தான் - நந்தா 
    வளையா பதிதருவான் வாசகனுக்கு ஈந்தான் 
    திளையாத குண்டலகே சிக்கும்
என்று ஐம்பெருங்காப்பியங்களை எண்ணிச் சொல்கிறார்.
1.3.2 சிறுகாப்பிய இலக்கணம்
    சிறு காப்பியங்களுக்கான தனி இலக்கணம் மேற்சுட்டிய இலக்கண நூல்களில் இடம் பெறவில்லை. பெருங்காப்பியம் தரும் நாற்பொருளில் சில குறைந்து இயல்வது சிறு காப்பியம் என்பார் தண்டி. தமிழிலுள்ள ஐஞ்சிறு காப்பியங்களில் இவை அளவில் குறைந்திருப்பது தெரிய வருகிறது. பெருங்காப்பியச் சுருக்கமும் சிறுகாப்பியமாக எண்ணப் படுகின்றது. பெருங்காப்பியங்களுக்கு உள்ள உயர்ந்த, பரந்துபட்ட, நாடு தழுவிய ஓர் உன்னதத் தன்மை சிறுகாப்பியங்களுக்கு இல்லை என்றே சொல்லலாம். இவை குறிப்பிட்ட ஒரு கருத்தை, பகுதியை மட்டுமே மையப் படுத்துகின்றன எனலாம்.
சிறுகாப்பியங்கள்
    தமிழில் சிறுகாப்பியங்களை ஐஞ்சிறு காப்பியங்கள் என்று வகை செய்வர். இந்த வகைப்பாடும் கூடக் கருத்து வேறுபாடுகளுக்கு உரியதாக உள்ளது. யசோதர காவியம், நீலகேசி, உதயணகுமார காவியம், நாககுமார காவியம், சூளாமணி ஆகியவற்றை ஐஞ்சிறு காப்பியங்களாகத் தமிழ் இலக்கிய வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுவர்.
1.4 தொகுப்புரை
    இப்பாடப் பகுதியில் காப்பியம் என்ற இலக்கிய வகை மேலைநாட்டு மற்றும் இந்திய மொழிகளில் எவ்வாறு வகைப்படுத்தப் பட்டுள்ளன என்று பார்த்தோம். தமிழ்க் காப்பிய வகைகளையும், பெருங்காப்பியம் சிறுகாப்பியம் என்ற வகைப்பாடுகளையும் கண்டோம். பெருங்காப்பிய, சிறுகாப்பிய இலக்கணமும் இங்கு விளக்கப் பெற்றுள்ளது. காப்பியம் என்ற சொல் பொருள் பற்றியும் அறிந்தோம். இவ்வகையான குறிப்புகள் மூலம் காப்பியம் என்றால் என்ன என்பதை ஓரளவு புரிந்து கொள்ளலாம்.
    மாணவ நண்பர்களே; இப்பாடத்தைப் பயின்று இது போன்ற இலக்கிய வகைபற்றிய கருத்துகளை மேலும் பலநூல்களைக் கற்றுத் தெரிந்து கொள்ளுங்கள். ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, காப்பியம் என்ற இலக்கிய வகை பற்றிய அறிமுகமே இங்குக் கொடுக்கப்பட்டுள்ளது. விரிவான ஆழ்ந்த படிப்புக்கு இது ஒரு முன்னோடி எனக் கொண்டு மேலும் மேலும் காப்பிய இலக்கிய வகை பற்றிய கல்வியை வளர்த்துக் கொள்ளுங்கள்.
 பாட முன்னுரை
    தமிழில் தோன்றிய முதல் காப்பியம் இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட சிலப்பதிகாரம். இது இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ்க் காப்பியம்; மூவேந்தர்களையும் கதைத்தொடர்பால் ஒருங்கிணைப்பது; சமண, பௌத்த, வைதீக சமயங்களைப் பத்தினி வழிபாட்டில் இணைத்துச் சமய ஒற்றுமை பேணுவது; புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் எனச் சோழ, பாண்டிய, சேர நாட்டுத் தலைநகரங்களையே காண்டத் தலைப்பாகக் கொண்டு தமிழ்த்தேசியம் காண்பது.
    இது மன்னரைப் பாட்டுடைத் தலைவராகக் கொள்ளாது, வணிக மகளையும் கணிகை மகளையும் முதன்மைப் பாத்திரங்களாகக் கொண்டது.
    மொழியாலும், பொருளாலும், இலக்கிய நயத்தாலும், இன்சுவையாலும் முதன்மை பெறும் காப்பியம் இது. பல்வேறு வகையான சிந்தனை மரபுகளையும், பண்பாட்டையும், பழக்க வழக்கங்களையும் உள்ளடக்கி இருப்பது. விரிந்த களப் பின்னணியும் காலப் பின்னணியும் கொண்டது. பல்வேறு இன மக்கட் பிரிவினர் பற்றிப் பேசுவது. சமூக, சமய, அரசியல் சிந்தனைகளின் களஞ்சியமாகத் திகழ்வது. எல்லாவற்றிற்கும் மேலாக, உலக இலக்கிய வரலாற்றில் பெண்மைக்கு முதன்மை தருகின்ற ஓர் உன்னதக் காப்பியமாகத் திகழ்வது சிலப்பதிகாரம்.

2.2 சிலப்பதிகாரம் - கதைப்பின்னல்
    சிலப்பதிகாரம் புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம்என மூன்று காண்டங்களைக் கொண்டது. புகார்க்காண்டம்-10 காதைகள்; மதுரைக்காண்டம் 13-கதைகள்; வஞ்சிக்காண்டம் 7-காதைகள்; ஆக முப்பது காதைகளையுடையது. இங்கு, இக்காண்டங்களின் வழியே, சிலப்பதிகாரக் காப்பியத்தின் கதைப்போக்கைக் காண்போம்.
2.2.1 புகார்க் காண்டம்
    புகார் நகரப் பெருவணிகன் மாநாய்கன்; அவன் மகள் கண்ணகி; அதே நகரத்து உயர்ந்து ஓங்கு செல்வத்தான் மாசாத்துவான்; அவன் மகன்கோவலன். புகார் நகரமே விழாக்கோலம் கொள்ள, கோவலன்-கண்ணகி திருமணம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
    இதனைத் தொடர்ந்து தனிமனையில் குடியிருத்தப் பெறும் புதுமணத் தம்பதியர் புதுமண வாழ்வின் இனிமையைத் துய்த்து மகிழ்கின்றனர். சில ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்த அவர்கள் வாழ்வில் இடையூறு வந்து சேர்கிறது. சோழன் அவையில் நடன அரங்கேற்றம் செய்து தலைக்கோல் அரிவை என்ற பட்டத்தையும், 1008 கழஞ்சு பொன் விலை பெறும் பச்சை மாலையையும் பரிசாகப் பெற்றமாதவியைச் சேர்ந்து அந்த மகிழ்ச்சியில் தன் மனைவியை மறக்கிறான் கோவலன்.
    விடுதல் அறியா விருப்பினன் ஆயினன்
    வடுநீங்கு சிறப்பின்தன் மனையகம் மறந்து

            (சிலப்பதிகாரம்:3:174-175)
(வடு = குற்றம்)
    மாதவி ஆர்வ நெஞ்சத்தோடு கோவலனுடன் கூடி மகிழ்ந்திருக்க, கண்ணகி கையற்ற (செயலற்ற) நெஞ்சோடு தனித்துத் தவிக்கிறாள்.
    இந்தச் சூழலில் புகார் நகரில் இந்திரவிழா தொடங்குகிறது. விழாவில் மாதவி விண்ணவரும் போற்றப் பதினோரு ஆடல்களை ஆடி மகிழ்விக்கிறாள். அவள் கலைமகள்; விழாவில் ஆடுவது அவளுக்குச் சிறப்பு. கோவலன் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஊடல் கொள்கிறான். அவன் ஊடல் தீர்க்கப் பலவாறாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டு அவனோடு கடலாடச் செல்கிறாள் மாதவி. அவன் கையில் யாழைக் கொடுக்கிறாள். கோவலன் மாதவி மனம் மகிழ வாசிக்கிறான். அவன் பாடிய காதற் பாடல்களுள் வேறு யாரையோ விரும்பும் குறிப்பு இருப்பதாக நினைத்த மாதவி, தானும் ஒரு குறிப்புடையவள்போல யாழிசையோடு பாடுகிறாள். மாதவியின் பாடல் கேட்ட கோவலன்,
கானல்வரி யான்பாடத் தான் ஒன்றின்மேல் மனம்வைத்து
மாயப்பொய் பலகூட்டும் மாயத்தாள் பாடினாள்

