தொழிற்புரட்சி
தொழிற்புரட்சி என்பது 1750-1850ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் உலகளவில் ஏற்பட்ட மிகப்பெரிய தொழில்நுட்ப, பொருளாதார, நாகரிக மாற்றங்களைக் குறிக்கும்.
தொழிற்புரட்சி முதலில் இங்கிலாந்தில் தோன்றியது.பின்னர் 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் பரவியது. செருமனியில் 1871இல் பேரரசு நிறுவப்பட்ட பின்னரும், அமெரிக்காவில் உள்நாட்டுப் போருக்குப் பின்னரும், உருசியாவில் 1917ஆம் ஆண்டுக்குப் பின்னரும் தொழிற் புரட்சி தொடங்கியது.
இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகளில் 20ஆம் நூற்றாண்டில் தொழிற்புரட்சி தொடங்கியது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரே உலகெங்கும் தொழிற்சாலை முறை தோன்றியது.
தொழிற்புரட்சி மனித சமுதாயத்தின் பெரும் திருப்புமுனையாக அமைந்ததுடன், மனிதர்களின் அன்றாட வாழ்க்கையின் எல்லா கூறுகளிலும் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். தொழிற் புரட்சியின் காரணமாக ஒரு நாட்டின் பொருளாதாரம் வேளாண்மையை மட்டுமே சார்ந்து இருந்த நிலை மாறி, தொழிலகப் படைப்புகளின் பங்களிப்பும் கூடத் தொடங்கியது. தொழிற்புரட்சியின் விளைவாகத் தொழில்நுட்பக் கல்வி விரிவடைந்தது. பஞ்சு நூற்பாலைகளில் தொடங்கி மாந்தர்கள் கைகளால் செய்த பற்பல பணிகளை இயந்திரமயமாக்கி, பெரும் எண்ணிக்கையிலும், மலிவாகவும் பொருள்களைப் படைக்கப் புதுமுறைகள் உருவாக்கினார்கள். உற்பத்தித் துறை மட்டுமல்லாது அச்சுத்தொழில், வெகு மக்கள் தொடர்பு ஊடகங்கள், போக்குவரத்து, கல்வி, மருத்துவம் முதலான பல துறைகள் பெருகி சேவை என்பது தொழில் என்ற நிலைக்கு மாறியுள்ளது.
தொழிற்புரட்சி விளக்கம்
இங்கிலாந்தில் தோன்றிய தொழிற்புரட்சி மேற்கத்திய நாடுகளில் அரசியல் பொருளாதாரம் வாழ்வியல் மற்றும் தொழிற்சாலை, வர்த்தகம் ஆகியவற்றில் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தியது.ஜ1ஸ தொழிற்புரட்சி என்ற சொல் விவசாயம் சார்ந்த கைவினைத் தொழில் சார்ந்த உழைப்பாளிகளை மையப் படுத்திய பொருளாதார அமைப்பிலிருந்து இயந்திர உற்பத்தி, தொழிற்சாலைகள், மூலதனம் பரிவர்த்தனை போன்றவற்றை மையப்படுத்திய முறைக்கு மாறுவதைக் குறிப்பதாகும்.
முதலீட்டாளர்கள் கச்சாப்பொருளைச் சேகரித்து அதனைச் செய்பொருட்களாக்க கைவினைஞர்கள் மற்றும் கலைஞர்களுக்கு விநியோகம் செய்தனர். வேறுபட்ட பல்வேறு இடங்களில் புதிய கண்டுபிடிப்புகள் தோன்றியதால் இயந்திரங்கள் உருவாயின.
தொழிற்புரட்சி என்ற சொல் புதிய அறிவியல் தொழில்நுட்ப மாற்றங்களை ஏற்றுக் கொண்டு செயல்பட்டு ஆலைகளில் பொருட்கள் பேரளவில் உற்பத்தி செய்ததை விளக்குவதற்குப் பயன்பட்டது. இயந்திரங்கள் உற்பத்தி முறையை முழுவதுமாக மாற்றியமைத்தன. இப்புரட்சி முழுவதுமாகப் பொருள் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டிருந்தது. வன்முறையின்றி, இரத்தமின்றி அமைதியான முறையில் தொழில் உற்பத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தியது. தொழிற்புரட்சி என்ற சொல்லை முதன் முதலில் பிளாங்கி (டீடயபெரi) என்ற பிரஞ்சு எழுத்தாளர் உருவாக்கினார்.
தோற்றுவாய்
18ஆம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை மக்கள் தங்கள் வீடுகளிலும் பட்டறைகளிலும் தங்கள் உள்ளூர் தேவைக்கேற்ற முறையில் பொருள்களை உற்பத்தி செய்தனர். இங்கிலாந்தில் 18-ஆம் நூற்றாண்டில் தொழிற்புரட்சிக்குச் சாதகமான சூழ்நிலை நிலவியது. இங்கிலாந்து கடல் போக்குவரத்திலும், காலனியாதிக்கத்திலும் முதன்மையான உலகநாடாக விளங்கியது. அதனுடைய கடல் வலிமையும், குடியேற்ற ஆதிக்கமும் அந்நாட்டின் தொழில் மற்றும் தொழிற்சாலைகளின் தீவிர வளர்ச்சிக்குத் தேவையான கச்சாப்பொருள்களையும், புதிய சந்தைகளையும் பெற்றுத் தந்தன. மேலும் கனிம வளம் போன்ற பல இயற்கைவளங்களைப் பிரித்தானியா கொண்டிருந்தது. அதனுடைய கடற்கரையமைப்பு மற்றும் பருவநிலை ஆகியவை தொழிற்சாலைகளுக்குச் சாதகமாக இருந்தன.
இங்கிலாந்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு தனியார்களது பெரும்பங்கும் தனிச்சிறப்பளித்தது. தொழிற்புரட்சியின்போது இங்கிலாந்தில் செய்யப்பட்ட இயந்திரங்கள் தரமானதாகவும், வலிமை வாய்ந்ததாகவும் இருந்தன. சமயக் கொடுமையின் காரணமாக ஸ்பெயின் மற்றும் பிரான்சிலிருந்து வெளியேறிய புராட்டஸ்டண்டு கைவினைஞர்கள் இங்கிலாந்திற்குக் குடியேறினர். இங்கிலாந்து அரசாங்கம் அவர்களுக்கு அடைக்கலமும் பண உதவியும் தந்து அதற்குப் பதிலாக அவர்களின் திறமையை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டது. இதனால் இங்கிலாந்தில் தொழிற்சாலைகளுக்குப் புத்துணர்ச்சி ஏற்பட்டது. தேவைப் பெருக்கத்தை ஈடுகட்ட உற்பத்தியின் வேகத்தைப் பெருக்கக் கூடிய வழிவகைகள் நாடப்பட்டன. எனவே பிரித்தானியாவில் பல்வேறு இடங்களில் பெருமளவில் தொழிற்சாலைகள் ஏற்பட்டு வளர்ச்சியடைந்தன.
