Sunday, May 26, 2013

2012ஆம் ஆண்டில் உலக சனத்தொகை




 2012ஆம் ஆண்டில் உலக சனத்தொகை 7 பில்லியன்; வளப்பற்றாக்குறை ஏற்படக்கூடிய சாத்தியம்: அமெரிக்கா
2012ஆம் ஆண்டு உலகத்தின் சனத்தொகை 7 பில்லியனை எட்டிவிடுமென்பதால் இயற்கை வளங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாக அமெரிக்க அரசாங்கம் எதிர்வுகூறியுள்ளது.

உலகத்தில் தற்பொழுது 6.7 பில்லியன் மக்கள் வாழ்ந்துவருவதுடன், அமெரிக்கா 304 மில்லியன் சனத்தொகையுடன் உலகத்தில் மூன்றாவது சனத்தொகை கூடியநாடாக உள்ளது எனத் தெரிவித்திருக்கும் அமெரிக்க சனத்தொகை மதிப்பீட்டுப் பணியகம், சீனா மற்றும் இந்தியாவுக்கு அடுத்ததாக அமெரிக்கா இருப்பதாகக் கூறியுள்ளது.

இலங்கை 21,128,773 பேர் சனத்தொகையுடன் உலகத்தில் 53வது இடத்தில் உள்ளது.

உலகத்தின் சனத்தொகை 1999ஆம் ஆண்டு 6 பில்லியனைத் தாண்டியது. இதன்படி, 13 வருடங்களில் அது ஒரு பில்லியனால் அதிகரிக்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஒப்பீட்டு ரீதியில், 1800ஆம் ஆண்டுவரையில் உலக சனத்தொகை 1 பில்லியனை எட்டியிருக்கவில்லையெனக் குறிப்பிடும் சனத்தொகை மதிப்பீட்டுப் பணியகத்தின் நிபுணர் கார்ல் ஹஊப், அடுத்த 130 வருடங்கள் வரையில் சனத்தொகை 2 பில்லியனை எட்டியிருக்கவில்லையெனவும் கூறினார்.

“அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் தற்பொழுது சனத்தொகை அதிகரித்துச் செல்கின்றமையை இலகுவில் எம்மால் விளங்கிக்கொள்ளமுடியும்” ஹஊப் தெரிவித்துள்ளார்.

முன்னேற்றம் கண்டிருக்கும் மருத்துவ மற்றும் போசாக்கு போன்றவற்றினால் இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் சனத்தொகைப் பெருக்கம் ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டிருக்கும் அவர், கலாச்சார மாற்றங்கள் மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் பெண்கள் பாடசாலைகளுக்குச் செல்தல் மற்றும் வேலைத் தளங்களுக்குச் செல்தல் போன்றன அதிகரித்திருப்பதாகவும் கூறியுள்ளார். சனத்தொகைப் பெருக்கம் அதிகமாக இருந்தாலும் அதன் வளர்ச்சிவீதம் குறைவாகக் காணப்படுவதற்கு அவை முக்கிய காரணங்களாக அமைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக சனத்தொகை வருடாந்தம் 1.2 வீதத்தால் அதிகரிக்கிறது. எனினும், 2050ஆம் ஆண்டில் சனத்தொகை அதிகரிப்பு வீதம் 0.5 ஆகக் காணப்படும் என அமெரிக்க சனத்தொகை மதிப்பீட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. அப்பொழுது உலகத்தில் சனத்தொகை கூடிய நாடாக சீனா இருக்கின்றபோதும், இந்தியா அதனை மிஞ்சிச் செல்வதற்குச் சந்தர்ப்பம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

சீனா மற்றும் இந்தியா ஆகியவற்றின் பொருளாதார விருத்தியால் எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்கான கேள்வி அதிகரித்து அதனால் அவற்றின் விலைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து சனத்தொகைக் கணப்பீட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எனினும், பூமியில் எத்தனைபேர் வாழமுடியும் என்பது பற்றி இதுவரை கணிப்பிடப்படவில்லை என வெஷிங்டனில் செயற்பட்டுவரும் பூரூக்கிங்ஸ் நிறுவனத்தின் நிபுணர் வில்லியம் ப்ஃரே தெரிவித்துள்ளார். பூமியில் காணப்படும் வளங்களை மக்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே பூமியில் வாழக்கூடியவர்களின் சனத்தொகை அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.

கைத்தொழில்மய நாடுகள் ஏனைய வளங்களுக்குச் சமமான அளவு எரிபொருளையும் பயன்படுத்துகின்றன. எனினும், அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் சனத்தொகை அதிகரிப்புக்கு ஏற்ப எரிபொருள் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஆபிரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும்பாலான பெண் சராசரியாக 6ற்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக்கொள்கின்றனர். ஆபிரிக்கப் பிராந்தியத்தின் மாலி மற்றும் நைகர் ஆகிய நாடுகளில் ஒரு பெண் 7 குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதாக ஆய்வுகள்மூலம் கண்டறியப்பட்டுள்ளன

No comments:

Post a Comment