            (சிலப்பதிகாரம்: 7: 52-2-3)
என அவளை இழிவாக நினைத்துப் பிரிந்து போகிறான்.
    கோவலன் பிரிவால் வாடிய மாதவி தன் காதல் உணர்வை எல்லாம் தாழை மடலில் கடிதமாகத் தீட்டி வசந்தமாலை என்ற தன் தோழியிடம் கொடுத்தனுப்புகிறாள்; ‘கடிதம் காட்டிக் கோவலனை அழைத்து வாஎன வேண்டுகிறாள். கடிதம் கண்ட கோவலன் அவள் ஒரு நாடக நடிகை; கை தேர்ந்த நடிகை; என்பால் அன்புடையவள் போல் இதுவரை நடித்திருக்கிறாள்என்று கூறி மடலை ஏற்காமல் வசந்த மாலையை அனுப்பி விடுகிறான். செய்தியறிந்த மாதவியோ மாலைக்காலத்தே வாரார் ஆயினும் காலையில் காண்போம்என்று வருந்திக் காத்திருக்கிறாள்.
    ஆனால் கோவலனோ, தன் மனைவி கண்ணகியிடம் செல்கிறான்; தன் செயலுக்கு வருந்துகிறான். அவேளா தீய கனவொன்று கண்ட குழப்பத்தில் இருக்கிறாள். அந்த நேரத்தில் மாதவியோடு வாழ்ந்து என் குலம் தந்த குன்று போன்ற பொருளை எல்லாம் இழந்துவிட்டேன்; அது நாணமாக இருக்கிறதுஎன்கிறான். ‘மாதவிக்குப் பொருள் கொடுக்க ஒன்றுமில்லை என வருந்துகிறான் போலும்என எண்ணிய கண்ணகி சிலம்புகள் உள்ளன; கொள்கஎன்கிறாள். தன் மனைவியின் உள்ளத்தைப் புரிந்து கொண்ட கோவலன் அச்சிலம்பையே முதலாகக் கொண்டு மதுரை சென்று வணிகம் செய்வேன்; புறப்படுஎன்கிறான். மறுப்பு இன்றி அவளும் புறப்படுகிறாள். புகார் நகரிலிருந்து மதுரை வரை அவர்களுக்கு வழித்துணையாகச் சமணப் பெண் துறவி கவுந்தியடிகள் வருகிறார். அவர்கள் சோழ நாட்டு வளங்களைப் பார்த்துக்கொண்டே பயணம் செய்து சீரங்கத்தை அடைகின்றனர். பின் காவிரியைக் கடந்து நடக்கின்றனர். இத்துடன் புகார்க் காண்டம் முற்றுப் பெறுகிறது.
2.2.2 மதுரைக் காண்டம்
    உறையூரைத் தாண்டி, ஒரு மறையவனிடத்தில் வழிகேட்டு, நடந்து ஒரு கொற்றவை கோயிலை அடைகின்றனர். அங்குப் பாலைநில மக்களின் கொற்றவை வழிபாட்டைக் கண்டு களிக்கின்றனர். சாலினி என்ற வேட்டுவப் பெண்ணின் மேல் வந்த கொற்றவை அங்கிருக்கும் கண்ணகியைப் பலவாறு போற்றுகிறாள்.
    இவேளா கொங்கச் செல்வி குடமலை யாட்டி
    தென்தமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து
    ஒருமா மணியாய் உலகிற்கு ஓங்கிய திருமா மணி

            (சிலப்பதிகாரம்: 12: 47-50)
(பொருள்: இவள் கொங்குநாடு, குடநாடு, தென்தமிழ்நாடு ஆகிய நாடுகளை ஆளும் தெய்வ மகள்; முற்பிறப்பில் செய்த தவத்தின் காரணமாக இத்தகைய சிறப்பினைப் பெற்றவள்; மிக உயர்ந்த மாணிக்க மணி திரண்டு பெண் உருக்கொண்டது போன்ற சிறப்புடையவள்.)
    பின்னர்க் கோவல - கண்ணகியர் தம் பயணத்தைத் தொடர்கின்றனர். வழியில் மாதவி அனுப்பிய தூதுவனாகிய கோசிகன் எனும் அந்தணன் கோவலனைத் தனியே சந்திக்கிறான். மாதவி கொடுத்தனுப்பிய இரண்டாவது கடிதத்தைக் கொடுக்கிறான்.
    கோவலனைப் பிரி்ந்த அவன் பெற்றோர், புகார் மக்கள், மாதவி முதலானோரின் துயரைக் கோசிகன் மூலம் கேட்டு உணர்கிறான். அதோடு மாதவி தீங்கற்றவள் என்பதைக் கடிதத்தின் மூலம் புரிந்து கொள்கிறான். எல்லாவற்றிக்கும் தன் செயலே காரணம் என உணர்கிறான்.
    தன்தீது இலள் எனத் தளர்ச்சி நீங்கி
    என்தீது என்றே எய்தியது உணர்ந்து

            (சிலப்பதிகாரம்: 13: 64-65)
    பின்னர்ப் பயணம் தொடர்ந்து, அவர்கள் வையை ஆற்றைக் கடந்து மதுரையின் மதில் புறத்தில் உள்ள புறஞ்சேரியை அடைகின்றனர். விடிந்ததும், கோவலன் கவுந்தியிடம் கண்ணகியை ஒப்படைத்து விட்டு மதுரைக்குள் செல்கிறான். அவன் வணிக இனத்தாரைக் கண்டு வணிகம் செய்து பொருள் ஈட்டும் தன் நோக்குடன் செல்கிறான். மதுரையிலுள்ள இரத்தினக் கடைவீதி, பொன் கடைவீதி, கூலவீதி, பரத்தையர் வீதி எனப் பலவற்றைக் கண்டு மதுரையின் அழகில், வளத்தில் மகிழ்வு எய்தி, மெய்ம்மறந்து திரும்புகிறான்.
    புறஞ்சேரி வந்த மாடலன் என்னும் மறையோன் கவுந்தியடிகளை வணங்குகிறான். மாடலனைக் கோவலன் வணங்குகிறான். தீவினையால் துயருற்ற கோவலனைக் கண்ட மாடலன், அவன் முன்னர்ச் செய்த நல்வினைகளை எல்லாம் எடுத்துரைக்கிறான்.
ஒரு முதிய பார்ப்பனன் உயிரைக் காப்பாற்ற மதயானையை எதிர் கொண்டு அடக்கிய கருணை மறவன்.
அறியாது கீரிப்பிள்ளையைக் கொன்ற ஒரு பார்ப்பனியின் துயர் துடைத்தவன்.
ஒரு பத்தினிபால் பழி சுமத்திய பொய்யன் உயிரைப் பூதத்திடமிருந்து காக்கத் தன் உயிரைக் கொடுக்க முன்வந்த தியாக சீலன்.
இப்படி இந்தப் பிறவியில் நல்வினையே செய்த கோவலன் துயர் அடையக் காரணம் முற்பிறப்பில் செய்த தீவினைப் பயன்போலும் - என உரைக்கிறான். அவனிடம் கோவலன் தான் கண்ட தீய கனவினைக் கூறுகிறான்.
    கனவில் கீழ்மகன் ஒருவனால் தன் ஆடை களையப்பட்டு எருமைக் கடாவில் ஏறிச் செல்லவும், கண்ணகி மிகப்பெரிய துன்பம் அடையவும், பின்னர் இருவரும் சான்றோர் அடையும் துறக்க உலகம் செல்லவும், மாதவி, மணிமேகலையை பௌத்தத் துறவியாக்கவும் - கண்டதாகக் கூறுகிறான். உடன் கேட்டுக் கொண்டிருந்த கவுந்தியடிகள், இப்புறஞ்சேரி தவத்தோர் வாழும் இடம்; இங்கு இல்லறத்தார் தங்குதல் கூடாது என்று கூறி மாதரி என்னும் ஆயர் மகளிடம் கோவல-கண்ணகியரை அடைக்கலப் படுத்துகிறார். இங்கு அருகனைத் தவிரப் பிற கடவுளரை வணங்காத கவுந்தியடிகள் கற்புக்கடம் பூண்ட இத்தெய்வம் அல்லது, பொற்புடைத்தெய்வம் யாம் கண்டிலம் எனக் கண்ணகியைக் கடவுள் நிலைக்கு உயர்த்திப் பேசுகிறார்.
    மாதரி வீட்டில் அடைக்கலம் புகுந்த கண்ணகி, அவள் மகள் ஐயை துணையுடன் உணவு சமைத்துக் கோவலனுக்குப் படைக்கிறாள். அமுதுண்ட கோவலன், கண்ணகிக்குத் தான் செய்த தீங்கினை எண்ணி இரங்குகிறான்:
    இருமுது குரவர் ஏவலும் பிழைத்தேன்
    சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன்