வளர்ச்சி
1700களில் அகண்ட பிரித்தானியாவின் ஒரு பகுதியில் தொழிலாளர்களைச் சார்ந்திருந்த பொருளாதாரமானது இயந்திரங்களைச் சார்ந்த உற்பத்தி முறைக்கு மாறியது. இது துணி உற்பத்தித் தொழிலின் இயந்திரமயமாக்கம், இரும்பு உற்பத்தித் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, தூய்மைப்படுத்திய நிலக்கரியின் கூடிய பயன்பாடு ஆகியவற்றுடன் தொடங்கியது. கால்வாய்கள், சாலைகள், தொடர்வண்டிப் பாதைகள் என்பன அமைக்கப்பட்டதும் வணிக விரிவாக்கத்துக்கு வழிகோலியது.
இரயில் வண்டிகள் இயக்கவும், இரயில் பாதைகளை உருவாக்கவும் ஜார்ஜ் ஸ்டீபென்சன் எடுத்த முயற்சிகள் தொழிற்புரட்சியின் முக்கியக் கூறுகளில் ஒன்றாக அமைந்தது. உற்பத்திக்குத் தேவையான பொருட்களைப் பெறவும், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களைப் பெறவும், சந்தைகளில் விற்கவும், தேவையான இடங்களுக்கு விரைந்து இடையூறின்றி பொருட்களை அனுப்பவும் இவருடைய கண்டுபிடிப்புகள் பெரிதும் உதவின. நீராவிப் பொறியின் கண்டுபிடிப்பினாலும் அதன் ஆற்றல் முதலில் நெசவு இயந்திரங்களிலும் பின்னர் இரும்பு தயாரித்தல் போன்றவற்றிலும் பயன்படுத்தப் பட்டதன் மூலமும் உற்பத்தி வெகுவாகப் பெருகியது.
முதல் தொழிற்புரட்சி 18ஆம் நூற்றாண்டில் தொடங்கி 1850ஆம் ஆண்டில் இரண்டாம் தொழிற்புரட்சியுடன் இணைந்தது. 1850ஆம் ஆண்டளவில், நீராவிக் கப்பல், நீராவித் தொடர்வண்டிகள் பின்னர் உள்ளெரி பொறிகள், மின் உற்பத்தி என்பவற்றின் அறிமுகத்தோடு தொழில்நுட்பமும், பொருளாதாரமும் வீறு கொண்டு வளர்ந்தன.
காலம்
தொழிற்புரட்சி நிகழ்ந்த காலப்பகுதியை வரலாற்றாளர்கள் வௌ;வேறு விதமாகக் கூறுவர். எரிக் ஹாப்ஸ்பாம் என்பவர், தொழிற்புரட்சி 1780இல் தொடங்கியது என்றும் 1830 அல்லது 1840களிலேயே முழுமையாக உணரப்பட்டது என்றும் கூறினார். டி. எசு. ஆசுட்டன் (வு. ளு. யுளாவழn) என்பவர் ஏறத்தாழ 1760க்கும், 1830க்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் இது தொடங்கியது என்கிறார். சான் கிளப்பாம் (துழாn ஊடயிhயஅ), நிக்கோலாசு கிராப்டு (Niஉhழடயள ஊசயகவள) போன்ற சில இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றாளர்கள் பொருளாதார, சமூக மாற்றங்கள் படிப்படியாகவே ஏற்பட்டனவென்றும், நீடித்த காலத்தில் நடந்தவற்றை விளக்குவதற்குப் புரட்சி என்ற சொல் பொருத்தமற்றது என்றும் சொல்கின்றனர். வரலாற்றாளர்கள் இடையே இது இன்னும் ஒரு விவாதத்திற்குரிய பொருளாகவே இருந்து வருகிறது.
தொழிற்புரட்சியும், தற்கால முதலாளித்துவம் சார்ந்த பொருளாதாரமும் தலை தூக்கும் முன்னர் மக்களின் ஒரு தலைக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி சீரானதாகவும் நிலையானதாகவும் இருந்தது வந்தது. தொழிற்புரட்சியின் விளைவால் முதலாளித்துவ நாடுகளில் ஒரு தலைக்கான பொருள் வளர்ச்சி மிகவும் வளர்ந்தது. பல பொருளாதார வரலாற்றாளர்கள், தொழிற்புரட்சி உலக வரலாற்றின் முக்கியமான ஒரு நிகழ்வு என்பதை ஏற்றுக்கொள்கின்றனர். மனித குலம் காட்டு விலங்குகளைப் பழக்கி, காட்டுச் செடிகளை வீட்டுப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்த நடைமுறைகளுக்குப் பிறகு, தொழிற்புரட்சியே மனித வளர்ச்சியில் நடந்த முக்கிய நிகழ்வு என்பது அவர்களின் கருத்து.
தொழிற்புரட்சிக்கான சூழல்கள்
18ஆம் நூற்றாண்டில் புதிய கண்டுபிடிப்புகள் வேளாண்மை முறைகளிலும் அமைப்புகளிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. பழமையான விவசாய முறைகள் வீழ்ச்சியடையலாயின. விவசாயம் முதலாளித்துவ அமைப்பாகியது. மேலும் நிலமானிய முதலீட்டாளர்கள் அடிமைத்தளத்திலிருந்து விடுவிக்கப்பட்டு பண்ணையாட்களாகவும், குத்தகைக்காரர்களாகவும் உயர்த்தப்பட்டனர். இங்கிலாந்தில் செய்யப்பட்ட பொருட்களுக்கான தேவை அதிகரித்துகொண்டே போனது. வர்த்தக விரிவாக்கத்தின் விளைவாகப் புதிய நாடுகள் மற்றும் கடல்வழி கண்டுபிடிப்புகள் ஏற்பட்டன. ஐரோப்பிய நாடுகளில் மக்கள் தொகை பரவல் வேகமாகியது. திறமையான விவசாயமுறை, சரியான உணவூட்ட விநியோகத்தால் ஊட்டச்சத்துப் பற்றாக்குறை நீங்கிப் பிறப்பு விகிதம் அதிகரித்தது. விஞ்ஞான வளர்ச்சி, உற்பத்தி முறையில் புரட்சியை ஏற்படுத்தியது. இத்துடன் பல இயற்கைச் சூழ்நிலைகளும் தொழிற்புரட்சிக்குச் சாதகமாயிருந்தன.
கிராமக் கைத்தொழில் உற்பத்தி மிக வேகமான வியாபர வளர்ச்சிக்கு அடித்தளமாயிற்று. வணிக விரிவாக்கத்தின் விளைவாகப் புதிய சந்தைகளைத் தேடினர். முதலாளிகளின் ஊக்கத்தினால் அறிவியல் அறிஞர்கள் இயந்திரங்களைக் கண்டுபிடித்தனர். பின் ஐரோப்பிய நாடுகள் தனது குடியேற்றங்களைச் சுரண்டின. இது முதலாளித்துவம் ஏற்பட வழிவகுத்தது. முதலாளிகள் அதிக பொருட்களை உற்பத்தி செய்து அதிக இலாபம் ஈட்ட விழைந்தனர். எனவே ஆலைகளை அமைத்தனர். புதிய இயந்திரங்களின் உதவியால் மக்கள் பொருட்களைப் பெருமளவில் உற்பத்தி செய்தனர். ஐரோப்பாவில் வேகமான தொழில்துறை மாற்றங்கள் ஏற்பட மேற்கண்ட காரணிகள் உதவின. மறுமலர்ச்சிக்கு முன்பு அறிவியல் அறிவு செயல்முறையில் பயன்படுத்திடாமல் இருந்தது. ஆனால் தற்போது விழிப்புணர்வு எல்லாத்துறைகளிலும் ஏற்படலாயிற்று.
அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள்
கைத்தொழிலிலிருந்து இயந்திரங்கள் மூலமான உற்பத்திக்கும், மனித அல்லது விலங்கு இயக்கச் சக்திக்கு மாற்றாக, நீராவி போன்ற வேறு உற்பத்தி சக்திகளுக்குமான மாற்றத்தினை தொழிற்புரட்சி கொண்டு வந்தது.
இயந்திரக் கருவிகள்
இயந்திரக் கருவிகள் இல்லாமல் தொழிற்புரட்சி நடந்திருக்க இயலாது. 18ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இயந்திரங்கள் இதற்கு மிகவும் உதவின. அதிலும் மரபு சார்ந்த வகைகள் என்று தற்போது வகைப்படுத்தப்படும் இயந்திரங்களான கடைசல் இயந்திரம், அலைவு மைய இயந்திரங்கள் போன்றவை பெரும் பங்கு வகித்தவை. கடைசல் இயந்திரம் தவிர்த்து அகழ் இயந்திரமும் உள் எரி பொறி, நீராவிப் பொறி போன்ற முக்கியப் பொறிகளில் துளையிடுவதற்குப் பயன்படுத்தப்பட்டன.
நெசவுத் துறை
• சாமுவேல் கிராம்டனின் 'நூற்கும் மியூல்'-1779
தொழிற்புரட்சியின் தொடக்க காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நூற்கும் ஜென்னியின் மாதிரி வடிவம்- வுப்பர்டல் அருங்காட்சியகம், ஜெர்மனி.
• புதிய இயந்திரக் கண்டுபிடிப்புகள்மூலம் வேகம்பெற்ற முதலாவது துறையாக நெசவுத்துறை விளங்கியது.
• 1733-ல் ஜான் கே 'பறக்கும் நாடா'வைக் கண்டுபிடித்தார். இது துணி நெய்யும் வேகத்தை அதிகரித்தது. இதனால் நூல் தேவை அதிகமாயிற்று.
பறக்கும் நாடா
• 1764-ல் ஜேம்ஸ் ஆர்கீரிவ்சுவின் 'நூற்கும் ஜென்னி' மற்றும் 1779-ல் சாமுவேல் கிராம்டனின் 'நூற்கும் மியூல்' ஆகியவை நூலிற்கான அதிகத் தேவையை ஏற்படுத்தியது.
• 1785-ல் கார்ட் ரைட் கண்டுபிடித்த 'விசைத்தறி'யினால் அதிக அளவில் துணி நெய்யும் முறை நடைமுறைக்கு வந்தது.
• எலி விட்னி என்பவர் 1793-ல் பருத்தியிலிருந்து விதைகளைப் பிரிப்பதற்காகக் 'காட்டன் ஜின்' என்ற கருவியைப் கண்டுபிடித்தார். இதன் மூலம் அதிக அளவு கச்சாப் பருத்தி, துணி உற்பத்திக்குக் கிடைத்தது.
• 1846-ல் எலியாஸ் ஓவே என்பவர் தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.
உற்பத்திக்கான இயக்கச் சக்திகளின் கண்டுபிடிப்பு
தொழிற்புரட்சியின் கண்டுபிடிப்புகளில் முதன்மையானது நீராவி இயந்திரமாகும். நியூகாமன் என்பவரின் நீராவி இயந்திரக் கண்டுபிடிப்பைப் பற்றிப் படித்த ஜேம்ஸ் வாட் என்பவர் புதிய நீராவி இயந்திரத்தை 1769-ல் உருவாக்கினார். இதனால் நெசவுத்தொழிற்சாலைகளில் குதிரை மற்றும் நீர் ஆற்றலுக்குப் பதிலாக நீராவி ஆற்றல் பயன்படுத்தப்பட்டது.
ஜார்ஜ் ஸ்டீபென்சன் நீராவி இரயில் இயந்திரத்தை 1825-ல் கண்டுபிடித்தார். 1830-ல் முதல் பயணியர் தொடர்வண்டி மான்செஸ்டருக்கும் லிவர்பூலுக்கும் இடையே விடப்பட்டது.
1814-ல் கண்டுபிடிக்கப்பட்ட நீராவி அச்சு இயந்திரத்தால் அச்சுப்பொருட்களின் விலை குறைந்தது. இதற்குப் பின்னர் மைக்கேல் பாரடே டைனமோவைக் கண்டுபிடித்தார். ஆபிரகாம் டெர்பி என்பவர் இரும்புத்தாது உருகுவதற்கு கரிக்குப் மாற்றாக நிலக்கரியைப் பயன்படுத்தும் ஆய்வுகளை மேற்கொண்டார். 1760-இல் ஜான் ஸ்மீட்டன் என்பவர் டெர்பியின் ஆய்வுடன் நீராற்றலை இணைத்து அதனை மேம்படுத்தினார்.
ஹம்பிரி டேவி கண்டுபிடித்த பாதுகாப்பு விளக்கினால் சுரங்க வேலை செய்வோர் பாதுகாப்புடன் பணிபுரிந்தனர்.
1784-இல் ஹென்றி கார்ட் இரும்பைத் துண்டாக்க உருளையைப் பயன்படுத்தும் புதிய முறையை அறிமுகப்படுத்தினார்.
1856-ல் பெர்ஸ்மர் இரும்பு எஃகு உற்பத்தி செய்யும் புதிய முறையைக் கண்ட்டுபிடித்தார். இக்காலம் முதல் நிலக்கரியும் இரும்பும் நீராவியுடன் இணைந்து செயல்பட்டதால் தொழில்மயமாதலுக்கு அடித்தளமாகியது.
போக்குவரத்துத் துறையில் புரட்சி
சுரங்கத்தொழிலில் ஏற்பட்ட மாற்றத்தால் பிற தொழிற்சாலைகளில் மாற்றம் விரைவுபடுத்தப்பட்டது. குறிப்பாகப் போக்குவரத்துத் தகவல் தொடர்புத் துறையில் வேகமான முன்னேற்றம் ஏற்பட்டது. மேம்பட்ட சாலைகள் அமைப்பதற்கு 'தோமஸ் டெல்போட்','ஜான் மெக்காப்' மற்றும் 'ஜான் மெக் ஆதம்' ஆகியோரின் பங்களிப்பு போற்றத்தக்கதாக இருந்தது. மெக் ஆதம் தரமான பாதை அமைக்கும் முறையைக் கண்டு பிடித்தார். அச்சாலைகள் மெக் ஆதம் சாலைகள் எனப்பட்டன.
பிரித்தானியா சாலைகள் ஆயிரக்கணக்கான உள்ளூர் பங்குகளினால் மிக எளிய முறையில் பராமரிக்கப்பட்டன. ஆனால் 1720-களில் சாலைகளின் மேம்பாட்டிற்காகவும் பராமரிக்கவும் வரி வசூல் செய்யப்பட்டது. இதனால் சில வரி வசூலிப்பு நிறுவனங்கள் உருவாயின. போக்குவரத்திற்கான முக்கியச் சாலைகள் அதிகரித்ததன் காரணமாகச் சாலைகளின் எண்ணிக்கையுடன் வரி வசூலும் அதிகரித்தது. 1750 களில் இவ்வரிவசூலிப்பு முறை விரிவடைந்து அனைத்து சாலைகளும் வரிவசூலிக்கும் நிறுவனங்களின் பொறுப்பின் கீழ் வந்தன.
கால்வாய்ப் போக்குவரத்து
இங்கிலாந்தில் 18ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஜான் பிரின்லே என்பவர் கால்வாய்களை இணைக்கும் முறையினைக் கண்டுபிடித்தார். இதனால் முக்கிய நகரங்களான பெர்மிங்ஹாம், லண்டன், லிவர்பூல், மான்செஸ்டர் போன்ற நகரங்கள் கால்வாய்கள்மூலம் இணைக்கப்பட்டது. நாட்டின் நடுப்பகுதிகளும் வடக்குப் பகுதிகளும் பெரிய தொழில் மையங்களாக இருந்தன. எனவே அவற்றை இலண்டனுடனும் மற்ற துறைமுகங்களுடனும் இணைப்பதற்காகக் கால்வாய்கள் வெட்டினார்கள். குதிரைகளைக் கொண்டும் தரையில் குதிரை வண்டிகளைக் கொண்டும் எடுத்துச் செல்வதையும் விடப் பல மடங்கு பொருட்கள் கால்வாய்கள்மூலம் கொண்டு செல்லப்பட்டன. இதனால் உற்பத்தி செய்த பொருட்கள் பயன்படும் இடங்களுக்கு எளிதில் கொண்டு சென்றார்கள். செலவும் குறைந்தது. கால்வாய் வலையமைப்பு இரயில் பாதைகள் அமைக்கப்படுவதற்கும் முன்னோடியாக இருந்தது.
தகவல் தொடர்பில் ஏற்பட்ட புரட்சி
சர் ரௌலண்ட் ஹில் என்பவர் பென்னி அஞ்சல் முறையினைக் கண்டுபிடித்ததன் விளைவால் வணிகர்கள் தங்கள் அருகிலும் தொலைவிலும் இருந்த தங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் நுகர்வோர்களை எளிதில் தொடர்பு கொள்ள முடிந்தது. கம்பியில்லா மின்விசைக் கம்பிமூலம் செய்திகளை அனுப்பும் தந்தி முறையை மோர்ஸ் கண்டுபிடித்தார். 1835-ல் முதல் மின்சார தந்தி முறை நடைமுறைக்கு வந்தது.
வேளாண்துறையில் புரட்சி
தொழிற்புரட்சி தோன்றுவதற்கு முன்பே வேளாண்மைத் துறையில் புரட்சி தோன்றிவிட்டது. நிலங்களைப் பண்படுத்தப் புதிய விவசாயக் கருவிகளான, எஃகுக் கலப்பைகள் மற்றும் கடப்பாரைகள் பயன்படுத்தப்பட்டன. 'டிரில்' என்ற விதை விதைக்கும் கருவியும், குதிரைமூலம் நிலங்களை உழும் மரக்கலப்பைகளுக்கு மாற்றாக எஃகுக் கலப்பைகளும் உழுவதற்குப் பயன்பட்டன. கதிர் அறுக்கவும், கதிரடிக்கவும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மண்ணை வளப்படுத்த 'பயிர் சுழற்சி முறை' நடைமுறைப் படுத்தப்பட்டது. மண்ணின் வளத்தை மீட்டெடுத்த 'குளோவர்(ஊடழஎநச) என்ற ஒருவகைச் செடியினைப் பயிரிட்டனர். இங்கிலாந்தின் நிலவுடைமையாளர்கள் தங்கள் பண்ணைகளை விரிவுபடுத்தத் துவங்கினர். கிராமங்களில் சிதறிக்கிடந்த நிலங்களை ஒன்றிணைத்துக் கூட்டுப்பண்ணையாக்கி உற்பத்தியைப் பெருக்கினர்.
கண்ணாடி தயாரிப்பு
கண்ணாடி தயாரித்தலில் 'உருளைப் பொறிமுறை' எனும் புதிய முறைமை பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விளைவாகத் தட்டையான நீண்ட கண்ணாடிகள் உருவாக்கப்பட்டன. இவை கட்டடங்களில் கண்ணாடிச் சுவர்கள் அமைப்பதற்கு பெரிதும் உதவின. லண்டனில் உள்ள படிக மாளிகை இவ்வாறான ஒரு கட்டட அமைப்பிற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
கடதாசி இயந்திரம்
1798 இல் நிக்கலஸ் லூயிஸ் ரொபேர்ட் என்பவரால் தொடர் கடதாசித் தாள்களைத் தயாரிக்கும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு காப்புரிமை பெறப்பட்டது.
தொழிற்புரட்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட கருவிகள்
தொழில்கள் கண்டுபிடிப்பாளர் பெயர் கண்டுபிடிப்புகள் ஆண்டு
(கி.பி)
1. நெசவுத்தொழில்
1. ஜான் கே பறக்கும் நாடா 1733
2.ஜேம்சு ஆர்கிரீவ்ஸ் நூற்கும் ஜென்னி 1767
3.ரிச்சர்ட் ஆர்க்ரைட் நீர்ச்சட்டம் 1769
4.சாமுவேல் கிராம்டன் நூற்கும் மியூல் 1779
5.எட்மண்ட் கார்ட்ரைட் விசைத்தறி 1785
6. எலி விட்னி காட்டன் ஜின் 1792
7. எலியாஸ் ஓவே தையல் இயந்திரம் 1846
2. இயக்க ஆற்றல்
1.தாமஸ் நியூகோமன் முதல் நீராவி இயந்திரம் 1769
2. ஜேம்ஸ் வாட் நீராவி இயந்திரம், நியூகான் இயந்திரம் 1825
3.ஜார்ஜ் ஸ்டீபென்சன் போக்குவரத்து நீராவி இயந்திரம் 1790
4.ராபர்ட் புல்டன் முதல் இரும்புக்கப்பல்,
கிளாரண்ட் என்ற நீராவிப்படகு 1807
5.ராபர்ட் ஸ்டீபன்சன் பறக்கும் ராக்கட், அச்சு நீராவி இயந்திரம் 1829
6. மைக்கேல் பாரடே டைனமோ 1814
3. நிலக்கரி மற்றும் இரும்பு எஃகுத் தொழில்
1. ஆபிரகாம் டெர்பி நிலக்கரியைப் பிரித்தெடுத்தல்
2. ஜான் ஸ்மீட்டன் டெர்பி ஆய்வு(மேம்படுத்தியது)ஜ21ஸ 1760
3. ஹம்பிரி டேவி பாதுகாப்பு விளக்கு 1816
4. ஹென்றிகார்ட் இரும்பைத் துண்டாக்கும் முறை, இரும்பு சுத்தப்படுத்தும் முறை 1784
5.பெரிஸ்மர் இரும்பை உருக்கும் முறை 1856
4.போக்குவரத்து
1. ஜான் மெட்காப் சாலை
2. ஜான் மெக் ஆதம் ஆதம் சாலைகள்
3. ஜான் பிரின்ட்லி கால்வாய்கள் இணைப்பு
5. தகவல் தொடர்பு
1.ரௌலண்ட் ஹில் அஞ்சல் முறை 1835
2. சாமுவெல் மோர்சு தந்தி அனுப்பும் முறை, முதல் மின் தந்தி 1838
3. சைரஸ் பீல்டு கடலுக்கடியில் மின்தந்திக்கான கம்பிவட இணைப்பு
மேலை நாடுகளில் தொழிற்புரட்சியின் சமூக விளைவுகள்
சமூக அமைப்பைப் பொறுத்த மட்டில், தொழிற்புரட்சியால் ஏற்பட்ட ஒரு முக்கிய விளைவு தொழிலதிபர்கள், வணிகர்கள் போன்றோரை உள்ளடக்கிய 'நடுத்தர மக்கள்' மேன்மையடைந்தது ஆகும். இவர்கள் முற்காலத்தில் இருந்த நிலக்கிழார்களையும் அதிகார மேல்மட்டத்தினரையும் தாண்டி முன்னேறினார்கள்.