            (சிலப்பதிகாரம்: 16: 67-68)
(முதுகுரவர் = பெற்றோர்;
முதுக்குறைவி = பெரும் அறிவுடையவள்)
தன் தீங்கை எல்லாம் பொறுத்துக் கொண்ட கண்ணகியைப் போற்றுகிறான்.
    என்னொடு போந்து ஈங்கு என்துயர் களைந்த
    பொன்னே கொடியே புனைபூங் கோதாய்

         (சிலப்பதிகாரம் : 16: 88-89)
எனப் பாராட்டுகிறான்.
பின் அவளுடைய சிலம்பில் ஒன்றை எடுத்து விற்றுவரச் செல்கிறான். அவன் எதிரே, நூறு பொற்கொல்லர்களுடன் அரண்மனைப் பொற்கொல்லன் வருகிறான். அவனிடம், காவலன் தேவிக்கு ஆவதோர் காற்குஅணி, நீவிலை இடுதற்கு ஆதியோ (சிலப்பதிகாரம்: 16: 111-112) (அரசனுடைய தேவிக்குப் பொருத்தமான இச்சிலம்பின் விலையை நீ சொல்ல முடியுமா?) எனச் சிலம்பைக் காட்டிக் கேட்கிறான். இது பொற்கொல்லனைச் சிந்திக்கத் தூண்டுகிறது. தான் திருடிய சிலம்போடு இச்சிலம்பு ஒத்திருப்பது கண்டு, தேவியின் சிலம்பைத் திருடிய கள்வன் என அரசனிடம் காட்டிக் கொடுக்கிறான். அரசனோ, கள்வன் கையில் அச்சிலம்பு இருப்பின் அவனைக் கொன்று சிலம்பைக் கொண்டுவருகஎன ஏவலர்க்கு ஆணையிடுகிறான். இதனால் கோவலன் கொலைப்படுகிறான். இதனை அவலச் சுவையுடன் அனைவர் நெஞ்சமும் நெகிழ வெளியிடுகிறார் இளங்கோ.
    மண்ணக மடந்தை வான்துயர் கூரக்
    காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன்
    கோவலன் பண்டை ஊழ்வினை உருத்து

            (சிலப்பதிகாரம்:16: 215-17)
(நிலமகள் மிகப்பெரிய துன்பம் அடையவும், அரசனின் நீதி பிறழவும், கோவலன் பண்டை வினை காரணமாக வீழ்ந்து படுகிறான்.)
    புறஞ்சேரியில் ஆய்ச்சியர்கள் சில தீய நிமித்தங்களைக் கண்டதால் வரும் துயர்கள் நீங்குவதற்காகக் கண்ணனைப் போற்றிக் குரவைக் கூத்தினை நிகழ்த்துகின்றனர். ஆய்ச்சியர் கண்ணனுடைய அவதாரச் சிறப்புக்களை எல்லாம் வியந்து போற்றிப் பாடி ஆடுகின்றனர்.
    கூத்தின் முடிவில் கோவலன் கொலைப்பட்டான் என்ற செய்தி வருகிறது. கேட்ட கண்ணகி அழுது புலம்பி அரற்றுகிறாள். அவளது அவலம், பின்னர் அவல வீரமாக மாறுகிறது. மன்னவன் தவற்றால், திருடன் என்று பழி சுமத்தப்பட்டு என் கணவன் கொலைப்பட்டான். அவனுக்கு ஏற்பட்ட பழியைத் துடைப்பேன் என்று வீறு கொண்டு எழுகிறாள். கதிரவனைப் பார்த்துக் கள்வனா என் கணவன்? என்று கேட்கிறாள். அப்போது கள்வன் அல்லன் என அசரீரியாகச் செய்தி வருகிறது. தன் எஞ்சிய ஒரு சிலம்பைக் கையில் ஏந்தியவளாய் மதுரை நகர்ப் பெண்களிடம் பலவாறு சூளுரைத்து நடக்கிறாள். காதற் கணவனைக் காண்பேன்; அவன் வாயில் தீதுஅறு நல்லுரை கேட்பேன்என்கிறாள். மதுரை மக்கள் தென்னவன் கொற்றம் சிதைந்தது என்றும்,செம்பொற் சிலம்பொன்று கையேந்தி வம்பப் பெருந்தெய்வம் வந்ததுஎன்றும் அஞ்சிப் பதறுகின்றனர். கொலைப்பட்டுக் கிடக்கும் கோவலன் பாதம் பற்றி அழுகிறாள் கண்ணகி. அப்பொழுது அவன் உயிர்கொண்டு, நீ இங்கு இரு என்று சொல்லி, மறுபடி உடம்பைத் துறந்து வானுலகு செல்கிறான். பின் கண்ணகி தீவேந்தனைக் கண்டு வழக்குரைப்பேன் என அரண்மனை செல்கிறாள்.
    
    பாண்டிய மன்னனிடம், ‘தேரா மன்னா! என் கால் சிலம்பை விலைபேச முயன்று உன்னால் கொல்லப்பட்ட கோவலன் மனைவி நான். என் சிலம்பு மணிகளை உள்ளீடாகக் கொண்டதுஎன வழக்குரைக்கிறாள். பாண்டியன் தன் தேவி சிலம்பு முத்துப் பரலை உடையது எனக் கூறிக் கோவலனிடமிருந்து கைப்பற்றப்பட்ட தன் சிலம்பை வரவழைத்துக் கொடுக்கிறான். கண்ணகி சிலம்பை உடைக்கிறாள். அதிலிருந்து மாணிக்கப் பரல் தெறித்து வீழ்கிறது; ‘பொற்கொல்லன் சொல்லைக் கேட்ட யான் அரசன் அல்லன்; யானே கள்வன்எனக் கூறிப் பாண்டிய மன்னன் உயிர்விடுகிறான்;
    பொன் செய் கொல்லன் தன்சொல் கேட்ட
    யானோ அரசன் யானே கள்வன்

            (சிலப்பதிகாரம்: 20: 74-75)
பாண்டிமாதேவியும் உயிர்விடுகிறாள்.
    கண்ணகி புகார் நகரில் வாழ்ந்த ஏழு பத்தினிப் பெண்களின் வரலாற்றைக் கூறி, ‘நானும் அவர்களைப் போன்ற ஒரு பத்தினியாகின் இந்த அரசையும் மதுரையையும் ஒழிப்பேன்எனச் சூள்உரைக்கிறாள்; தன் இடமுலையைத் திருகி, மதுரையை வலம்வந்து, வீதியில் எறிகிறாள். அப்போது தீக்கடவுள் தோன்றி அவளிடம் ஏவல் கேட்கிறான். பார்ப்பனர், அறவோர், பசு, பத்தினிப்பெண்டிர், மூத்தோர், குழந்தைகள் இவர்களை விடுத்துத் தீயவர்களை மட்டுமே அழிக்க என அனல் கடவுளுக்கு ஆணையிடுகிறாள். மதுரை எரிகிறது; அங்கிருந்த அரச-அந்தண, வணிக-வேளாண் பூதங்கள் வெளியேறுகின்றன.
    மதுரையின் காவல்தெய்வமான மதுராபதி கண்ணகி முன் தோன்றிக் கோவலன் கொலைப்பட்டதற்கான காரணம் அவன் முற்பிறப்பில் செய்த தீவினை காரணமாக அவனுக்கு இடப்பட்ட சாபமே என எடுத்துக்கூறி, மதுரையைத் தீயிலிருந்து விடுவிக்கிறாள். பின்னர்க் கண்ணகி மேற்கு நோக்கி நடந்து சேரநாட்டை அடைகிறாள். நெடுவேள் குன்றில் ஒரு வேங்கை மரத்தின் கீழ் நிற்கிறாள். பதினான்கு நாள் கடந்த பின்னர், இந்திரன் முதலிய தேவர் வந்து அவளைப் போற்றுகின்றனர். அவர்கேளாடு இருந்த கோவலனோடு சேர்ந்து வான ஊர்தியில் ஏறித் துறக்கம் செல்கிறாள் கண்ணகி. இத்துடன் மதுரைக்காண்டம் முடிகிறது.
2.2.3 வஞ்சிக் காண்டம்
    கண்ணகி வானுலகு சென்ற காட்சியைக் கண்ட மலைக்குறவர்கள், அவளைத் தம் குல தெய்வமாகக் கருதி அவளுக்காகக், குரவைக் கூத்து நிகழ்த்துகின்றனர். மலைவளம் காணவந்த அரசன் செங்குட்டுவனிடம் தாம் கண்ட காட்சியை எடுத்துரைக்கின்றனர். உடனிருந்து சாத்தனார் கோவல- கண்ணகியர் வரலாற்றை-புகார், மதுரை நிகழ்வுகளை-அரசனுக்கு விளக்குகிறார். கேட்ட அரசமாதேவி, ‘நம் சேரநாடு வந்த இப்பத்தினிக் கடவுளுக்கு வழிபாடு எடுக்க வேண்டும்என்கிறாள்.
    நம் அகல்நாடு அடைந்த இப்
    பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும்