சாதாரண உழைப்பாளிகளுக்கு ஆலைகளிலும் தொழிற்கூடங்களிலும் வேலைவாய்ப்பு கூடியது. ஆனால், வேலைச் சூழ்நிலை கடினமானதாகவும், வேலை நேரம் நீண்டதாகவும் அமைந்து, இயந்திரங்களுக்கு ஈடுகொடுக்க வேண்டியிருந்தது. 1900ஆம் ஆண்டுகளில் கூட ஐக்கிய அமெரிக்காவில் தொழிற்கூட வேலையாட்கள் எஃகுத் தொழிற்சாலைகளில் நாளுக்கு 12 மணி நேரமும் பிற தொழிற்சாலைகளில் 10 மணி நேரமும் பணியாற்ற வேண்டியிருந்தது. ஆனால் அவர்கள் பெற்ற ஊதியமோ அக்கால வாழ்க்கைத்தரத்துக்குத் தேவையான குறைந்தபட்ச ஊதியத்தில் 20-40 விழுக்காடு மட்டுமே என்றிருந்தது
தொழிற்புரட்சிக்குப் பிறகுதான் தொழிற்சூழல் கடினமானது என்று கூறமுடியாது. அதற்கு முன்னரே சமூகத்தில் சிறார் தொழில், மாசுபட்ட தொழிற்சூழமைவு, நீண்ட வேலை நேரம் இருந்ததுண்டு.
தொழிற்புரட்சியும் குழந்தைத் தொழிலாளர் முறையும்
ஒரு இளம் தொழிலாளி சுரங்கப்பாதை வழியே ஒரு நிலக்கரி வண்டியை இழுக்கிறார்.பிரித்தானியாவில் 1842இலும், 1844இலும் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் சுரங்கங்களின் நிலையை மேம்படுத்தியது.
தொழிற்புரட்சி மக்கள் தொகை வளர்ச்சிக்கு வழிவகுத்தது. குழந்தைச் சாவு குறைந்தது என்றாலும் குழந்தைப் பருவம் தாண்டி வாழும் வாய்ப்பு அதிமாக உயரவில்லை. கல்வி வாய்ப்பு பரவலாகவில்லை. எனவே குழந்தைத் தொழிலாளர்கள் பெருகினார்கள். வளர்ந்தோர் செய்யும் வேலைக்குச் சமமான வேலை செய்தாலும் சிறுவர்களுக்குச் சம ஊதியம் கொடுக்கப்படவில்லை. இயந்திரங்களை இயக்க அதிக உடல் வலிமை தேவைப்படவில்லை என்பதாலும், வேலை அனுபவம் பெற்ற வளர்ந்தோருக்குத் தட்டுப்பாடாக இருந்ததாலும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தினார்கள். குறைந்த சம்பளத்துக்கு சிறுவர்களிடமிருந்து வேலை வாங்க முடிந்ததால் 18,19ஆம் நூற்றாண்டுகளில், தொழிற்புரட்சியின் தொடக்க காலத்தில் சிறுவர்களின் உழைப்பு சுரண்டப்பட்டது. இங்கிலாந்திலும் இசுக்கொட்லாந்திலும் 1788ஆம் ஆண்டில் இருந்த 143 நீர் இயக்கப் பருத்தி ஆலைகளில் வேலை செய்த தொழிலாளர்களில் மூவரில் இருவர் குழந்தைத் தொழிலாளர்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கல்வி வாய்ப்பும் மக்கள் தொகையும் வளரத் தொடங்கிய நிலையில் குழந்தைத் தொழிலாளர் முறை பலரது கண்களை உறுத்தத் தொடங்கியது. வளர்ந்தவர்களின் வேலைச் சூழலைவிட மோசமான சூழலில், அவர்களைவிடக் குறைந்த ஊதியத்துக்கு (10-20மூ ஊதியத்துக்கு) சிறுவர்கள் வேலை செய்ய வேண்டியிருந்தது. நான்கு வயது சிறுவர்களைக் கூடப் பணிக்கு அமர்த்தினார்கள். வேலைத்தளத்தில் சிறுவர்களை அடிப்பதும், நீண்ட நேர வேலை வாங்குவதும் வழமையாக இருந்தது. நிலக்கரிச் சுரங்கத்தில் விடிகாலை 4 மணியிலிருந்து மாலை 5 மணி வரை சிறுவர்கள் வேலை செய்தனர். ஆபத்தான பணிச்சூழலில் களைப்பால் கண்ணயர்ந்த சிறுவர்கள் வண்டிப்பாதையில் விழுந்து உயிரிழந்ததும் உண்டு. நச்சு வளி வெளிப்பட்டதால் இறந்த சிறுவர் தவிர பல சிறுவர்கள் நுரையீரல் புற்றுநோயாலும் பிற நோய்களாலும் 25 வயதாகும் முன்னரே இறந்தனர். ஏழைகளின் பராமரிப்புக்காக இங்கிலாந்திலும் வேல்சிலும் வேலை இல்லங்கள் உருவாக்கப்பட்டன. அங்கு உறவுகளற்ற, கைவிடப்பட்ட சிறுவர்கள் 'ஏழை தொழில் பயில்நர்களாக' விலைக்கு விற்கப்பட்டனர். அதாவது, கூலி கொடுக்காமல் அச்சிறுவர்களிடமிருந்து கட்டாய வேலை வாங்கினார்கள். தங்க இடமும், உண்ண உணவும் மட்டுமே அவர்கள் பெற்றனர். வேலையின் கொடுமை தாங்காமல் ஓடிவிட்ட சிறுவர்களுக்குக் கசையடி கொடுக்கப்பட்டு, அவர்கள் மீண்டும் தங்கள் முதலாளிகளிடம் திருப்பி அனுப்பப்பட்டனர். மீண்டும் தப்பி ஓடிவிடாதவாறு அச்சிறுவர்களைச் சங்கிலியால் கட்டிப்போட்ட முதலாளிகளும் இருந்தார்கள்.
பெரும்பான்மையான சிறுவர் பஞ்சு ஆலைகளில் 'பொறுக்குநர்களாக' வேலைக்கு அமர்த்தப்பட்டனர். நூலை முறுக்கேற்றவும் துணி நெய்யவும் பயன்பட்ட எந்திரங்களுக்குக் கீழே சென்று, பஞ்சு மற்றும் நூல் துண்டுகளைப் பொறுக்குவதும் தரையை சுத்தப்படுத்துவதும் அவர்கள் வேலை. இருபுறமும் இருந்து வருகின்ற எந்திரங்கள் தங்களை நெருங்கியதும் சிறுவர் தரையில் படுத்துவிடாவிட்டால் தலை, உடல், விரல் பகுதிகள் துண்டுபடும் ஆபத்து நிலவியது. இவ்வாறு தரையில் ஊர்ந்து துண்டுகளைப் பொறுக்கிய சிறுவர்கள் வாரத்தில் ஆறு நாள்கள், ஒவ்வொரு நாளும் 14 மணி நேரம் வேலை செய்யவேண்டியிருந்தது.
சிறுமிகள் பலர் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் வேலை செய்தனர். தீக்குச்சி மருந்திலிருந்து வெளிப்பட்ட நச்சுப்புகை அவர்களின் உடல் நலத்தைப் பெரிதும் பாதித்தது. குறிப்பாகத் தோல் நோய்களும், தாடை எலும்பை உருக்குலைத்த ஒருவகை புற்றுநோயும் குழந்தைத் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டன.
கண்ணாடித் தொழிற்சாலைகளில் பணியாற்றிய சிறுவர்கள் பார்வை இழப்பதும், சூடு படுவதும் வழமையாக இருந்தது. மண்பாண்டத் தொழிற்சாலைகளில் நச்சு கலந்த மண்துகள்களை சுவாசிப்பதால் உடல் நலம் பாதிக்கப்பட்டது.
குழந்தைத் தொழிலாளர் தடுப்பு முயற்சிகள்
தொழிற்சாலைகளில் சிறுவர்கள் அனுபவித்த இன்னல்களைப் பற்றிய அறிக்கைகள் வெளியாயின. குறிப்பாக, நிலக்கரிச் சுரங்க வேலை, பஞ்சு ஆலை வேலை போன்றவற்றால் சிறுவர்கள் சந்தித்த பாதிப்புகள்பற்றிய விழிப்புணர்வு வளர்ந்தது.
நடுத்தர மக்களும் மேல்மட்ட மக்களும் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராகக் குரல் கொடுத்தனர். அரசியல்வாதிகளும் அரசும் குழந்தைத் தொழிலாளர் முறையைக் கட்டுப்படுத்த சட்டங்கள் இயற்ற முனைந்தனர். ஆனால் தொழிலதிபர்கள் அதை எதிர்த்தனர். தங்கள் தொழிற்சாலைகளில் சிறுவர்களுக்கு வேலை கொடுக்காவிட்டால் அவர்கள் பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான் என்று சிலர் வாதாடினர். சிறுவர்களுக்கான வேலைவாய்ப்பு வறுமை ஒழிப்புக்கு வழி என்றனர். பிறர் குறைந்த கூலிக்குக் கிடைக்கும் உழைப்பைக் கைவிட மனமில்லாதிருந்தனர்.
1833, 1834ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்தில் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புக்கான சட்டங்களை நிறைவேற்றினார்கள். அதன்படி, ஒன்பது வயதுக்குக் கீழ்ப்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதைத் தடை செய்தார்கள். இரவு வேலையைத் தடை செய்தார்கள். 18 வயதுக்குக் கீழ் உள்ள சிறுவர்களிடமிருந்து 12 மணி நேரத்துக்கு மேல் வேலை வாங்குவதைத் தடுத்தார்கள். சட்டங்கள் கடைப்பிடிக்கப்பட்டனவா என்று அறிய சோதனையாளர்களை நியமித்தார்கள். ஆனால், சோதனையாளர்கள் குறைவான எண்ணிக்கையிலேயே இருந்ததால் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது கடினமாகவே இருந்தது.
சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பின், சிறுவர்களையும் பெண்களையும் சுரங்கத் தொழிலில் ஈடுபடுத்தக்கூடாது என்று சட்டம் இயற்றினார்கள். இச்சட்டங்களின் விளைவாகக் குழந்தைத் தொழிலாளர் முறை சிறிது சிறிதாகக் குறைந்தது. என்றாலும், ஐரோப்பாவிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும் குழந்தைத் தொழிலாளர் முறை தொடரவே செய்தது.
வீட்டு வசதியும் வாழ்க்கைச் சூழமைவும்
தொழிற்புரட்சிக் காலத்தில் முதலாளிகளின் மாளிகைகள் ஆடம்பரத்திலும் செல்வக் கொழிப்பிலும் திளைத்தன. ஆனால் உழைப்பாளரின் இல்லங்களில் வறுமை நிலவியது. அவர்களது வீடுகள் சிறியனவாகவும் நெருக்கமாகவும் அமைந்தன. தனிக் கழிப்பறைகள் இருக்கவில்லை; சாக்கடைகளும் திறந்து கிடந்தன. கட்டடங்களில் ஈரக்கசிவுக்கும் குறையில்லை. இதனாலும் மாசடைந்த தண்ணீராலும் நோய்கள் பரவும் ஆபத்து தொடர்ந்து இருந்து வந்தது. எனினும் 19ஆம் நூற்றாண்டில் உழைப்பாளரின் வாழ்க்கைச் சூழலில் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியது. சாக்கடை அமைத்தல், சுற்றுச் சூழல் தூய்மை பேணுதல், வீடுகள் இடம் விட்டுக் கட்டப்படுதல் பற்றிப் பொதுநலச் சட்டங்கள் இயற்றப்பட்டு, செயலாக்கம் பெற்றது இந்த வாழ்க்கைச் சூழல் முன்னேற்றத்துக்கு வழிவகுத்தது.
தொழிற்புரட்சிக் காலத்தில் வேலை செய்த எல்லா உழைப்பாளர்களும் வறுமையில் வாடினார்கள் என்று சொல்லமுடியாது. பெருமளவில் 'நடுத்தர மக்கள்' எழுச்சியுற தொழிற்புரட்சி வாய்ப்பளித்தது. வழக்குரைஞர்கள், மருத்துவர்கள் போன்ற சிறப்புத் தகுதியினர் தோன்றத் தொடங்கினர். சுற்றுச் சூழல் தூய்மை மேம்பட்டது. நாட்டுப்புறங்களில் ஏற்பட்ட பஞ்சம் தொழிற்சாலைப் பகுதிகளில் ஏற்படவில்லை. இருந்தாலும், போதிய இட வசதியின்றி, நெருக்கமாக வாழ்ந்ததால் நகர்ப்புற உழைப்பாளிகள், குறிப்பாகச் சிறு குழந்தைகள், நோயுற்றனர். இட நெருக்கடியால் காச நோய், சுரங்க வேலையால் நுரையீரல் நோய்கள், அசுத்த நீரால் வாந்திபேதி, குடற்காய்ச்சல் போன்றவை பரவின.