         (சிலப்பதிகாரம்: 25: 113-114)
(பரசல் = வழிபடல்)
    கண்ணகிக்குச் சிலை செய்ய இமயத்தில் கல் எடு்த்துக் கங்கையில் புனித நீராட்டிக் கொண்டுவந்து வஞ்சியில் கோயில் எடுப்பதே நோக்கமானாலும், தமிழர் வீரத்தை நிலை நாட்டுவதற்காகவும் சேரன் படை எடுத்துச் செல்கிறான். வழியில் பல மன்னர்கள் திறைப் பொருளுடன் சேரனை வரவேற்கின்றனர்; வாழ்த்துகின்றனர். எதிர்த்த மன்னர்களைச் சேரன் வெல்கிறான்.
கண்ணகி சிலை வடிக்க, இமயத்தில் கல் எடுத்து, தமிழர்தம் வீரத்தைப் பழித்த கனக-விசயர் தலையிலே அக்கல்லைச் சுமந்து வரச் செய்து, கங்கை ஆற்றில் புனித நீராட்டுகிறான். அப்போது அங்கு வந்த மாடல மறையோன் சேரனின் வெற்றியைப் புகழ்கிறான். பின்னர்க் கோவலனுக்கும் - கண்ணகிக்கும் நேர்ந்தவற்றைக் கேட்ட அவர்களின் தாயர் இறந்துபட்டனர் என்பதையும், அவர்தம் தந்தையர் துறவு மேற்கொண்டனர் என்பதையும், மாதவி-மணிமேகலை பௌத்தத் துறவியாகினர் என்பதையும், கவுந்தியடிகள் உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தார் என்பதையும் அடைக்கலமாகக் கண்ணகியைப் பெற்ற மாதரி தீப்பாய்ந்து உயிர்துறந்தாள் என்பதையும், கொற்கை அரசன் வெற்றிவேற் செழியன் ஆயிரம் பொற்கொல்லர்களைப் பத்தினிக் கடவுளுக்குப் பலியிட்டான் என்பதையும் தெரிவிக்கிறான். இவ்வாறு புகார், மதுரை நிகழ்வுகளைக் கேட்டறிந்த செங்குட்டுவன் வஞ்சி திரும்புகிறான்.
    சேரன் சிற்பநூல் வல்லாரைக் கொண்டு கண்ணகிக்குக் கோயில் எழுப்புகிறான். இமயக் கல்லில் வடிக்கப்பட்ட கண்ணகி சிலையைப் பிரதிட்டை செய்து முறைப்படி வழிபாடு நடத்துகிறான். கண்ணகியின் அடித்தோழி, தேவந்தி, காவற்பெண்டு முதலானோர் அங்கு வந்து கண்ணகியை வாழ்த்திப் பாடுகின்றனர். பத்தினிக் கடவுள் மின்னல் கொடியாகச் செங்குட்டுவனுக்கும் காட்சியளிக்கிறாள். முன்பு பாண்டியனைப் பழிவாங்கிய வீரக்கண்ணகி, இங்கு அவனை மன்னித்து அருள் செய்யும்அருள் கடவுளாக மாறுகிறாள்.
தென்னவன் தீதிலன் தேவர்கோன் தன்கோயில்
நல்விருந்து ஆயினான் நான்அவன் தன் மகள்
வெல்வேலான் குன்றில் விளையாட்டு யான் அகலேன்
என்னோடும் தோழிமீர் எல்லீரும் வம்மெல்லாம்

        (சிலப்பதிகாரம்: 29 பாடல் : 10)
என அருள்புரிகிறாள்.
(பாடல் பொருள்: பாண்டியன் தீமையற்றவன்; அவன் தேவர் உலகம் அடைந்து தேவர்களின் விருந்தினன் ஆகிவிட்டான்; நான் அவனுடைய மகள்; நான் இம்மலை நாட்டில் எப்போதும் நீங்காது தங்குவேன்; என் அருமைத்தோழியரே! நீங்கள் எல்லோரும் வாருங்கள்)
    கண்ணகிக் கடவுளின் அருள்பெற்ற தோழியர் அம்மானை வரி, கந்துகவரி, ஊசல்வரி முதலான வரிப்பாடல்களால் மூவேந்தரையும், பத்தினிக் கடவுளையும் வாழ்த்துகின்றனர். இப்பத்தினி வழிபாட்டில் பன்னாட்டு மன்னர்கள் கலந்து கொள்கின்றனர்; குறிப்பாக இலங்கைக் கயவாகு மன்னன் இவ்விழாவில் கலந்து கொள்கிறான். பத்தினிக் கடவுள், அவ்வந்நாட்டு வழிபாட்டில் தான் எழுந்தருளுவதாக வரமளிக்கிறாள். இத்துடன் வஞ்சிக்காண்டம் நிறைவு பெறுகிறது.
2.3 சிலப்பதிகாரம் - கருத்துக் களஞ்சியம்
    சமயம், சமூகம், அரசியல் சார்ந்த பல கருத்துகளைக் கொண்டுள்ள ஒரு சிறந்த படைப்பு சிலம்பு. சிலப்பதிகாரத்தின் அடிப்படையாக மூன்று கருத்துகள் கூறப்படுகின்றன.
1) அரசியலில் தவறு செய்வோர்க்கு அறக்கடவுள் எமனாகும் 
2)
புகழ்பெற்ற பத்தினியை மேலோர் போற்றுவர் 
3)
ஊழ்வினை தவறாது தன் பயனை ஊட்டும்
என்பன அவை. இவற்றோடு தமிழர்தம் நாகரிகம், பண்பாடு முதலானவற்றை உள்ளடக்கிய கருவூலமாகவும் திகழ்கிறது சிலப்பதிகாரம். இதில் தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களும் உண்டு. சமண, பௌத்த, வைதீக நெறிகளும் உண்டு. அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், ஆய்ச்சியர், குறவர், பரத்தையர் எனப் பல இனத்தவர்களும் இங்குப் பேசப்படுகின்றனர். இவற்றை எல்லாம் தொகுத்துக் காண்பது ஓர் அரிய செயலே. மாணவர் தம் பயன்கருதி ஒரு சில இங்குச் சுட்டப்பெறுகின்றன.
2.3.1 அரசியல்
    அரசியல் பிழைத்தோர்க்கு அறமே எமனாக மாறும்; செங்கோல் வளைந்தபின் உயிர் வாழ்தல் நன்று அன்று; அரசன் நல்லாட்சி செய்தால்தான் அந்நாட்டில் வாழும் மகளிர்க்கும் கற்பு வாழ்க்கை சிறக்கும் என்பன போன்ற பல அரசியல் உண்மைகளைப் பேசுகிறது சிலம்பு.
    முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது; அடிகள் நீரே அருளுக (சிலப்பதிகாரம்-பதிகம் : 61-62) என்ற சாத்தனார் கூற்றிற்கு இணங்க இளங்கோ தம் காப்பியப் படைப்பை மூவேந்தர்க்கும் உரியதாகவே படைத்துள்ளார், சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம் குறிப்பிடுவது போலச் சிலம்பின் தொடக்கமும் அரசியல்; முடிவும் அரசியல் என்ற நிலையில், அரசியலோடு பின்னிப் பிணைந்திருக்கிறது சிலப்பதிகாரம். புகார், மதுரை, வஞ்சி எனக் காண்டப் பெயர்களை அமைத்து, மூவேந்தர்களையும், மூன்று நாடுகளையும், அவற்றின் தலைநகரங்களையும் ஒருங்கு இணைக்கிறார் இளங்கோ. மேலும் பத்தினி வழிபாட்டில் தமிழ் மன்னர்களை மட்டுமன்றிப் பிறநாட்டு மன்னர்களையும் இணைத்து ஒற்றுமைப் படுத்துகிறார்.
    அறியாது பிழை செய்த பாண்டியன் தன் உயிரைக் கொடுத்து நீதியை நிலை நாட்டுகிறான்.
    வல்வினை வளைத்த கோலை மன்னவன் 
    செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது 