தொழிற்புரட்சிக் கால இங்கிலாந்தில், 1844இல் ஆலைத் தொழிலாளர்கள் வாழ்க்கைச் சூழல் எந்நிலையில் இருந்தது என்பதை மார்க்சிய இணைநிறுவுநரான பிரெட்ரிக் எங்கெல்சு தாம் எழுதிய '1844 இங்கிலாந்தில் பாட்டாளி வர்க்கத்தின் நிலை' என்னும் நூலில் விரிவாக விவரித்துள்ளார்.ஜ30ஸ அந்நூலின் மறுபதிப்பு 1892இல் வெளியானது. அதற்கு எழுதிய முன்னுரையில் எங்கெல்சு இங்கிலாந்து நாட்டுத் தொழிலாளர்களின் வாழ்க்கைச் சூழலில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டதைக் குறிப்பிடுகிறார்.
தொழிற்புரட்சியின் விளைவுகள்
நீராவி ஆற்றலில் பெரிய பெரிய இயந்திரங்களை வேகமாக இயக்கி, குறைந்த நேரத்தில் ஏராளமானப் பொருள்களை உற்பத்தி செய்ய முடிந்தது.
கைத்தொழிலாக நடந்த குடிசைத் தொழில்கள் பின்தள்ளப்பட்டு, ஆலைத் தொழில் வேகமாக வளர்ந்தது.
தொழிற்புரட்சியின் விளைவாகத் தொழிற்சாலைகள் தோன்றின. இன்னொரு புறம் தொழிலாளர் வர்க்கம் தோன்றியது. தொழிற்புரட்சி தோன்றிய இடம் ஐரோப்பா என்பதால் ஐரோப்பா செழித்து வளர்ந்தது. உலகின் மற்ற நாடுகளைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் அளவுக்கு அது அசுர வளர்ச்சி அடைந்தது. உலகச் சந்தையின் தேவையின் பெரும்பகுதியை பிரான்சும், ஜெர்மனியும் பகிர்ந்து கொண்டன.
ஏனைய கண்டங்களிலும் தங்களுக்குக் கட்டுப்பட்ட குடியேற்ற நாடுகளைப் பிடித்து, அவற்றிலிருந்து மூலப் பொருட்களைத் திரட்டி வந்து, அவற்றைக் கொண்டு தங்களது ஆலைகளில் ஏராளமாக உற்பத்தி செய்து, உற்பத்தியான பொருட்களில் பெரும்பங்கை அக்குடியேற்ற நாடுகளில் விற்பதற்குத் தொழிற்புரட்சி வழிகோலியது.
முதலாளி – தொழிலாளி என்ற இரு புதிய வர்க்கங்களைத் தோற்றுவித்தது. சந்தைகள் பெருகின. போட்டிகள் வலுத்தன. பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்கள் ஆனார்கள். ஏழைகள் மேலும் மேலும் ஏழைகள் ஆனார்கள். ஏழைகளின் பெருக்கம் சேரிகளை உருவாக்கியது. ஐரோப்பா இரு அணிகளாகப் பிரிந்தது.
பிரான்சும், உருசியாவும் ஓர் அணியிலும் இதர நாடுகள் வேறு அணியிலும் சேர்ந்து கொண்டன. இச்சூழல் ஒரு உலகப்போரை நோக்கி நகர்ந்தது. சராசரி மனிதனின் மனத்தில் தன்னறிவு, தன்னம்பிக்கை, துணிவு போன்ற உணர்வுகள் சிதைந்தன. பதற்றம், அச்சம், அற்புதங்கள்மீதான நம்பிக்கை, குற்ற உணர்வு என்று பலவிதமான உணர்வுகள் தோன்றின. இந்த உணர்வுகள்தான் அக்காலத்திய கலை-இலக்கியங்களில் எதிரொலித்தன.
தொழிற்புரட்சியின் தாக்கங்கள்
சமூகத்தில் ஏற்பட்ட தாக்கம்
தொழிற்புரட்சி ஐரோப்பியர் வாழ்க்கையில் எல்லாவகையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. விவசாய உற்பத்தியில், வியாபார அமைப்புகளில், தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட மாற்றம் சமூகத்திலும், அரசியலிலும் புரட்சிகரமான விளைவுகளை ஏற்படுத்தியது.
கிராமப் பகுதியிலிருந்து மக்கள் தொழிற்சாலைகள் இருந்த நகரங்களுக்கு ஈர்க்கப்பட்டனர். அதனால் பல தொழில் நகரங்கள் உருவாயின. மக்கள்தொகைப் பெருக்கத்தால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. காற்று, நீர்,ஒலி போன்றவை மாசடைந்ததால் மக்களின் சுகாதாரம் பாதிக்கப்பட்டது. சிறுவர்களும் பெண்களும் பெருமளவில் குறைந்த கூலிக்கு ஆலைகளில் பணிபுரிந்ததால் தொழில் அதிபர்கள் பெருத்த இலாபம் ஈட்டினர். பெருமளவில் ஏற்பட்ட வேலையில்லாத் திண்டாட்டமும் குறைந்த கூலியும் சமூகத்தில் மிகப்பெரிய பிரச்சனைகளாக மாறின.
மேலும், பழைய சமுதாயப் பிரிவுகள் அழிந்து 'முதலாளி-தொழிலாளி' என்ற இரண்டு புதிய பிரிவுகள் தோன்றின. மக்களின் ஏழை-பணக்காரன் என்ற வர்க்கங்கள் பேசப்பட்டன. பல ஐரோப்பிய நாடுகளில் தொழிற்சாலைகள் வளர்ச்சியடைந்ததால், அவர்கள் வேறு வழியின்றி தங்களுக்கெனப் புதிய குடியேற்ற நாடுகளை அமைக்கவும், மற்ற கண்டங்களில் கச்சாப்பொருளைப் பெறவும், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை விற்கவும் உட்படுத்தப்பட்டனர். இவ்வாறாகக் காலனி தேடல் தீவிர காலனி ஏகாதிபத்தியத்திற்கு அடிகோலியது.
அரசியல் தாக்கம்
பெரிய நகரங்கள் தோன்றியதால் பராளுமன்ற சீர்திருத்தங்கள் தேவைப்பட்டது. பல பாராளுமன்ற சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. முதலாளிகளின் சுரண்டல்களிலிருந்து தொழிலாளர்களைக் காக்கவும, தொழிலாளர்களின் நலன்களை மேம்படுத்தவும் 1819,1833 மற்றும் 1837-களில் தொழிலாளர்களின் சட்டங்கள் இயற்றப்பட்டன. 1825-ஆம் ஆண்டு தங்கள் உரிமைகளைப் போராடிப் பெற 'தொழிலாளர் சங்கங்கள்' ஏற்படுத்தப்பட்டன. மேலும் போக்குவரத்துத் தகவல் தொடர்பு வாயிலாகத் தேசியம், பன்னாட்டு தேசியம் போன்ற கருத்துகள் தோன்றலாயின. அதனால் பொருளாதார அடிப்படையில் மக்களாட்சி அரசு தேவை அதாவது சமதர்மம்(சோசலிசம்) தேவை என்ற கருத்து தோன்றியது.