            (சிலப்பதிகாரம்: 25: 98-99)
அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் (சிலப்பதிகாரம்-பதிகம்: 55) என்ற காப்பிய அறம் மதுரைக் காண்டத்தில் எடுத்துரைக்கப்படுகிறது. பாண்டிய மன்னர்களின் நேர்மை, நீதி தவறாத ஆட்சிமுறை இ்ங்கு விளக்கப்படுகிறது. ‘நற்றிறம் படராக் கொற்கை வேந்தேஎன்றும், ‘தேரா மன்னாஎன்றும் கண்ணகி பாண்டிய மன்னனைப் பழித்தும் கூட, அவன் அமைதியாகக் கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்றுஎன்று கூறுவது அவனது நேர்மைக்கு - செங்கோன்மைக்கு எடுத்துக்காட்டு. நடுவுநிலையோடு வழக்கைக் கேட்டுத் தன் தவறு உணர்ந்து உயிரையே விடுகிறான் பாண்டியன்.
    அறியாது பசுவின் கன்றினைக் கொன்ற இளவரசனைப் பலிகொடுத்துப் பசுவின் துயர்களைந்த மனுநீதிச் சோழனைப் பற்றிய குறிப்பைச் சிலப்பதிகாரத்தில் பார்க்கிறோம். தமிழர் திறம் பழித்த வட ஆரிய மன்னரை வெற்றி கொள்கிறான் சேரன் செங்குட்டுவன். வடநாட்டுப் போர் தொடங்கத் திட்டமிட்ட சேரன் தூது அனுப்ப எண்ணுகிறான். ஆனால் வஞ்சி நகரில் முரசு அறைந்து அறிவித்தாலே போதும்; செய்தி வடநாடு எட்டிவிடும் என்கிறான் அமைச்சன். இது நாட்டில் பிறநாட்டு ஒற்றர்கள் நிறைந்திருந்ததைக் காட்டுகிறது. அரண்மனையைச் சுற்றி அகழி இருந்ததையும் கோட்டை மதிலில் பல்வேறு வகையான போர்க் கருவிகள் பொருத்தப் பட்டிருந்ததையும் மதுரைக் காண்டத்தில் காண்கிறோம். அரசனுடன் புலவர் பெருமக்களும், பட்டத்து அரசியும் உடன் இருந்து அரசியல் முடிவுகளை எடுத்தமை சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை எடுக்க முடிவு செய்ததன் மூலம் அறியலாம்.
    பேரரசின் கீழ் ஆட்சி செய்து வரும் சிற்றரசர்களும் , குறுநில மன்னர்களும் பிறநாட்டு மன்னர்களும் திறை செலுத்திய செய்தியைச் சிலம்பு தெரிவிக்கிறது. அதோடு மன்னனைக் காண வரும் மக்களும் குறுநில மன்னர்களும் காணிக்கைப் பொருளுடன் வந்து அரசனைக் கண்டு வாழ்த்துவதும் அரசியல் வழக்கமாக இருந்திருக்கிறது. போரில் புறமுதுகு காட்டி ஓடியவர்களையும், தவக்கோலம் பூண்டு உயிர் பிழைத்துச் சென்றவரையும் தாக்குவது போர் அறம் அன்று என்பதையும் சிலம்பு சித்திரிக்கிறது. இப்படி எத்தனையோ பல அரசியல் செய்திகளைச் சிலம்பின் வழி அறியலாம். இப்படிப் பல சிறப்புக்களைச் சொன்னாலும், தமிழகத்தில் மூவேந்தர்களும் ஒற்றுமையாக இல்லை என்ற உண்மையைப் பதிவு செய்யவும் இளங்கோ தவறவில்லை; அதற்காகவே-ஒற்றுமை உணர்வை வளர்க்கவே அவர் சிலம்பைப் படைத்தார் எனலாம்.
2.3.2 சமயம்
    சிலப்பதிகாரத்தில் சமணம், பௌத்தம், சைவம், வைணவம் ஆகிய சமயச் சிந்தனைகள் நிறைந்து காணப்படுகின்றன. கவந்தியடிகளையும் சாரணர்களையும் படைத்து, அவர்கள் வாயிலாகச் சமண சமயக் கருத்துகளை வெளியிடுகிறார். ஆய்ச்சியர் குரவை என்னும் காதை திருமால் வழிபாட்டை எடுத்துரைக்கிறது. குன்றக்குரவை முருக வழிபாட்டைப் பேசுகிறது. வேட்டுவவரி கொற்றவை வழிபாட்டைச் சிறப்பிக்கிறது. மாதவி, மணிமேகலை துறவு மூலம் பௌத்தக் கோட்பாடுகள் சிறப்பிக்கப்படுகின்றன. இவை தவிர இந்திரவிகாரம், மணிவண்ணன் கோட்டம், இலகொளிச் சிலாதலம், நிக்கந்தக் கோட்டம், நிலாக்கோட்டம், ஊர்க்கோட்டம் எனப்பல கோவில்கள் இருந்ததைச் சிலம்பு சுட்டுகிறது. இவை பல்வேறு சமயக் கடவுளருக்குரிய கோயில்கள் ஆகும். இப்படிப் பல சமயங்களை - சமயக் கருத்துகளை விருப்பு வெறுப்பு இன்றி எடுத்துரைக்கும் இளங்கோவடிகள், பத்தினி வழிபாடு என்ற ஒன்றில் அனைத்துச் சமயங்களையும், சமயக் குரவர்களையும் ஒருங்கிணைக்கிறார். இது இளங்கோவின் தனிச் சிறப்பாகும்.
2.3.3 சமூக வாழ்வு
    இந்திய சமூகம் ஒரு சாதியச் சமூகம் என்பது அனைவரும் அறிந்ததே. இச்சாதியச் சமூகம் அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்ற முறையிலும் இனக்குழுக்களான குறவர், ஆயர் வேட்டுவர் என்ற நிலையிலும் சிலம்பில் பேசப்படுகிறது. கோவல-கண்ணகியர் பெருவணிக குல மக்கள்; இவர்தம் வாழ்வியல் வளத்தொடு கணிகையர் குலம் இணைகிறது. பெருவணிகர் பற்றிப் பேசும் சிலம்பு சிறுவணிகர்களான அப்பம் விற்போர், பிட்டு விற்போர், பூவிலையாளர், இறைச்சி விற்போர் பற்றியும் பேசுகிறது. பொன்கடை வீதி, இரத்தினக்கடை வீதி, தானியம் விற்கும் கூலவீதி, துணி விற்கும் அறுவை வீதி, நாளங்காடி (பகல் நேரச் சந்தை) அல்லங்காடி (இரவு நேரச் சந்தை) எனப் பெருநகர் ஒரு பெரும் வணிகக் கூடமாகத் திகழ்ந்ததைச் சிலம்பு விரிவாகப் பேசுகிறது. இந்நகர்ப்புற நாகரிக வளர்ச்சியின் ஒரு கூறாகப் பரத்தையர் வீதி தனியாக இருந்ததையும் சிலம்பு எடுத்துரைக்கிறது. நகர அமைப்பே பொருளாதார நிலை, உயர் பதவி ஆகிய அடிப்படையில் அமைந்துள்ளதை இந்திர விழவூரெடுத்த காதை வாயிலாகப் பேசுகிறார் இளங்கோவடிகள். இவ்வகையில் குறிப்பிடத்தக்கது பட்டினப்பாக்கம், மருவூர்ப்பாக்கம் என்ற புகார் நகர அமைப்பு ஆகும். வணிகரில் பெருவணிகர் இருக்கிற இடம் பட்டினப்பாக்கம்; சிறு வணிகர் வாழிடம் மருவூர்ப்பாக்கம்; உயர் படைத்தளபதிகள் வாழிடம் பட்டினப்பாக்கம்; சாதாரணப் படைவீரர்கள் இருப்பிடம் மருவூர்ப்பாக்கம்; கணிகையரில் தலைக்கோல் பட்டம் பெறும் கணிகையர் வாழிடம் பட்டினப்பாக்கம்; சாதாரண கணிகை வாழிடம் மருவூர்ப்பாக்கம்.
    கோவலன்-கண்ணகி திருமணம் கூட நகர்ப்புற நாகரிகத்தின் அடிப்படையில் சடங்குகள் கொண்டதாக அமைகின்றது. மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம் (சிலப்பதிகாரம்: 1: 52-53) வந்து திருமணம் நடக்கிறது; மணிமேகலைக்குப் பெயர் சூட்டும் விழாவில் ஆயிரம் கணிகையர் வாழ்த்துகின்றனர்; மிகப் பெரிய அளவில் தானம் செய்கிறான் கோவலன். இறந்தோர்க்காகக் கங்கை நீராடி நீர்க்கடன் செய்கிறான் அரசன். இந்திரவிழா புகார் நகரில் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. அப்போது பல்வேறு கடவுளர்களுக்கு வழிபாடு நடக்கிறது. தலைக்கோல் பட்டம் பெற்ற மாதவி விழாவில் ஆடுகிறாள். இவை அனைத்துமே நகர்ப்புற நாகரிக வாழ்வின் வெளிப்பாடாக அமைகின்றன.
    இவையன்றி நாட்டுப்புற மக்களின் வாழ்வியல் முறையும் சிலம்பில் சிறப்பிடம் பெறுகின்றது. வேட்டுவர்களின் கொற்றவை வழிபாடு, ஆய்ச்சியர்களின் கண்ணன் வழிபாடு, குன்றக் குறவர்களின் வேலன்-வள்ளி வழிபாடு, அம்மக்களின் ஆடல் பாடல்கள் முதலானவை நாட்டார் வாழ்வியலைச் சித்திரிப்பன. கோவலர் வாழ்க்கை குறையற்றது எனக் கவுந்தியடிகளால் சிறப்பிக்கப்படுகின்றது; வேட்டுவ மகள் சாலினி, தெய்வம் ஏறப்பெற்று, அம்மக்களால் தெய்வமாகவே வழிபடப் படுகின்றாள். வேட்டுவ மக்கள் கொற்றவைக்கு உயிர்ப்பலி கொடுப்பதும் தம்மையே பலிதருவதும் வழக்கமாக இருந்திருக்கின்றன.
    கோவல-கண்ணகியரைத் தனிமனைப்படுத்தும் நிகழ்ச்சி அக்காலத்தே தனிக்குடும்ப வாழ்க்கை முறை வழக்கில் இருந்துள்ளதைத் தெளிவுபடுத்துகிறது.
    அரசனும் அரசமாதேவியரும் ஆடம்பரமாக வாழ்ந்தனர். பாண்டிமாதேவி தான் கண்ட கனவினை அரசனுக்குத் தெரியப்படுத்தப் புறப்பட்டுவரும் காட்சி அவர்தம் ஆடம்பர வாழ்வுக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு. இங்குப் பல்வேறு மகளிரும் பணியாட்களும் எண்ணற்ற அணிகலன்களையும், மணப்பொருட்களையும், ஒளி விளக்குகளையும் ஏந்திச் செல்கின்றனர். ஆடி (கண்ணாடி) ஏந்தினர்; கலன் ஏந்தினர்; அவிர்ந்து விளங்கு அணியிழையினர்; கோடி எந்தினர்; பட்டு ஏந்தினர்; கொழுந்திரையலின் செப்பு ஏந்தினர் (சிலப்பதிகாரம்: 20: 13-) என்று இவ்வாறு இளங்கோ காட்டும் காட்சி அரசியரின் பெருவாழ்வின் விளக்கமாக அமைகின்றது. அரண்மனைப் பொற்கொல்லனை அறிமுகம் செய்கிறபோதும் கூட, அவன் நூறு பொற்கொல்லர்கள் பின்வர ஆடம்பரமாக வருவதாக இளங்கோ காட்டுகிறார். அதே நேரத்தில் துறவியர் எளிமையான வாழ்க்கை வாழ்ந்ததும் இங்குக் குறிப்பிடப்படுகிறது. இவர்களுக்குச் சாபமிடும் ஆற்றலும், வருவதுணரும் ஆற்றலும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இங்ஙனம் அரசன் முதல் ஆண்டிவரை பல்வேறு தளத்திலுள்ள மக்களின் வாழ்வியல் களஞ்சியமாகச் சிலம்பு திகழ்கிறது.
2.3.4 கலை
    நாகரிகத்தின் வெளிப்பாடே கலை; இயல், இசை, நாடகம், கூத்து, கோயிற்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை எனப் பல்வேறு கலைகள்-கலைஞர்கள்-கலைவாழ்வு சிறந்து விளங்கியமையைச் சிலப்பதிகாரம் வழி அறிகிறோம். கோயில்கள் கோட்டம், நியமம், விகாரம், சிலாதலம் எனப்பல பெயர்களில் வழங்கப்பட்டன. கண்ணகிக்குச் சிலைவடித்தமை, கருங்கல்லில் சிலை செய்த செய்தியைப் புலப்படுத்துகிறது. சிலம்பின்அரங்கேற்று காதை தமிழர்தம் இசைக்கலை, நாட்டியக் கலைக்குச் சிறந்த சான்றாகும். நாட்டியக் கலையில் வேத்தியல்-பொதுவியல் என இருவகை இருந்தமை தெரிகிறது. இங்குப் பாடல் ஆசான் இயல்பு, யாழாசிரியன் இயல்பு, குழல் வாசிப்பவன் இயல்பு, தண்ணுமை முழங்குவோன் இயல்பு என இசைக் கலைஞர்களின் இயல்பு தெளிவாக விளக்கப்படுகிறது. மாதவியின் நாட்டியத்திறன்-அவளது ஒற்றைக்கை-மற்றும் இரட்டைக்கை அவிநயம் பற்றிய விவரிப்பு-அதனால் அவள் தலைக்கோல் அரிவைஎன்ற பட்டம் பெற்றது, நாட்டிய அரங்கம் (மேடை, விளக்குகள், திரைகள்) பற்றிய விளக்கம்-ஆகிய அனைத்தும் சிலப்பதிகாரம் எழுந்த காலத்தில் இக் கலைகள் பெற்றிருந்த செல்வாக்கினை அறியத் துணைபுரிகின்றன. இவையன்றி மாதவி கடவுளர் வடிவுகொண்டு ஆடிய பாண்டரங்கம், குடை, துடி முதலான 11-வகைக் கூத்துகளும், கோவலன் முன்னின்றாடிய காட்சிவரி, தேர்ச்சிவரி, புன்புறவரி முதலான எண்வகை வரிக்கூத்துகளும் தமிழர்தம் கூத்துக்கலைக்குச் சிறந்த சான்றாகும். அதோடு இன்றைய சாமியாட்டம் போன்று சாலினி தெய்வமுற்று ஆடிய கூத்தும், ஆய்ச்சியர் எண்மர் வட்டமாக நின்று ஆடிய குரவைக் கூத்தும் நாட்டுப்புற மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த கூத்து வகைகளைப் புலப்படுத்துவன. கண்ணகி-பாண்டிமாதேவி சிலம்பு மற்றும் மாதவி அணிந்த அணிகலன்கள் பற்றிய விவரிப்பும் அக்கால நுண்கலைகளின் திறத்திற்குச் சான்றாகின்றன. இவ்வாறு, சிலம்பு ஒரு கலையின் களஞ்சியமாகத் திகழ்வதை அறிகிறோமன்றோ!
2.3.5 நம்பிக்கைகள்
    கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும், எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன (சிலப்பதிகாரம்: 5: 237,239) என்பதில் பெண்களுக்கு இடக்கண் துடித்தால் நன்மையும், வலக்கண் துடித்தால் தீமையும் ஏற்படும் என்ற நம்பிக்கை இருந்தது புலப்படுகிறது. கோவலன் கொல்லப்பட்ட அன்று குடத்துப்பால் உறையாது இருத்தல் முதலானவற்றை ஆய்ச்சியர்கள் தீய சகுனங்களாகக் கொள்கின்றனர். கோவல-கண்ணகியர் தாயரின் மறுபிறப்புப் பற்றிய செய்தி-பிறவிகள் தொடரும் என்ற நம்பிக்கையை எடுத்துரைக்கிறது. இறைவனுக்கு விழா எடுக்கவில்லையானால் தீமை நிகழும் என்ற நம்பிக்கை வேட்டுவ வரிமூலம் சுட்டப்பெறுகிறது. வேட்டுவ வரி வேடர்களின் பலி கொடுக்கும் வழக்கத்தை எடுத்துரைப்பதோடு, தன்மூலம் கொற்றவை வெற்றி தருவாள் என்ற நம்பிக்கை இருந்ததையும் காட்டுகிறது. பத்தினிக் கடவுளுக்காகப் பாண்டியன் வெற்றிவேற் செழியன் ஆயிரம் பொற்கொல்லர்களைப் பலியிட்டுச் சாந்தி செய்தான் என்ற செய்தியும் இத்தகைய நம்பிக்கையைத் தெரிவிக்கிறது. கனவு பலிக்கும் என்ற நம்பிக்கை இருந்ததைக் கோவலன், கண்ணகி, பாண்டிமாதேவி ஆகியோர் கண்ட கனவுகள் புலப்படுத்துகின்றன.
2.4 சிலப்பதிகார இலக்கியச் சிறப்பு
    இயல், இசை, நாடகம் கலந்தமைந்த சிலப்பதிகாரத்தின் இலக்கியச் சிறப்புக் காரணமாக அதை நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றார் பாரதி. கவிதைச் சுவையும், நிகழ்வுகளும், பாத்திரப் படைப்பும் சிறந்தமைந்த காப்பியச் சுவை கொண்டது சிலப்பதிகாரம். இங்குச் சில எடுத்துக் காட்டுகள் கொண்டு அவற்றைக் காணலாம்.
2.4.1 இலக்கிய நயம்
    தமிழில் தோன்றிய முதல்காப்பியம் சிலப்பதிகாரம் என்பது மட்டும் அன்று அதன் சிறப்பு; இலக்கிய நயத்திலும் தரத்திலும் சுவையிலும் கூட முதன்மை பெற்று விளங்குகிற ஓர் அருந்தமி்ழ்க் காப்பியம் சிலம்பு. சிலப்பதிகாரம் என்ற முழுமையான காப்பியத்தைச் சுவைக்க-ரசிக்க இதோ ஒரு சான்று:
    சிலம்பின் முதல் காதை மங்கல வாழ்த்துப் பாடல். அதனை எவ்வளவு மங்கலமாகத் தொடங்குகிறார் பாருங்கள்.

    திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் 
    கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் 
            குடைபோன்று இவ் 
    அங்கண் உலகளித்த லான்.


    ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் 
    காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு 
    மேரு வலம் திரிதலான்


    மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் 
    நாமநீர் வேலி உலகிற்கு அவன்அளிபோல் 
    மேல்நின்று தான்சுரத்த லான் 
            (சிலப்பதிகாரம்:1: 1-9)
(திங்கள் = நிலவு; போற்றுதும் = போற்றுவோம்; கொங்குஅலர் தார் = தாது நிறைந்த மலர்மாலை; சென்னி = சோழமன்னன்; அங்கண் = அழகிய இடம்; ஞாயிறு = சூரியன்; திகிரி = ஆணைச்சக்கரம்; பொற்கோட்டு = பொன் மயமான சிகரம்; மழை = மேகம்; நாமநீர் = அச்சம் தரும் கடல்;அளி = கருணை)
எனத் தொடங்குவதில் எத்தனை நயங்கள் பாருங்கள். ‘திங்களை முதலில் கூறினார், இது பெண்மைக்கு முதன்மை தரும் காப்பியம் ஆதலால்என விளக்கம் கூறுவர். திங்கள் மங்கலமான சொல் என்பதால் முதலில் கூறினார் என்பர். இன்றைய திறனாய்வாளர்கள் திங்கள், ஞாயிறு, மழை ஆகியவற்றை வாழ்த்துவது இயற்கை வாழ்த்து; இயற்கையில் இறைவனைக் கண்டவர்கள் தமிழர்கள். எனவே இவை இறைவாழ்த்து என்கின்றனர். அரசனையே இறைவனாகக் கண்ட இனம் தமிழ் இனம்; எனவே இவை அரசவாழ்த்து என்கின்றனர். சோழனுடைய வெண்கொற்றக் குடை போல் இருப்பதால் திங்களைப் போற்றுகிறார். அவன் ஆட்சிச் சக்கரம் போல் இமயத்தை வலம் வருவதால் ஞாயிற்றைப் போற்றுகிறார். அவன் கொடைபோன்று மேல்நின்று பொழிவதால் மழையைப் போற்றுகிறார். எனவே இவை அரசியல் வாழ்த்தே என்பர். திங்கள், ஞாயிறு, மழை ஆகிய இவை மூன்றும் முக்குடை; முக்குடை அருகக் கடவுளுக்கு உரியவை; பின்னர் மதுரைக்காண்டத் தொடக்கத்தில் அருகக் கடவுளைத் திங்கள் மூன்றடுக்கிய திருமுக்குடைக்கீழ் இருந்த அறிவன்(சிலப்பதிகாரம்: 11: 1) என்கிறார். எனவே இத்தொடக்க வாழ்த்து அருகக் கடவுள் வாழ்த்தே என்பர்.
    இவை மட்டுமா? திங்கள், ஞாயிறு, மழை என்பன மூன்று காண்டப் பொருண்மையை உள்ளடக்கியுள்ளன என்பர்; திங்கள் என்பது தண்மை-குளிர்ச்சி; அது இன்பத்தின் குறியீடு. இன்ப வாழ்வைக் கருவாகக் கொண்ட புகார்க் காண்டத்துக்குத் திங்கள் குறியீடு. ஞாயிறு என்பது வெம்மை-அனல்; அது துன்பத்தின் குறியீடு; துன்பியல் சார்ந்த மதுரைக் காண்டத்துக்கு ஞாயிறு குறியீடு. மழை என்பது அருளின் குறியீடு; அது தெய்வம் சார்ந்தது; வஞ்சிக் காண்டம் தெய்வீகம் நிறைந்தது; ஆகவே மழை வஞ்சிக்காண்டத்துக்குக் குறியீடு.
    கண்ணகியின் வாழ்வின் மூன்று நிலைகளை (இன்ப-துன்ப-தெய்வநிலை) உணர்த்தும் குறியீடுகளாகவும் இவற்றைக் கொள்வர். இவை மட்டும் தான் இவ்வாழ்த்தில் அடங்கியிருக்கின்றனவா? இல்லை; இன்னும் எத்தனை எத்தனை பொருளையோ உணர்த்தும் வகையில் இது அமைந்துள்ளது; திங்கள் - கண்ணகி; ஞாயிறு - கோவலன்; மழை - மாதவி என மூன்று பாத்திரங்களைக் குறியீடாகக் கொண்டது என்பர். எப்படி? பொருத்திக் காண்போமா? பாருங்கள் எவ்வளவு நயமாக - பொருத்தமாக இது அமைகிறது!
    மழை பிறக்கிற மூலம் உவர்நீர்க் கடல்; குடிநீருக்குப் பயன்படாது வெறுத்து ஒதுக்கப்படுவது; அதுபோல மாதவி பிறப்பது உவர்நீர்க் கடல் போன்று சமுதாயத்தால் வெறுத்து ஒதுக்கப்படுகிற பரத்தையர் குலம்; உவர்நீர்க் கடலில் ஞாயிற்றின் வெம்மை பட உவர்நீர் நன்னீர் ஆவியாகிறது; மேகமாகிறது; அதுபோலக் கோவலனாகிய ஞாயிறு உவர்நீர் ஆகிய மாதவிபால் பட அவள் நன்னீர் மேகமாக - நல்ல குலமகளாக மாறுகிறாள்; திங்கள் - தண்மையின் குறியீடு; அது மழை மேகத்தில் பட, மேகம் மழையாகப் பொழிகிறது; அதுபோல் நன்னீர் மேகமாய மாதவிபால் கண்ணகியின் தண் ஒளிபட அவள் நல்ல மனைவியாக - தாயாக அமைகிறாள். எனவே திங்கள், ஞாயிறு, மழை என்பன சிலம்பின் முக்கியப் பாத்திரங்களின் குறியீடாக அமைந்து, அவற்றிற்கு இடையேயான புனிதமான உறவு நிலையையும் விளக்குகிற தன்றோ? இவ்வாறு ஆழ்ந்து பார்த்தால் பல பொருள் நயங்களை இவ்வாழ்த்துப் பாடலில் காண முடிகிறது.
2.4.2 நாடக முரண்
    நாடகத்தில் பின்னால் நிகழவிருக்கும் செயலை முன்னரே குறிப்பாகச் சுட்டிக் காட்டுவதும், முன்னர் நிகழ்ந்த நிகழ்ச்சியைப் பின்னர் எடுத்துரைப்பதுமான உத்திகள் கையாளப்படும்; நாடகத்தின் சுவையை, பார்வையாளர்களின் ரசனைத் திறனை அதிகரிக்க இவ்வுத்தி இடம்பெறும். நாடகக் காப்பியமான சிலப்பதிகாரத்திலும் இவ்வுத்தி சிறப்பிடம் பெறுகிறது. கோவல - கண்ணகியர் திருமண வாழ்த்தில்,
    காதலற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல் 
    தீது அறுக

            (சிலப்பதிகாரம்: 1: 61-62)
(காதலனைப் பிரியாமல், அவன் அவளைப் பற்றிய கை நெகிழாமல் வாழ்க) என வாழ்த்துகின்றனர். பின்னால் கோவலன் பிரியப் போகிறான் என்பதைக் குறிப்பாக இது முன் உணர்த்துகிறது.
இதே போன்று,
    கோவலனும் கண்ணகியும் வையை ஆற்றைக் கடக்கும் போதுவையை என்ற பொய்யாக் குலக்கொடி (சிலப்பதிகாரம்: 13: 170) கண்ணகிக்கு நேரப்போவதை அறிந்தவள்போலப் பூக்களாகிய ஆடையால் தன் கண்ணீரை மறைத்துக் கொண்டாள் எனவும்,