பொருளாதாரத் தாக்கம்
தொழிற்புரட்சி இங்கிலாந்தின் பொருளாதாரத்தை மாற்றியமைத்தது. உலகத்திலேயே அதிக முன்னேற்றமடைந்த நாடாக இங்கிலாந்து உருவானது. இங்கிலாந்து நாட்டு வருமானம் அதன் வளர்ச்சியடைந்த வாணிகத் தொடர்புகளால் அதிகரித்தது. குடிசைத் தொழில்கள், ஆலைகளுடம் போட்டியிட இயலாமல் நாளடைவில் அழிந்தன. ஆலைகளின் வளர்ச்சியால் மான்செஸ்டர், லங்காஷியர், பர்மிங்காம், செப்பீல்டு போன்ற பல புதிய தொழில் நகரங்கள் தோன்றின. முதலாளி-தொழிலாளி என்ற வர்க்கங்கள் தோன்றியதால் நாட்டின் ஒட்டு மொத்த முதலீடும் முதலாளிகளின் வசமானது.
புதிய கொள்கைகள்
தொழில்புரட்சியினால் அடிக்கடி பயன்படுத்துகின்ற பல அரசியல் சொற்கள் பிறந்தன. பொருட்களின் உற்பத்தி பெருகியதால், பெரிய தொழிற்சாலைகளின் உடமையாளர்கள் செல்வந்தர்களாயினர். அதன் விளைவாக முதலாளித்துவம் தோன்றியது. பெரும் தொழிற்சாலைகள் வணிக முதலீடுகளைப் பெருக்கியதே முதலாளித்துவத்தின் தாக்கமாகும்
சமத்துவம்
தொழிலாளர் வர்க்கத்தினர் முதலாளி வர்க்கத்தினரை எதிர்த்து முழக்கங்களை எழுப்பினார்கள். தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளையும், மனித உரிமைகளையும் உள்ளடக்கிய சமத்துவ 'பொதுவுடைமைத்' தத்துவங்கள் செல்வாக்குப் பெற்றன. சமத்துவத்தின் நோக்கம் செல்வம் ஒரு சிலரிடம் மட்டும் சென்றடையாமல் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு மறைய வேண்டும். எவரும் பட்டினியால் வாடாமல் அனைவரின் தேவைகளும் நிறைவு செய்யப்பட வேண்டும் என்பதாகும். நடுத்தர வர்க்கத்தினருக்கும் தொழிலாளர் வர்க்கத்தினருக்கும் இடையே உள்ள வேறுபாட்டைத் தொழில்மயமாதல் கூர்மைப்படுத்தியது. இந்தப் பாகுபாட்டைப் போக்க முதன் முதலாக இராபர்ட் ஓவன் என்பவர் சமத்துவம் என்ற சொல்லை உருவாக்கினார்.
மார்க்சிசம்
மார்க்க்சிசம் என்பது உழைப்பினால் ஏற்படும் இலாபத்தில் உழைப்பாளர்களுக்கும் உரிய பங்கு வேண்டும் என்பதாகும். ஜெர்மனி நாட்டு சமத்துவவாதி 'கார்ல் மார்க்ஸ்' மார்க்க்சிசம் என்ற கோட்பாட்டை வெளியிட்டார். இவரது கோட்பாடு உற்பத்திக்கும், உழைக்கும் உடல்சக்திக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்று வலியுறுத்தியது. இத்தகைய சோசலிச பொதுவுடைமைத் தத்துவங்கள் தோன்றுவதற்கு அடித்தளமாகத் தொழிற்புரட்சியும் மார்க்சிய தத்துவங்களும் காரணமாக இருந்தன.
தடையில்லா வாணிபக் கொள்கை
தொழிற்புரட்சியின் விளைவாகவும் முதலாளிகளின் சந்தை நோக்கங்களுக்காகவும் தடையிலா வாணிபக் கொள்கை தோன்றியது. இக்கொள்கையின் படி வியாபாரம் மற்றும் ஆலைகளின் நடவடிக்கைகளில் தலையிட அரசுக்கு உரிமையில்லையென வியாபாரிகள் மற்றும் முதலாளிகள் கோரினார்கள்.
தொழிற்புரட்சியின் நன்மை தீமைகள்
தொழிற்புரட்சியினால் மனித இனத்திற்கு நன்மை விளைந்ததா தீமை விளைந்ததா என்னும் கேள்வி இன்றும் விவாதிக்கப்படுகிறது. ஒருசிலர் தொழிற்புரட்சியினால் ஏற்பட்ட நன்மைகளை மட்டுமே வலியுறுத்தினாலும், அப்புரட்சி சில தீய விளைவுகளுக்கு அடித்தளம் இட்டது என்பதையும் மறுக்கமுடியாது.
தொழிற்புரட்சியினால் மனிதன் இயந்திரங்களுக்கு அடிமையானான். ஆலைத் தொழிலாளிகள் இரக்கமின்றி முதலாளிகளால் சுரண்டப்பட்டனர். ஆலைகளில் வேலைநேரம் பதினான்கு முதல் பதினாறு மணி நேரம் வேறுபட்டிருந்தது. பெண்களும் சிறுவர்களும் குறைவான ஊதியம் மற்றும் பாதுகாப்பில்லாத அபாயகரமான இயந்திரங்களுக்கு அருகேயும் பணிபுரிய வேண்டியிருந்தது. வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு தீவிர பிரச்சினையாக ஆனது. மக்கள் செயற்கை வாழ்க்கை வாழத்துவங்கினர்.
தொழிற்புரட்சியானது நன்மை தீமை இரண்டையும் உள்ளடக்கியது. ஆனால் அதன் விளைவுகள் நிறைவேற நீண்டகாலம் ஆனது. டேவியின் கூற்றுப்படி தொழில்புரட்சி ஒரு வரமல்ல் தொழிற்சாலைகளின் அமைப்பும் செயல்பாடும் பல தொழிலாளர்களின் மகிழ்ச்சியையும் மரியாதையையும் முடிவுக்குக் கொண்டு வந்தது. மனித குலத்திற்கு நல்ல வசதி வாய்ப்புகளை வழங்கிய குடிசைத் தொழில்களை முடிவுக்குக் கொண்டுவந்தது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது மனித வாழ்க்கைத் தரம் மேம்பட்டது என்பதை மறுக்க இயலாது. ஆனால், தொழிற்புரட்சியின் விளைவாகச் சுற்றுச்சூழல் மாசுபடல், மனித உழைப்பு சுறண்டப்படல், ஆகியவை விரிவடைந்தன. சுருக்கமாகக் கூறின், இன்றைய நவீன உலகத்தைத் தொழிற்புரட்சியே உருவாக்கியது எனலாம்.
No comments:
Post a Comment