கோட்டை மீது பறந்த கொடிகள் வராதீர்கள் என்பதுபோல மறித்துக் கைகாட்டின எனவும் தற்குறிப்பேற்ற அணியின் மூலமாகப் பின்னர்வரும் அவலத்தை முன் அறிவிக்கும் இளங்கோவின் நாடகத்திறனை நன்கு உணரலாம்.
    இனிய இசைப்பாடல்கள் பலவற்றையும் தன்னகத்தே கொண்ட ஒரு தனிப்பெரும் படைப்பு சிலம்பு. கானல்வரி, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை ஆகிய காதைகளில் வரும் இசைப்பாடல்கள் ஆழ்வார், நாயன்மார்களின் பக்திப்பாடல்களுக்கு முன்னோடியாவன. இவற்றில் கவிதைச் சுவையும், இசைநயமும், ஆடல் சிறப்பும் நிறைந்துள்ளன.
2.5 காப்பியக் கட்டமைப்பு
    காப்பியம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றித் தண்டியலங்காரம் கூறுகிறது. அவ்வழியில் காப்பியக் கட்டமைப்பை இருவகையாகப் பகுக்கலாம்; ஒன்று புறநிலைக் கட்டமைப்பு (External Structure); மற்றது அகநிலைக் கட்டமைப்பு (Internal Structure). பரிச்சேதம், இலம்பகம், படலம், காதை, காண்டம், சருக்கம் போன்ற பாகுபாடுகளைப் புறநிலைக் கட்டமைப்பாகக் குறிப்பிடலாம்.
2.5.1 சிலப்பதிகாரத்தில் புறநிலைக் கட்டமைப்பு
    சிலப்பதிகாரப் புறநிலைக் கட்டமைப்பில் பெரும் பிரிவாகக் காண்டமும் சிறுபிரிவாகக் காதையும் அமைகின்றன. இவை பெரும்பாலும் நிலை மண்டில ஆசிரியப் பாவால் அமைவன. இவை பொருள் தொடர்நிலையாகவும் (Continuous Narration) சிலபோது தொடராத் தொடர்நிலையாகவும் (Discontinuous Narration) அமைகின்றன. மங்கல வாழ்த்துப் பாடலும் மனையறம்படுத்த காதையும் தொடர்நிலை; அடுத்துவரும் அரங்கேற்றுகாதை தொடராத் தொடர்நிலை. சில காதைகள் கலிவெண்பாட்டு, கொச்சகக்கலி என இசைப்பாட்டாக அமைவன; காதை என்ற தலைப்புப் பெறுவன அனைத்தும் உரை இலக்கிய (Narrative Poetry) வகையைச் சார்ந்தன. காப்பியப் பெயர், காண்டப் பெயர், காதைத் தலைப்பு இவை அனைத்தும், அவ்வப் பகுதியின் உட்பொருளுக்குப் பொருத்தமுற அமைவதோடு சிற்சில இடங்களில் குறியீட்டுப் பொருளையும் உணர்த்தி நிற்கி்ன்றன. காடுகாண்காதை என்ற மதுரைக் காண்ட முதல்காதையே குறியீட்டுப் பொருளில் கண்ணகி வாழ்வு சுடுகாடாக-அவலமாக மாறப்போவதை விளக்கி நிற்கிறது. இதே போன்று குன்றக்குரவை என்ற வஞ்சிக்காண்டத் தொடக்கக் காதைத் தலைப்பு கண்ணகி கடவுளாகப் போவதைக் குறியீடாகக் காட்டுகிறது.
2.5.2 சிலப்பதிகாரத்தில் அகநிலைக் கட்டமைப்பு
    காப்பிய அகநிலைக் கட்டமைப்புகளில் வருணனைக் கூறுகள், நிகழ்ச்சி விளக்கக் கூறுகள் குறிப்பிடத்தக்கன. வருணனைக் கூறுகளாக மலை, கடல், நாடு, வளநகர், சூரியன், சந்திரன் ஆகிய இருசுடர்த் தோற்றம் முதலானவற்றைத் தண்டியலங்காரம் குறிப்பிடுகிறது. இவ்வருணனைக் கூறுகள் பல சிலம்பில் உயர்வு நவிற்சி இன்றி இயல்பாக அமைகின்றன.இந்திரவிழவூரெடுத்த காதை-வளநகர் வருணனை; நாடுகாண் காதை-நாட்டு வருணனை; காட்சிக்காதை-மலை வருணனை; அந்திமாலைச் சிறப்புச்செய் காதை, வேனில்காதை- இருசுடர்த் தோற்றம் பற்றிய பொழுது வருணனைகள்; கடலாடு காதை-கடல் வருணனை. இவ்வருணனைக் கூறுகள் அனைத்தும், காப்பியக் கதை நிகழ்வுகேளாடு இணைந்து செல்வதே சிலம்பின் தனிச் சிறப்பாகும். வருணனைக்காகவே ஒருபடலம் அமைத்துச் செய்யும் செயற்கைத் தன்மையைச் சிலம்பில் காண முடியாது.
    அரசியல் நிகழ்வுகளாகத் தண்டியலங்காரம் சுட்டும் மந்திரம், செலவு, தூது, இகல், வெற்றி முதலான பற்றிய விவரிப்புகள் காட்சி, கால்கோள்,நீர்ப்படை, நடுகல், வாழ்த்து, வரந்தருகாதைகளில் சிறப்புப் பெறுகின்றன. (மந்திரம் = ஆலோசனை; செலவு = பயணம்; இகல் = பகைமை, போர்) கோவல-கண்ணகியர் திருமணம், மணிமேகலை பிறப்பு, மாதவி கோவலன் பாடிய கானல்வரி முதலியன இல்வாழ்வியல் நிகழ்வுகளாகச் சிலம்பில் சித்திரிக்கப் பெறுகின்றன.
    காப்பியம் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நாற்பயனையும் கூறவேண்டும் என்பது தண்டியலங்கார இலக்கணம். திருக்குறளில் அறம், பொருள், இன்பம் என்ற முப்பால் மட்டுமே பேசப்படுவது போலச் சிலம்பிலும் இம்மூன்று மட்டுமே பேசப்படுகின்றன. வடமொழி மரபான வீடுபேறு இங்கு இடம் பெறவில்லை. இது ஒன்றே சிலம்பு தமி்ழ் அறம், தமிழர் மரபு பற்றிப்பேசுவது என்பதைத் தெளிவுபடுத்தும்:
2.6 தொகுப்புரை
    இப்பாடப் பகுதியில் சிலப்பதிகாரம் என்ற ஒரு மிகச்சிறந்த தமி்ழ்க் காப்பியத்தின் சிறப்புகளைப் பார்த்தோம். தமிழில் தோன்றிய முதல் காப்பியம் என்பது மட்டுமன்றி முதன்மைக் காப்பியமாகவும் திகழ்வது சிலப்பதிகாரமே. வெர்ஜில் எழுதிய ஏனியட் என்ற ரோமானியக் காப்பியத்துடன் கலைத் தன்மையில் கருத்தியல் அடிப்படையில் ஒப்புநோக்கத் தக்கது சிலம்பு. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்; உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்; ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பன போன்ற பல உயர்ந்த கருத்துகளை-உண்மைகளை உள்ளடக்கியுள்ள காப்பியமே சிலப்பதிகாரம். சமய, சமூக, அரசியல் ஒருமைப்பாட்டை எடுத்துரைப்பது; தொட்ட தொட்ட இடமெல்லாம் இலக்கியச் சுவை மிக்க பகுதிகளைக் கொண்டது. நாடகத் தன்மை மிகுந்திருப்பதால் இதனை ஒரு நாடகக் காப்பியம் என்பர். சிலம்பின் ஆசிரியர் இளங்கோவின் வரலாறு, சிலம்பு எழுந்த காலம். சிலம்பின் கதைப்பின்னல், சிலம்பின் சமூக, சமய, அரசியல் சிந்தனைகள், சிலம்பு வெளிப்படுத்தும் கலைச்சிறப்பு, இலக்கிய நயம், சிலம்பின் காப்பியக் கட்டமைப்பு முதலான பகுதிகள் இங்கே சுருக்கமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
    இங்கு எடுத்துரைக்கப்பட்ட செய்திகள் மட்டும்தாம் சிலம்பின் சிறப்புச் செய்திகள் என்று எண்ணிவிட வேண்டாம். மாணவர்களின் தேவை கருதிக் கருத்துக்கள் இங்குச் சுருக்கமாகவே தரப்பட்டுள்ளன. இவற்றை ஒரு வழிகாட்டியாக எடுத்துக் கொண்டு சிலம்பை மேலும் ஆழமாகக் கற்றால் அதன்பயன் பெரிது; சுவை இனிது; அதன் கருத்துக் கடலில் மூழ்கி முத்தெடுக்கலாம்; அதன் பயனை, பெருமையை, நயத்தைப் பன்னாட்டு அன்பர்களுக்கும் எடுத்துக் காட்டுங்கள்; அதுவே சிலம்பைக் கற்றதன் பயன் எனலாம்.


No comments:

Post a Comment